Nirmala Sitharaman vs Kanimozhi : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது தமிழ்நாடு அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்த நிலையில், அதற்கு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் காரசாரமான பதிலடியை கொடுத்திருக்கிறார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி. தமிழ்நாட்டு மக்களை ஏளனம் செய்யும் உங்களுக்கு விரைவில் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் பதிலளித்துள்ளார்.
நிர்மலா சீதாராமன் நேற்றைய நிகழ்ச்சியில் பேசும்போது, தேசிய கல்வி கொள்கை திட்டத்தில் எந்த இடத்திலும் இந்தி கற்க வேண்டும் என்று இல்லை. தாய்வழி கல்வியைத்தான் அது ஊக்குவிக்கிறது. இந்தியா கூட்டணி உடைந்து விட்டது. உத்தரபிரதேசம், மேற்குவங்கம், பீகார் என பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் தலைமையை ஏற்கவில்லை. பி.எம்.ஸ்ரீ திட்டத்தை தமிழகம் மட்டும்தான் ஏற்றுக்கொள்ள வில்லை. தனியார் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் வசதிகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும்.
தமிழ்நாட்டுக்கு நிதி கொடுப்பதில்லை என சொல்கிறார்கள். நாங்க அதிக வரி கொடுக்கிறோம், ஆனால் எங்களுக்கு மத்திய அரசு ஒன்னுமே கொடுப்பதில்லை என சொல்கிறார்கள். இந்த கணக்கு எல்லாம் இவங்க எதை வைத்து சொல்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. எங்களுக்கு அதிக பணம் கொடுங்கணு கேட்கும் வாதமே தவறு. இங்க நிறையேபேர் கோயம்புத்தூர் காரங்க இருக்காங்க.. சென்னைக்காரங்க நீங்க எல்லாம் இருக்கீங்க.. கோயம்புத்தூரும் சென்னையும்தான் தமிழ்நாட்டுக்கு வரி கொடுக்குது.. அரியலூரில் இருக்கிறவங்களும் கோவில்பட்டியில் இருக்கிறவங்களும் எங்களுக்கு என்ன செலவு பண்றீங்கன்னு கேட்பாங்க.. இதற்கு கோயம்புத்தூர்காரங்களும் சென்னைகாரங்களும் நாங்கதான் வரி கொடுக்கிறோம்.. எங்களுக்குத்தான் திருப்பி கொடுக்கனும்னு.. கோவில்பட்டி எக்கேடுகெட்டா எனக்கு என்ன? நீங்க செலவு பண்ணாதீங்கன்னு சொல்லுவாங்க.. பாரத நாட்டில் அப்படியான பாலிசி இல்லை.. அதனால இந்த மாதிரி குதர்க்கமாக பேசக் கூடியவங்களுக்கு நான் சொல்றேன். இதெல்லாம் வெச்சுதான் தமிழ்நாட்டுக்கு என்ன வந்துகிட்டு இருக்குன்னு சொல்கிறோம்.
கடந்த பத்தாண்டுகளில், தமிழ்நாட்டில்:
- ஜன் தன் திட்டம்: 1.7 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. (58% பெண்கள்)
- பிரதமரின் வீட்டு வசதித் திட்டம்: 12 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன
- தூய்மை பாரத திட்டம்: 59 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
- ஜல் ஜீவன் இயக்கம்: 89 லட்சம் கிராமப்புற வீடுகளுக்கு குழாய் வழி குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
- பிரதமரின் உஜ்வாலா திட்டம்: 41 லட்சத்திற்கும் மேற்பட்ட சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன
- ஆயுஷ்மான் பாரத் திட்டம்: ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் என்ற விகிதத்தில் 79 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சுகாதார காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள் உள்கட்டமைப்பு பணிகள்:
- 4,100 கி.மீ.க்கும் அதிகமான தேசிய நெடுஞ்சாலைகள் கட்டப்பட்டுள்ளன.
- 2014 முதல் 1,303 கி.மீ.க்கும் அதிகமான புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சுமார் 2,242 கி.மீ. ரயில் வலையமைப்பு மின்மயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 94% ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.
- 54 கி.மீ.க்கும் அதிகமான தொலைவுக்கு சென்னை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகின்றன.
- உதான் திட்டத்தின் கீழ், சேலம் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது, அதே நேரத்தில் நெய்வேலி மற்றும் வேலூரில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
- கூடுதலாக, மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மாநிலங்களுக்கு மூலதன செலவினத்திற்கான சிறப்பு உதவித் திட்டத்தின் மூலம் மூலதனச் செலவில் மாநில அரசுகளின் முதலீட்டை ஆதரித்துள்ளது. இதில் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு 50 ஆண்டு வட்டி இல்லாத கடன்கள் வழங்கப்படுகின்றன.
- இந்த நிதியுதவி, நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் இல்லாமலேயே வழங்கப்பட்டுள்ளன.
- 2020-21 மற்றும் 2023-24 க்கு கலக்கட்டத்தில் தமிழ்நாட்டிற்கு ரூ.14,900 கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் செய்வதற்கு இன்னும் எத்தனையோ இருக்கிறது என்றாலும் மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு என நம்மை திசை திருப்புகிற முயற்சிகள் நிறைய நடைபெறுகின்றன" என்று பேசினார். இதற்கு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்திருக்கும் கனிமொழி, "நீங்கள் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் ஏளனம் செய்வதைத்தான் இத்தனை காலமாய் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். வரலாற்றில் தமிழ் மக்களை பழித்தவர்களின் நிலை என்ன என்பதை அம்மையார் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழுக்காகவும், எங்களது உரிமைகளுக்காகவும் போராடுவது உங்களுக்கு ஏளனத்திற்கு உரியதாக தோன்றுகிறதா?. தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் மறுபடியும் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்!" என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | தொகுதி மறுசீரமைப்பு: முதல் JAC கூட்டத்தில் நிறைவேறிய முக்கிய தீர்மானங்கள் என்ன?
மேலும் படிக்க | அண்ணாமலைக்கு கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கொடுத்த காரசாரமான பதிலடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ