Tamil Nadu government awards : தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பெரியார் விருது, கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. பெரியார் விருது பெறுபவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு மற்றும் தங்கப்பதக்கமும், கபீர் புரஸ்கார் விருது பெறுபவர்களுக்கு 20 ஆயிரம், 10 ஆயிரம் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இந்த இரண்டு விருதுகளுக்கும் யார் விண்ணப்பிக்கலாம்? எப்படி விண்ணப்பிக்கலாம்? என்பது குறித்த முழு விவரங்களையும் இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
பெரியார் விருது
சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக "சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" 1995 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. "சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" பெறுவோருக்கு ரூ.5,00,00/- (ரூபாய் ஐந்து லட்சம் மட்டும்) விருது தொகையும், ஒரு சவரன் தங்க பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர் முதலமைச்சர் அவர்களால் தேர்வு செய்யப்படுகிறார்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
2025 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் "சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்பி வைக்கலாம். தங்களது விண்ணப்பம், சுய விவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.2025 ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 18.12.2025 ஆகும் என்பது தெரிவிக்கலாகிறது.
கபீர் புரஸ்கார் விருது
தமிழ்நாடு அரசின் 2026ஆம் ஆண்டிற்கான "கபீர் புரஸ்கார் விருது" பெற விண்ணப்பிக்கலாம். சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்காக-2026ஆம் ஆண்டிற்கான "கபீர் புரஸ்கார் விருது" ஒவ்வொரு ஆண்டும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் குடியரசு தினவிழாவின் போது வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் (ஆயுதப்படைவீரர்கள், காவல், தீயணைப்புத்துறை மற்றும் அரசுப் பணியாளர்களின் சமுதாய நல்லிணக்க செயல், அவர்கள் ஆற்றும் அரசுப்பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில் நீங்கலாக) இவ்விருதினை பெறத் தகுதியுடையவராவர்.
பரிசு விவரம்
மேலும், இவ்விருதானது ஒரு சாதி, இனம், வகுப்பைச் சார்ந்தவர்கள் பிற சாதி இனவகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது. இவ்விருதானது மூன்று அளவுகளில், தலா ஒரு நபர் வீதம் மூவருக்கு வழங்கப்படுகிறது. முறையே ரூ.20,000/-, ரூ.10,000/- மற்றும் ரூ.5,000/-க்கான காசோலை மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும்.
விண்ணப்பிப்பது எப்படி?
2026ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ள கபீர் புரஸ்கார் விருதிற்கென தகுதியானவர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் / பரிந்துரைகள் இந்த நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட இணையதள முகவரியான http://awards.tn.gov.in-ல் மட்டுமே 15.12.2025 அன்று அல்லது அதற்கு முன்பாக விண்ணப்பம் செய்து கொள்ளலாம். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். பதக்கம் பெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 26.01.2026 குடியரசு தினத்தன்று விருது வழங்கி கௌரவிக்கப்படுவர். எனவே, "கபீர் புரஸ்கார் விருது" பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க | சென்னை மாநகராட்சியில் வேலை! கைநிறைய சம்பளம் வேற.. மிஸ் பண்ணாதீங்க!
மேலும் படிக்க | அரசு வேலைவாய்ப்பு : தேர்வு இல்லை, மாதம் ரூ.21 ஆயிரம் சம்பளம் - முழு விவரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









