)
கல்வி மனிதர்களுக்கு கண் போன்றது. வாழ்வில் எந்த விதமான இடர் நேரிட்டாலும், அதை அறிவாற்றலின் துணைகொண்டு சரி செய்து விடலாம். சிலருக்கு இயற்கையாகவே கல்வியறிவு அதிகமாக இருக்கும். சிலர் இதை பெற அதிகம் முயற்சிக்க வேண்டிவரும். ஆனால், கல்வி எவ்வளவு முக்கியமோ, வாழ்வில் எதை அடையவேண்டுமானாலும் முயற்சியும் அதே அளவு முக்கியம்.
அனைத்திற்கும் கோயில்கள் உள்ள தமிழகம்
தமிழ்நாடு கோயில்களின் மையப்புள்ளி. ஆன்மீகமும், அறிவியலும், பொது அறிவும், சமத்துவமும் கலந்திருக்கும் அதிசயம் தமிழகம். கல்யாணம் ஆக, குழந்தை பிறக்க, கடன் தொல்லை தீர, அச்சம் நீங்க, ஆபத்து விலக என நமது தமிழகத்தில் அனைத்திற்கும் கோயில்கள் உள்ளன. அப்படி இருக்க கல்விக்கு மட்டும் கோயில் இல்லாமல் இருக்குமா? அறிவியல், கணிதம், இலக்கியம், வரலாறு என அனைத்திற்கும் இங்கு கோயில்கள் உள்ளன. அவற்றில் கணிதத்தில் வெற்றி பெற மாணவர்கள் செல்ல வேண்டிய கோயில் பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றியும் இந்த பதிவில் காணலாம்.
கணிதம் உங்களுக்கு எட்டா கனியா?
- ஒவ்வருக்கு ஒவ்வொன்றில் நாட்டம் இருக்கும். சிலருக்கு தமிழ் பிடிக்கும் என்றால், சிலர் அறிவியலில் வெளுத்துக்கட்டுவார்கள்.
- சிலர் வரலாற்றில் வல்லவர்கள், சிலர் இலக்கியத்தில் ஜித்தர்களாக இருப்பார்கள்.
- ஆனால் பெரும்பாலும் பலரது கனவுகளில் வந்து பாடாய் படுத்தும் ஒரு சப்ஜெக்ட் உண்டென்றால், அது கணிதம்தான்.
- அன்று முதல் இன்று வரை பல மாணவர்கள் கண்டு அஞ்சும் ஒரே பாடம் கணக்கு.
- சிலர் கணக்கு பாடத்தில் எளிதாக அதிக மதிப்பெண்களைப் பெற்று விடுகிறார்கள்.
- ஆனால் பல மாணவர்களுக்கு இன்னும் கணக்கு பாடம் என்பது கடினமான ஒரு விஷயமாகத் தான் உள்ளது.
கணக்கு பாடத்தில் வெற்றி பெற நாமக்கலுக்கு வாங்க
என்ன முயற்சித்தாலும் கணக்கு பாடத்தில் போதுமான மதிப்பெண்களை பெற முடியாத மாணவர்கள் ஒரு முறை நாமக்கல்லில் உள்ள ஸ்ரீ நாமகிரித்தாயார் சமேத ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயிலுக்கு சென்று வருவது நல்லது. இங்கு வீற்றிருக்கும் நாமகிரித் தாயார் உங்களுக்கு அருள் புரிவார். மாணவர்களுக்கு கணித பாடத்தில் உள்ள பிரச்சனைகளையும் கடினங்களையும் நாமகிரித் தாயார் தீர்த்து வைக்கிறார் என்பது ஐதீகம். இந்த கோயிலுக்கு சென்று தாயாரின் சன்னிதி முன்னால் நெய் விளக்கேற்றி வேண்டினால், மாணவர்கள் கண்டிப்பாகக் கணக்கில் மிக நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள் என்பது உறுதி.
கணக்கு பாடத்தில் வெற்றி பெற உதவும் மந்திரம்
கணக்கு பாடத்தை நன்றாக புரிந்து கொண்டு பல முறை பயிற்சி எடுப்பதுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தையும் சொன்னால், உங்கள் மதிப்பெண்கள் கணக்கு பாடத்தில் அதிகரிப்பதைக் கண்கூடாகக் காண்பீர்கள்.
“ஸ்ரீவித்யா மந்த்ர ரத்ன ப்ரகடித விபவா
ஸ்ரீசுபலா பூர்ண காமா சர்வேஸி ப்ரார்திதா
சகல சுரதநுதா சர்வே சாம்ராஜ்யதாத்ரி
லக்ஷ்மீ ஸ்ரீவேத கர்பா விதுரது மதீயா
விஷ்வ கல்யாண பூமா
விஷ்வ க்ஷேமாத்ம யோகா
விமல குணவதி விஷ்ணு வக்ஷஸ்தலஸ்யா”
இது நாமக்கல்லில் உள்ள ஸ்ரீ நாமகிரித்தாயார் சமேத ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயிலில் வீற்றிருக்கும் நாமகிரித் தாயாருக்கான துதியாகும்.
நம் அறிவைத் தாண்டி, நம் சிந்திக்கும் திறனைத் தாண்டி இவ்வுலகில் இருக்கும் சில விஷயங்களில் நம்பிக்கையும் பக்தியும் அடங்கும். கணிதத்திற்கும் பக்திக்கும் என்ன தொடர்பு உள்ளது என்ற கேள்வி வரலாம். அதற்கான வரலாற்று சான்றை இங்கே காணலாம்.
உலகின் மிகப் பெரிய கணித மேதைகளில் ஒருவரான ராமானுஜனின் வாழ்க்கையை கணிதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் இடையிலான தொடர்பைக் குறிக்கும் காலப்பதிவாகக் கொள்ளலாம். எளிய குமாஸ்தா பணியில், எளிய வாழ்க்கை வாழ்ந்துவந்த அவருக்கு கணிதத்தின் மீது தணியாத காதல் இருந்தது. முறையான பயிற்சி எடுத்துக்கொள்ளாமலேயே அவர் பல கணித சூத்திரங்களையும் தியரம்களையும் எழுதி நிரூபித்தார். அவற்றை, அங்கீகாரத்திற்காக இங்கிலாந்தில் உள்ள ஹார்வர்ட் ட்ரினிடி கல்லூரியின் பேராசிரியரான G.H. Hardy-க்கு அனுப்பினார். ஹார்டி மட்டுமல்லாமல் உலகமே ராமானுஜத்தின் கணித கண்டுபிடிப்புகளையும் சிக்கலான பல சூத்திரங்களையும் பார்த்து வியந்தது.
கனவில் வந்த நாமகிரித் தாயார்
தனது கணித புலமைக்கு ஒரு ஆன்மீக தொடர்பு இருப்பதாக ராமானுஜன் கூறினார். தன் கனவில் நாமக்கல்லில் உள்ள நாமகிரித் தாயார் வந்து இவை அனைத்தையும் தனக்கு எழுதிக் காட்டி புரிய வைத்ததாகவும், அவற்றின் அடிப்படையிலேயே தன்னால் இப்படிப்பட்ட சிக்கலான பல கணித கோட்பாடுகளை இயற்றவும் கண்டுபிடிக்கவும் முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார், தன் கணித அறிவாற்றல் அனைத்துக்கும் அவர் நாமகிரித்தாயாரையே அடிப்படையாக்கினார்.
சாதாரண ராமானுஜனை கணித மேதையாக்கிய நாமகிரித் தாயார் அனைவருக்கும் தன் ஆசிகளை வழங்க காத்துக்கொண்டிருக்கிறார். ஆகையால் தங்கள் குழந்தைக்கு கணக்கு பாடம் வரவில்லை என கவலைப்படும் பெற்றோர் கண்டிப்பாக குழந்தைகளுடன் இந்த கோயிலுக்கு ஒரு முறை சென்று வரலாம்.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
சாலை வழி: நாமக்கல்லில் இக்கோயில் அமைந்துள்ளது. சாலை வழியாக வந்தால், சேலத்திலிருந்து 50 கி.மீ மற்றும் கரூரிலிருந்து 45 கி.மீ தொலைவில் இந்த கோவில் உள்ளது.
ரயில் வழி: ரயிலில் வந்தால், சேலம்-கரூர் ரயில்வே தடத்தில் அமைந்துள்ள நாமக்கல் ரயில் நிலையத்திற்கு வந்து அங்கிருந்து கோயிலை அடையலாம்.
வான்வழி: சேலம் விமான நிலையம் இக்கோயிலுக்கு அருகில் உள்ள விமான நிலையமாகும். கோயில் இங்கிருந்து 60 கி.மீ தொலைவில் உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ