)
தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்து திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. அதிமுகவின் மூத்த தலைவரும், கொங்கு மண்டலத்தின் முக்கிய முகமுமான கே.ஏ. செங்கோட்டையன், விரைவில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்வு வரும் நவம்பர் 27-ம் தேதி நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு மிக்க தலைவராக வலம் வருபவர் கே.ஏ. செங்கோட்டையன். எம்.ஜி.ஆர் காலம் தொட்டே கட்சியில் பயணித்து வரும் இவர், ஜெயலலிதா அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.

ஆனால், சமீப காலமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், இவருக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. குறிப்பாக, "பிரிந்து சென்றவர்கள் அனைவரும் மீண்டும் இணைய வேண்டும்" என்று செங்கோட்டையன் வெளிப்படையாக பேசியது எடப்பாடி தரப்பை அதிருப்தியில் ஆழ்த்தியது. இதனை தொடர்ந்து, மதுரையில் நடைபெற்ற தேவர் குருபூஜை விழாவில், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் செங்கோட்டையன் ஒரே மேடையில் தோன்றியது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் ஆனது. இதன் விளைவாக, கழக கட்டுப்பாட்டை மீறியதாக கூறி செங்கோட்டையனை அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கினார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், செங்கோட்டையனின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்தது. இந்த சூழலில் தான், அவர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. செங்கோட்டையனின் உறவினரும், முன்னாள் டிஜிபி-யுமான எம்.ரவி, சமீபத்தில் விஜய்யை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் தொடர்ச்சியாகவே செங்கோட்டையனின் வருகை உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. வரும் நவம்பர் 27-ம் தேதி, அவர் அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தப் பொறுத்த வரை, இது ஒரு ஜாக்பாட் என்றே சொல்லலாம். வரும் 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்துக்காய் நகர்த்தி வரும் விஜய்க்கு, கொங்கு மண்டலத்தில் வலுவான ஒரு முகம் தேவைப்பட்டது. செங்கோட்டையன் போன்ற அனுபவம் வாய்ந்த, அடிமட்ட தொண்டர்கள் வரை செல்வாக்கு மிக்க ஒரு தலைவர் இணைவது, அப்பகுதியில் தவெகவின் வேரூன்றலுக்கு பெரும் உதவியாக இருக்கும். மறுபுறம், இது எடப்பாடி பழனிசாமிக்கு கடும் நெருக்கடியை உருவாக்கலாம். கோபிச்செட்டிப்பாளையம் மற்றும் ஈரோடு பகுதிகளில் செங்கோட்டையனுக்கு தனிப்பட்ட வாக்கு வங்கி உள்ளது. அவர் விஜய்யுடன் இணைந்தால், அதிமுகவின் பாரம்பரிய வாக்குகளில் கணிசமானவை தவெக பக்கம் திரும்ப வாய்ப்புள்ளது.
செங்கோட்டையனை தொடர்ந்து, அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் இன்னும் சில முக்கிய புள்ளிகளும், முன்னாள் எம்.எல்.ஏ-க்களும் விஜய்யின் பக்கம் தாவ தயாராக இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. அப்படி நடக்கும் பட்சத்தில், வரும் சட்டமன்ற தேர்தல் களம் முன்னெப்போதையும் விட அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. நவம்பர் 27-ம் தேதி உண்மையில் என்ன நடக்க போகிறது? செங்கோட்டையன் விஜய்யின் கரத்தைப் பற்றுவாரா? என்பதை தமிழகமே உற்று நோக்கி காத்திருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ