ADMK - BJP Alliance: அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று தான் அமித்ஷா பேசியிருந்தார் என்றும் அரசு அதிகாரத்தில் பங்கு என்று அமித் ஷா கூறவில்லையே என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் பேசி உள்ளார்.

ADMK - BJP Alliance Latest News Updates: இன்றைய சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில், திமுக அமைச்சர் மூவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதுகுறித்து பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை எனக்கூறி எதிர்க்கட்சியான அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
Edappadi Palanisamy News: 3 அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்
பேச அனுமதி மறுத்த சபாநாயகரை கண்டிக்கிறோம் என பேரவை நுழைவு வாயிலில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அனைத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் அதிமுகவினர் கோஷமிட்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "இன்றைய தினம் சட்டமன்றத்தில் சட்டமன்ற பேரவை விதி 72இன் கீழ் அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் அதிமுக சார்பாக கொண்டு வந்தோம். இதுகுறித்து அவையில் பேசுவதற்கு சட்டப்பேரவை தலைவர் மறுத்துவிட்டார், அதை கண்டித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம்.
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, அவரது மகன் மற்றும் சகோதரர் ஆகியோருக்கு சொந்தமான சென்னை, கோவை, திருச்சி இடங்களில் ஆகிய இடங்களிலும் இல்லங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்திய பின்னர் மேல் விசாரணை நடத்தி, செய்திகுறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வனத்துறை அமைச்சர் பொன்முடி பதவி ஏற்கும்போது அளித்த உறுதி மொழியை மீறி இந்து மதத்தைப் பற்றி பெண்களைப் பற்றியும் ஒரு நிகழ்ச்சியில் பேசியிருப்பது அவர் பதவி ஏற்கும் போது ஏற்ற உறுதி மொழியை அவமதிப்பதாகும்.
Edappadi Palanisamy News: அரசு விளக்கம் கொடுக்க வேண்டும்
டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை செய்தி குறிப்பு வெளியிட்டிருக்கிறது. எனவே முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இருக்கக்கூடிய அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றிட கடிதம் கொடுத்தும் அதை பேரவை தலைவர் பேச மறுத்திருக்கிறார்.
கடந்த காலங்களில் அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுக்கும்போது அதை சட்டப்பேரவை தலைவர் அனுமதித்து விவாதம் செய்யப்பட்டு இருக்கிறது. பல்வேறு துறைகளில் சோதனை அடிப்படையில் முறைகேடு நடந்து இருப்பதாக செய்தி வெளியிடுபடுகிறது. ஒரு அமைச்சர் இந்து மதத்தை பெண்களை இழிவுபடுத்தும் விதமாகவும் பேசுகிறார். இதையெல்லாம் விவாதிக்க வேண்டும் என அவையில் விதியின் 72இன் கீழ் கொண்டு வந்தோம்.
அதிமுக இருக்கிறபோது திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது எத்தனை முறை ஜீரோ ஹவரில் பேசுவதற்கு அனுமதி கொடுத்திருக்கிறோம். அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருக்கிறது. இதற்கெல்லாம் இந்த அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும். இதை தெளிவுபடுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை" என்றார்.
Edappadi Palanisamy News: அதிமுக - பாஜக கூட்டணி குறித்து...
அதிமுக பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி,"கட்சி வருகின்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும். எதிரிகளை வீழ்த்த வேண்டும். ஆளுகிற திமுகவை வீழ்த்த வேண்டும், திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று கருத்துள்ள கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைவதன் முயற்சிதான் பாஜகவுடன் இணைந்திருக்கிறோம். எங்களது கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் விரைவில் சேர இருக்கிறது.
அதிமுக பிரதான கட்சி, எங்களுடைய கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் அடிப்படையில் கூட்டணி அமைத்துக் கொண்டோம். நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். இதில் யாருக்கு என்ன இருக்கிறது? கூட்டணி அரசு அமையும் என்று இதுவரை யாருமே கூறவில்லையே. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி, மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமி என்றுதான் அன்று அமித் ஷா கூறியிருந்தார். அதிமுக - பாஜக கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்கும் என்றுதான் தெரிவிக்கப்பட்டது. அரசு அதிகாரத்தில் பங்கு என்று அமித் ஷா கூறவில்லை" என்றார்.
Edappadi Palanisamy News: மாநில சுயாட்சி தீர்மானம் குறித்து...
முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று (ஏப். 15) கொண்டுவந்த மாநில சுயாட்சி தீர்மானம் குறித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி,"16 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது திமுக. அப்போது மாநில சுயாட்சி சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றி இருந்தால் இந்த பிரச்சனை இருக்காது. அடுத்த ஆண்டு தேர்தல் வர இருக்கிறது. தேர்தல் வருவதற்கு இன்றைக்கே நாடகத்தை திமுக ஆரம்பித்துவிட்டது.
திமுக மீது மக்கள் மிகப்பெரிய கொந்தளிப்பில் வெறுப்பில் இருக்கிறார்கள். திமுகவை அகற்ற மக்கள் எதிர்கொண்டு இருக்கிறார்கள். அதை மடைமாற்ற திசை திருப்ப மாநில சுயாட்சி என்ற நாடகத்தை திமுக அரங்கேற்றி வருகிறது. ரகுபதியை நாட்டிற்கு அடையாளம் காட்டியது அதிமுக. அதையெல்லாம் ரகுபதி மறந்து தன்னுடைய சுயலாபத்திற்காக அடிமையாக போய்விட்டார். 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது இந்திய கூட்டணி அமைத்தார்கள். ஏன் அப்போது மாநில சுயாட்சி பற்றி யாரும் பேசவில்லை.
Edappadi Palanisamy News: நெசவாளர்களுக்கு கூலியை உயர்த்த வேண்டும்
கோவை, திருப்பூர் மாவட்டம் விசைத்தறி தொழில் நிறைந்த பகுதி. விசைத்தறி நிறைந்த பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக விசைத்தறி தொழில் செய்பவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். விசைத்தறி நெசவாளர்கள் கூலி உயர்வு கேட்டு தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசு நெசவாளர்களை அழைத்து பேசி அவர்களது கோரிக்கை நிறைவேற்றி தர வேண்டும். பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம். விசைத்தறி உரிமையாளர்கள் கேட்கின்ற கூலியை உயர்த்தி வழங்கித் தர வேண்டும்" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ