தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இன்றும் அக்டோபர் 5 தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு, விருதுநகரில் ஓடையை கடக்க முயன்ற சிறுவன் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | இனி விஜய்க்கு கூடுதல் பாதுகாப்பு? மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!

கனமழையால் ஏற்பட்ட சோகங்கள்
விருதுநகர் மாவட்டம், வீரர்பட்டியை சேர்ந்த அய்யனார் - தேவகி தம்பதியினர், தங்களது 6 வயது மகன் அரவிந்துடன் இருசக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டை அருகே உள்ள மலைப்பட்டி பெருமாள் கோவிலுக்கு சென்று திரும்பியுள்ளனர். அப்போது, சாலையின் குறுக்கே உள்ள ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் மூழ்கியுள்ளது. ஆபத்தை பொருட்படுத்தாமல் அவர்கள் தரைப்பாலத்தை கடக்க முயன்றபோது, மூவரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதில், அய்யனாரும், தேவகியும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், அவர்களது கண் முன்பே மகன் அரவிந்த் நீரில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் சிறுவனின் உடலை மீட்டனர்.
பாதுகாப்பாக மீட்கப்பட்ட தாய், மகள்
கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள கருமலை பகுதியில், ஆற்றில் துணி துவைத்து கொண்டிருந்த சீதாலட்சுமி மற்றும் அவரது மகள் ஆகியோர், திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். ஆற்றின் நடுவே இருந்த பாறையில் ஏறிநின்று அவர்கள் கூச்சலிட்டதை தொடர்ந்து, அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் இருவரையும் பத்திரமாக மீட்டனர்.
வெள்ள அபாய எச்சரிக்கை
கனமழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையின் நீர்மட்டம் அதன் மொத்த உயரமான 52 அடியில், 50 அடியை கடந்துள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி, தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 2,618 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக, தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதே போல், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கழுகுமலை, நாலாட்டின்புதூர், திட்டங்குளம் ஆகிய இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- சேலம்
- திருப்பத்தூர்
- நாமக்கல்
- திருச்சி
- திண்டுக்கல்
- மதுரை
- தேனி
- விருதுநகர்
- சிவகங்கை
- ராமநாதபுரம்
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், நீர்நிலைகளின் அருகே செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க | விஜய் என்ன தப்பு செய்தார்? 'அது' கிரிமினல் குற்றமில்லை - சொல்பவர் ஹெச். ராஜா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









