)
தமிழக அரசியல் களத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரச்சாரத்திற்காக கரூரில் தான் மேற்கொள்ளவிருந்த நடைபயணத்தின் தேதியை மாற்றியமைத்துள்ளார். அன்புமணியின் இந்த செயல், விஜய்யின் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, ஒவ்வொரு சனிக்கிழமையும் தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், வரும் செப்டம்பர் 27ம் தேதி கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் அவர் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்தார்.

அதே நாளில் பாமக தலைவர் அன்புமணி ராமதாசும், 'உரிமையை மீட்க, தலைமுறையைக் காக்க' என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அவரும், வரும் 27ம் தேதி கரூரில் நடைபயணம் மேற்கொள்ள, ஏற்கனவே காவல்துறையிடம் அனுமதி பெற்றிருந்தார். ஒரே நாளில், ஒரே மாவட்டத்தில் இரு முக்கிய தலைவர்களின் நிகழ்ச்சிகள் நடைபெறுவதால், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் கருதி, விஜய்யின் பிரச்சாரத்திற்கு காவல்துறை அனுமதி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த சூழலை அறிந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது கரூர் நடைபயணத்தை திட்டமிடப்பட்டிருந்த 27ம் தேதியிலிருந்து, மறுநாள் அதாவது 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாற்றியுள்ளார். விஜய்யின் பிரச்சாரத்திற்கு வழிவிடும் நோக்கில், அன்புமணி இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. அன்புமணியின் இந்த பெருந்தன்மையான செயலை, விஜய்யின் தம்பிகள் என்று தங்களை கூறிக்கொள்ளும் தவெக தொண்டர்கள், சமூக ஊடகங்களில் வெகுவாக பாராட்டி வருகின்றனர். "விஜய்க்காக விட்டு கொடுத்த அன்புமணி" என்று அவர்கள் பதிவிட்டு, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
"உரிமை மீட்க… தலைமுறை காக்க’" பயணத்தில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உரையாற்றிய போது..! #உரிமைமீட்க | #தலைமுறைகாக்க pic.twitter.com/8qvu8iaVgo
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) September 20, 2025
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கோட்டையாக கருதப்படும் கரூரில், சமீபத்தில் திமுகவின் முப்பெரும் விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிலையில், விஜய் தனது பிரச்சாரத்திற்கு கரூரை தேர்ந்தெடுத்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது பிரச்சாரங்களில் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வரும் விஜய், கரூரில் செந்தில் பாலாஜி குறித்தும் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்புமணியின் இந்த தேதி மாற்றத்தால், விஜய்யின் கரூர் பிரச்சாரத்திற்கு காவல்துறை அனுமதி வழங்குவதில் இருந்த தடை நீங்கியுள்ளது. இது, தமிழக அரசியல் களத்தில் ஒரு ஆரோக்கியமான மற்றும் நேர்மறையான அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ