NTK Seeman Latest News Updates: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (ஜூன் 24) மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "யாருமே பேசாத மொழிக்கு (சமஸ்கிருதம்) நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள். யாரால் அதிக வருவாய் வந்து கொண்டிருக்கிறது. நம்மை என்ன செய்தாலும் மானம் கெட்டுப் போய் அவர்களுக்கே திருப்பி திருப்பி வாக்களிப்பதால் அவர்கள் நம்மை போட்டு மிதிக்கிறார்கள்.
சமஸ்கிருதம் எந்த மாநிலத்திலும் பேசப்படவில்லை. கோவிலில் அர்ச்சனை செய்பவர்கள் தான் அதை பயன்படுத்துகிறார்கள்... அதற்காக இவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டிய அவசியம் என்ன?" என கேள்வி எழுப்பினார்.
NTK Seeman: முருக பக்தர்கள் மாநாடு
தொடர்ந்து அவர் மதுரையில் இந்து முன்னணி அமைப்பு முருக பக்தர்கள் மாநாடு நடத்தியது தொடர்பான கேள்விக்கு, "அவர்கள் முருகனைத் தொட்டதே அரசியல் தான். இவ்வளவு காலம் செய்யாமல் தேர்தல் வருவதால் மாநாடு நடத்துகிறார்கள். இதே போல ஆண்டுதோறும் நடத்துவார்களா...? அடுத்தாண்டு முருக பக்தர்கள் மாநாடு போடட்டும், அது அரசியலா இல்லையா என்பதை பார்ப்போம்..." என பதிலளித்தார்.
NTK Seeman: ஸ்டாலின் கடிதம் - சீமான் பதில்
தொடர்ந்து, மாம்பழ விவசாயிகளின் நலனைப் பாதுகாத்திட நிரந்தர தீர்வு காணும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று எழுதியிருந்த கடிதம் குறித்து சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "வேளாண் குடி மக்களே... இப்போது இந்த ஆட்சியாளர்கள் இதை கேட்டிருக்கிறார்கள்... வேளாண் குடி மக்கள் இதை உணர வேண்டும். முதல்வர் எதற்கு கடிதம் எழுதுகிறார்...? நேரில் சென்று பார்ப்பாரே... நேரில் சென்று முறையிடலாம்" என்றார். தொடர்ந்து பேசிய சீமான், "இப்போதுதான் கும்பாபிஷேகம் குடமுழுக்காக மாறி உள்ளது ஒவ்வொன்றாக வரும். தமிழர்களின் உரிமைகளை போராடி பெற வேண்டிய நிலை உள்ளது. ஒவ்வொரு கோயில்களிலும் போராடி போராடி தான் பெற்று வருகிறோம்" என்றார்.
NTK Seeman: ஸ்ரீகாந்த் கைது விவகாரம்
பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட கேள்விக்கு, "தனிப்பட்ட முறையில் ஸ்ரீகாந்த் எனக்கு தெரியும். என்னுடைய கருத்து அவர் பாவம். புகழ்பெற்ற நிறைய பேர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், அவர் பாவம். வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இதுபோன்று நடந்து கொண்டிருக்கிறது. இதை ஒழிக்க வேண்டும் என அரசு நினைக்க வேண்டும். ஸ்ரீகாந்த் கைதாகவில்லை என்றால் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்" என்றார்.
NTK Seeman: மதுரையில் நாதக மாநாடு
மேலும், 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, "எல்லா வேட்பாளரையும் அறிவித்த பின்பு ஒரு தொகுதி காலியாக இருக்கும். அதில் நான் நிற்பேன், பொறுங்கள்" என பதிலளித்தார். மேலும், மதுரையில் நாதக நடத்த உள்ள மாநாடு குறித்தும் அவர் பேசினார்.
அதில் அவர், "ஆடு மாடுகளின் உரிமைக்காக மாநாடு நடத்துவேன் என சொன்னேன். மாடே இல்லாமல் மாட்டுப்பால் எங்கிருந்து விற்பனை செய்கிறீர்கள்...?. ஆடு, மாடு மேய்ச்சல் என்பது எங்களுடைய பண்பாடு, தொழில். பனை ஏறுதல் எங்களது வாழ்க்கை முறை. ஆடு, மாடுகள் எங்கள் வாழ்க்கையில் பின்னி பிணைந்த ஒன்று. விவசாயிகளுக்கு மேய்ச்சல் நில புறம்போக்கு இப்போது உள்ளதா...? மலையை வெட்டி எடுக்கிறார்கள். மலை அடிவாரத்தில் புல் பூண்டை ஆடுகள் மேய்ந்தால் மலை அழிந்து விடும் என்பதால் தடுக்கிறார்களா...? அதற்காகத்தான் மதுரை விராகனூரில் ஜூலை 10ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளேன்" என்றார்.
கேரளா பாடகர் வேடன் தமிழ் மொழி பாடல் சர்ச்சையானது குறித்த கேள்விக்கு, "வலி தாங்கிய மக்கள் என்றாலே வலி தாங்கியவன் என்றுதான் பொருள். அதனால் அவர் பாடுகிறார். எனக்கு பின்னால் வரும் இந்த தம்பி அந்த நிலத்தின் வலியின் ஒலியாக பாடுகிறார். உலகில் உள்ள ஒவ்வொரு தமிழர்களும் தன் வீட்டு மகனாக தன் உடன் பிறந்தவராக நினைக்க வேண்டும். அவர் தனி மனிதன் அல்ல, தமிழின் குரல். அவரை அவ்வளவு சீக்கிரமாக நசுக்கி விட முடியாது. அவருக்கு எவ்வளவு மரியாதை எவ்வளவு செல்வாக்கு உள்ளது என்பதை பார்க்கும்போது தெரியும். அவனின் வலியோடு எத்தனை கோடி மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியும்" என்றார்.
மேலும் படிக்க | முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிடம் குறித்து பேசியிருக்க வேண்டாம் - டிடிவி தினகரன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









