)
Seeman Latest News Updates: பா. சிவந்தி ஆதித்தனாரின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அவருடைய திருவுருவப்படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். அப்போது பா சிவந்தி ஆதித்தனார் திருகுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கலைமாமணி விருது பெற்றவர்கள் அனைவருமே திறமையானவர்கள், இந்த விருதிற்கு பொருத்தமானவர்கள். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்" என்றார். மேலும், நடிகை விஜயலட்சுமியிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறித்தான கேள்விக்கு அவர், "நீங்களா ஒரு தீர்ப்பை எழுதக்கூடாது, வழக்கு வந்த பிறகு பேசுவோம். முன்னாடி நிற்பவன் யார் என்று பார்த்து பேச வேண்டும். புறணி பேசுவது, கேவலம் பேசுவது, தேவையில்லாத சமூக குப்பைகளை கிளரக்கூடாது. ஆக்கபூர்வமாக கேள்வி கேட்க வேண்டும். இதுபோன்ற கேள்வி கேட்பதற்கு முதலில் வெட்கபட வேண்டும்" என்றார்.
தொடர்ந்து, ஜிஎஸ்டி குறைப்பு எந்தளவிற்கு மக்களுக்கு பயன்பெறும் என்ற கேள்விக்கு, "அப்போது ஜிஎஸ்டி வரியை விதித்தது யார்?, அதன் பின்பு வரியை குறைத்தது யார்?. ஏன் குறைந்தார்கள் என்றால் இந்த வரி மக்களுக்கு சுமையாக இருந்ததாம். சுமையாக இருக்கும் என்று கூட தெரியாமல் வரியை விதித்த நீங்கள் என்ன ஆட்சியாளர்?, என்ன தலைமை?, இதில் பயன் இருக்குமா..? வளர்ச்சிக்கு உதவுமா இல்லை வீழ்ச்சிக்கு தள்ளிவிடுமா என்று கூட தெரியாமல் அதிகாரத்திற்கு எப்படி வந்தீர்கள்?.
மக்களுக்கு சுமையாக இருந்தோம் என தோல்வியை ஒப்புக்கொண்டு பொது மன்னிப்பு கேட்கவேண்டும். இதேபோல் தான் பணம் செல்லாது என்று சொன்னார்கள், அதனால் நடந்த ஒரே ஒரு நம்மை யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம்? இதனால் ஊழல் ஒழியும் என்றார்கள் ஒழிந்துவிட்டதா? பின்பு ஏன் வருமான வரித்துறை, அமலாகத்துறை ரெய்டு எல்லாம் எதற்கு வருகிறது?
தங்க பிஸ்கட்டுக்கு மூன்று சதவீத வரி, குழந்தைகள் சாப்பிடும் பிஸ்கட்டுக்கு 18 விகித வரி விதிப்பது ஆட்சியாளர்களை என்னவென்று சொல்வது. பார்வையற்றவர்கள் எழுதிப் படிக்கும் தாளுக்கு வரி, மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் சக்கர நாற்காலிக்கு வரி, கேட்க்கும் செவிதிறன் கருவிக்கு வரி இதெல்லாம் ஒரு ஆட்சியாளர்கள் செய்யக்கூடிய செயலா? இந்த நாட்டில் கல்வி, மருத்துவம் தான் மிகப்பெரிய வியாபாரமாக உள்ளது, அதற்கெல்லாம் என்ன வரி உள்ளது. எல்லா முதலாளிகளும் அறக்கட்டளையில் என்ற பெயரில் ஓடி ஒளிந்து கொள்கிறார்கள்" என்றார்.
2026 தேர்தலுக்கான பணிகளை அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்டன. நாம் தமிழர் கட்சியின் நிலை என்ன என்ற கேள்விக்கு, "மற்றவர்களுக்கு இது ஒரு தேர்தல். எங்களுக்கு அப்படி இல்லை. இது ஒரு தேசிய இனத்தின் விடுதலை. மற்றவர்களுக்கு மலை வெறும் கல், மணல். எங்களுக்கு என் தாயின் மார்பு. மற்றவர்களுக்கு மரம், எனக்கு உயிர். மரத்திடம் ஓட்டா இருக்கிறது, சீமான் மரத்திடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள். மரத்திடம் ஓட்டு இல்லை, என் உயிர் இருக்கிறது" என பதில் அளித்தார்.
தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினரை தவெகவினர் அதிகமாக விமர்சனம் செய்கிறார்கள் எதனால்? என்ற கேள்விக்கு, "அதையெல்லாம் ரசித்து சிரித்து கொள்ள வேண்டும். விமர்சனத்தில் தாங்க முடியாமல் இந்த இடத்தில் வந்து நிற்கிறோம். சிறு பிள்ளைகள் முதலில் பக்குவப்பட வேண்டும். கருத்தை கருத்தால் மோத தெரியவில்லை.
பாரதிய ஜனதா என் கொள்கை எதிரி, திமுக என் அரசியல் எதிரி என்று விஜய் பேசுகிறார். அப்போது திமுகவின் கொள்கையில் உடன்பாடா? பாரதிய ஜனதாவின் அரசியல் செயல்பாடுகளில் உங்களுக்கு உடன்பாடா?
பாஜக கொள்கை எதிரி என்றால் காங்கிரஸ் உங்கள் கொள்கை நண்பனா? என்ற கேள்வி வருகிறது. பாஜக கொள்கைக்கும்,காங்கிரஸ் கொள்கைக்கும் ஒரே ஒரு வேறுபாடு காட்டுங்கள். பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் ஒரே கொள்கைதான். கட்சியின் பெயர்தான் வேறு. கொடியில் வண்ணமாறும், கொள்கையில் எண்ணமாறாது. அதே தான் அதிமுகவுக்கும், திமுகவுக்கும்.
பிரசாரத்தில் பேசும்போது சாதி, மொழி, இனம் என பிரிக்கிறார்கள் என்று விஜய் பேசுகிறார். மொழி, இனம் என்று பேசும்போதே அடிப்படை அரசியல் தெரியவில்லை என்று வந்துவிடுகிறது. என் குறுக்கே தாவி ஓடிக்கொண்டு இருந்தால் அண்ணனாக கேள்வி கேட்பேன், திமுகவை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறார், அப்போது முதலில் காங்கிரஸ் கட்சியை தான் ஒழிக்க வேண்டும். குடும்ப அரசியல், வாரிசு அரசியல், மன்னராட்சியை தொடர்ந்து செய்து வருவது காங்கிரஸ்காரர்கள் தான். பின்பு ஏன் அவர்களை பற்றி பேசவில்லை" என்றார் காட்டமாக...
விஜய் எதிர்த்து வலுவான கருத்துக்களை முன்வைக்கின்றீர்கள் வரும் தேர்தலில் விஜய் எதிர்த்து போட்டியிடுவீர்களா?, "சிறுபிள்ளைத்தனமாக பேசக்கூடாது. அவரை எதிர்ப்பதற்காகவா வேலை செய்து வருகிறேன்?. அண்ணன் தம்பி இடையே சண்டையை இழுத்து விடாதீர்கள். எங்களுக்குள் கருத்து முரண் இருக்கிறது, அதை சரி செய்துகொள்ளுங்கள் என்று தான் சொல்கிறோம்.
அவர் மேல் இருக்கும் அக்கறையில் அவருடைய கருத்துக்களை எதிர்த்து வருகிறேன். 'அடுத்தவன் பேச்சை கேட்காதே, அண்ணன் பேச்சை ஒருமுறை கேள்! உனக்கு எழுதி கொடுப்பார்கள் தப்பு தப்பாக எழுதிக் கொடுக்கிறார்கள்' என்று சொல்கிறேன், அது அவருக்கு புரியவில்லை" என்றார்.
தாய் பாசம் உள்ள தலைவனை இழந்து தவிக்கும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று நாகையில் விஜய் பேசிய கருத்திற்கு பதிலளித்த அவர், "கொடுக்கட்டும், கொடுக்கட்டும்... என் தம்பி விஜய் திடீரென்று மீனவர்கள், ஈழத்தமிழர்கள் குறித்து பேசுவது மோடி தமிழில் திருக்குறள் சொல்வதுபோல உள்ளது. ஆத்மார்த்தமாக ஒரு வழி இருந்திருந்தால் அது முதல் மாநாட்டிலேயே வந்திருக்கும். நாகையில் விஜய் பேசும் பொழுது இந்திய மீனவர்கள் என்று பேசவில்லை. மீனவர்களுக்காக 6 மாதம் சிறையில் இருந்தவன் நான்" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ