மெர்சல் பட பாணியில் மருத்துவம்! ரூ. 10 கட்டணமாக வசூலித்த மருத்துவர் உயிரிழந்தார்!

Doctor Kanagarathinam: பட்டுக்கோட்டையில் 10 ரூபாய் கட்டணம் வசூலித்த மனிதநேய மிக்க மருத்துவர் கனகரெத்தினம் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Written by - Amarvannan R | Last Updated : Jun 9, 2025, 12:24 PM IST
  • வெறும் 10 ரூபாய் தான் கட்டணம்!
  • எளியோருக்கு உதவிய மருத்துவர்!
  • ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி!
மெர்சல் பட பாணியில் மருத்துவம்! ரூ. 10 கட்டணமாக வசூலித்த மருத்துவர் உயிரிழந்தார்!

தான் டாக்டரான காலத்தில்  நோயாளிகளிடம் மருத்துவம் பார்ப்பதற்கு 2 ரூபாய் என ஆரம்பித்து இறுதிவரை 10 ரூபாய் மட்டுமே வாங்கி சுமார் 65,000 சுகப்பிரசவங்களை பார்த்து பொதுமக்களின் நன்மதிப்பைப் பெற்ற பட்டுக்கோட்டை 10 ரூபாய் மனித நேய மருத்துவர் கனகரெத்தினம் (96) வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். நேற்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் டி.ஏ.கனகரெத்தினம் (96). இவரது மனைவி ராஜலெட்சுமி. இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் கிராமத்தில் 1929ம் ஆண்டு மருத்துவர் கனகரெத்தினம் பிறந்தார்.  

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | இளையராஜா காலில் விழுந்து வணங்கிய அண்ணாமலை

1950ம் ஆண்டு ஏழை எளியவர்களுக்கு மருத்துவ சேவை ஆற்றவேண்டும் என்கிற உயரிய நோக்கத்தில் மருத்துவ படிப்பில் சேர்ந்தார்.  மருத்துவ படிப்பை நல்லபடியாக முடித்தார். இந்நிலையில் ஆரம்பத்தில் நோய்வாய்ப்பட்ட ஏழை எளிய மக்களை தேடிச்சென்று இலவசமாக மருத்துவம் பார்த்தார். இந்நிலையில் அக்காலகட்டத்தில் சொந்தமாக க்ளினிக் வைப்பதற்கு அவரிடம் போதுமான வசதி வாய்ப்புகள் இல்லை. வேறு வழியின்றி கடன் வாங்கி 1968ம் ஆண்டு தனியாக கிளீனிக் ஒன்றை மருத்துவர் கனகரெத்தினம் தொடங்கினார். ஆரம்பத்தில் நோயாளிகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்த அவர், நோயாளிகளுக்கு மருந்து - மாத்திரை வாங்கி கொடுப்பதற்காக இரண்டு ரூபாய் கட்டணமாக வசூலித்தார்.

அதன்பிறகு மருந்து - மாத்திரைகளின் விலை உயர்வால் 1980களில் 5 ரூபாயாக கட்டணத்தை உயர்த்தினார். அதன் பிறகு மருந்து - மாத்திரைகளின் விலை உயர்வால் 1990ஆம் ஆண்டுமுதல் 2020ஆம் ஆண்டுவரை 10 ரூபாய் மட்டுமே மருத்துவருக்கான கட்டணமாக நோயாளிகளிடம் பெற்று மருத்துவம் பார்த்து வந்தார். மருத்துவர் கனகரெத்தினம் கர்ப்பிணி பெண்களிடம் 10ரூபாய் மட்டுமே கட்டணமாக பெற்று சுமார் 65,000 சுகப்பிரசவங்களை பார்த்துள்ளார். இவர் வயது மூப்பு காரணமாக 5 ஆண்டுகள் வீட்டிலிருந்த நிலையில் நேற்று முன்தினம் இறந்தார். இவரது உடல் சீனிவாசபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.  

மறைந்த மனிதநேய மருத்துவர் கனகரெத்தினம் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், உள்ளூர் பிரமுகர்கள், மருத்துவர்கள்,  பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் நேரில் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மறைந்த மருத்துவர் கனகரெத்தினம் உடல் சீனிவாசபுரம் அவரது இல்லத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து பட்டுக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ள நகராட்சி நவீன எரிவாயு தகன மேடைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இறுதிச் சடங்குகளுக்கு பிறகு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

மனிதநேயமிக்க மருத்துவர் கனகரெத்தினம் மறைந்தாலும் ;  வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்? என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு ஏற்ப ; மருத்துவர் கனகரெத்தினம் அவரது மறைவுக்குப் பின்னும் அவர் ஆற்றிய மருத்துவ சேவையின் மூலம் பட்டுக்கோட்டை மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்பவர் ஆகிவிட்டார்.

மேலும் படிக்க | மகளிர் உரிமை தொகை..! உங்கள் பகுதியில் எங்கு எங்கு முகாம் இருக்கும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News