மாவட்ட நீதிபதிகள் தேர்வில் 6 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதை தொடர்ந்து; தேர்வு முறையை மாற்ற வேண்டும் என இராமதாசு கோரிக்கை!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு காலியிடத்திற்கு 15 பேர் வீதம், மொத்தம் 480 பேர் இட ஒதுக்கீட்டு விதிகளின்படி முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்பட வேண்டும் என இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார். 


இது குறித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.. "தமிழ்நாட்டில் (Tamil Nadu) 32 மாவட்ட நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதற்காக தமிழ்நாடு அரசும், சென்னை உயர்நீதிமன்றமும் இணைந்து நடத்திய முதல்நிலைப் போட்டித்தேர்வை எழுதிய சுமார் 2500 பேரில் 6 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தேர்வுமுறையில் உள்ள குழப்பங்கள் தான் இதற்கு காரணம் ஆகும்.


தமிழ்நாடு மாநில நீதித்துறை பணிக்கு 32 மாவட்ட நீதிபதிகளை (District Judges) நேரடியாக தேர்வு செய்வதற்கான ஆள்தேர்வு அறிவிக்கை கடந்த ஆண்டு திசம்பர் 12-ஆம் தேதி வெளியிடப்பட்டது. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என 3 கட்டங்களாக ஆள்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு  இருந்தது. கடந்த மார்ச் மாதத்தில் நடத்தப்படுவதாக இருந்த முதல்நிலைத் தேர்வுகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி நடத்தப்பட்டன. அத்தேர்வுகளை 2500-க்கும்  மேற்பட்டோர் எழுதிய நிலையில், அவர்களில் 6 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் மிகவும் குறைவாக இருப்பதற்கு தேர்வு எழுதியவர்களை விட, தேர்வு நடத்தியவர்கள் தான் காரணமாவர்.


மாவட்ட நீதிபதிகள் நியமனத்திற்கான தேர்வு வடிவமே தவறு ஆகும். நீதிபதிகள் நியமனத்திற்கு போட்டித் தேர்வுகளை (District Judges Exam) நடத்தாமல், தகுதித் தேர்வுகளை நடத்தியது தான் அனைத்து பாதிப்புகளுக்கும் காரணமாகும். வழக்கமாக 32 மாவட்ட நீதிபதிகளை தேர்வு செய்ய வேண்டும் என்றால், முதல்நிலைத் தேர்வில் காலி இடங்களை விட  15 மடங்கு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்பட வேண்டும். அவர்களில் இருந்து காலியிடங்களை விட 3 மடங்கு பேருக்கு முதன்மைத் தேர்வில் தேர்ச்சி அளிக்கப் பட்டு, நேர்காணலுக்கு அழைக்கப்பட வேண்டும். இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் இம்முறையைத் தான் கடைபிடிக்கிறது.


ALSO READ | களரிப்பயட்டை தேசிய விளையாட்டு போட்டிகளில் சேர்த்தற்கு சத்குரு வாழ்த்து


ஆனால், மாவட்ட நீதிபதிகள் நியமனத்திற்கான முதல்நிலைத் தேர்வில் மொத்தம் 200 மதிப்பெண்களுக்கான எழுத்துத் தேர்வில் பொதுப்பிரிவினர் 80 மதிப்பெண்கள், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 75 மதிப்பெண்கள், பட்டியலினம், பழங்குடியினர் 60 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது தகுதித் தேர்வுக்கான நடைமுறையாகும். போட்டித் தேர்வில் தகுதித் தேர்வுக்கான நடைமுறையை பின்பற்றியது தான் அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணமாகும். அதுமட்டுமின்றி, தவறான பதில்களுக்கு  மைனஸ் மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாலும் அதிக எண்ணிக்கையிலானவர்கள் தேர்ச்சி பெறவில்லை.


2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலும் 31 மாவட்ட நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. அதிலும் இதேபோன்ற குளறுபடிகள் நடந்ததால் முதல்நிலைத் தேர்வு எழுதிய 3562 பேரில் ஒருவர் கூட தேர்ச்சி பெற முடியவில்லை. அப்போதே மாவட்ட நீதிபதிகள் தேர்வில் மைனஸ் மதிப்பெண் வழங்கும் முறையை ரத்து செய்து விட்டு, பழைய முறையில் போட்டித் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன். எனது கருத்தை மேலும் பல தலைவர்களும் வழிமொழிந்திருந்தனர். ஆனால், கடந்த முறை நடத்தப்பட்டது போன்று தான் இப்போது முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, 2019-ஆம் ஆண்டு முதல்நிலைத் தேர்வு 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட நிலையில் இப்போது 200 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்களில் 0.24% பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்திருப்பதற்கு பொருத்தமில்லாத தேர்வு முறையே காரணமாகும்; இது மாற்றப்பட வேண்டும்.


போட்டித் தேர்வுகள் தேர்வர்களின் திறமையை மதிப்பிடும் நோக்கத்தில் நடத்தப்பட வேண்டுமே தவிர, தேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பவர்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது. உயர் நீதிமன்ற நீதிபதிகளோ, சட்டப்பல்கலைக்கழக பேராசிரியர்களோ வினாத்தாள்களை தயாரித்திருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு மட்டுமே தெரிந்த பல விஷயங்களை மாவட்ட நீதிபதிகள் தேர்வில் பங்கேற்பவர்களும் அறிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதே அடிப்படையில் மிகவும் தவறு ஆகும்.


ALSO READ | மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் பாஜகவில் இணைந்தார்! டென்ஷனில் கமல்!


மாவட்ட நீதிபதிகள் தேர்வை இதே முறையில் நடத்தினால், அப்பணிக்கு தேர்வு எழுதுபவர்களிடையே மன அழுத்தமும், மன உளைச்சலும் ஏற்படக்கூடும். ஒரு கட்டத்தில் இத்தேர்வில் பங்கேற்க எவரும் முன்வர மாட்டார்கள். 2019-ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த மாவட்ட நீதிபதிகள் தேர்வு முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நீதிபதிகளில் பலர் உச்சநீதிமன்றம் வரை சென்று வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்புகளை வழங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, புதிய தேர்வு முறையிலிருந்து பழைய முறைக்கு மாற வேண்டும்.


அதுமட்டுமின்றி, இப்போது நடத்தப்பட்டுள்ள முதல்நிலைத் தேர்வில் மைனஸ் மதிப்பெண்களை நீக்கி விட்டு, புதிய தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். அவர்களில் இருந்து ஒரு காலியிடத்திற்கு 15 பேர் வீதம், மொத்தம் 480 பேர் இட ஒதுக்கீட்டு விதிகளின்படி முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்பட வேண்டும். முதன்மைத் தேர்வு எழுதியவர்களில் இருந்து ஒரு பணியிடத்திற்கு மூவர் வீதம் 96 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்..


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR