)
திமுகவின் 90% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி வரும் நிலையில், திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் என பட்டியலை ஏற்கனவே பகுதி பகுதியாக வெளியிட்டு வந்தார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். இந்த நிலையில், பகுதி 7 என குறிப்பிட்டு ஒரு 20 வாக்குறுதிகளை பட்டியலிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பகுதி 7 என குறிப்பிட்டு, 121.தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். (வாக்குறுதி எண் & 160)
122.மருத்துவ மாணவர் சேர்க்கையில் அகில இந்திய தொகுப்பு முறையை இரத்து செய்து, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் அனைத்து இடங்களும் தமிழக மாணவர்களுக்கே கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். (வாக்குறுதி எண் & 161)
123.இதுவரை மருத்துவக் கல்லூரி அமைக்கப்படாத மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை திமுக அரசு தொடங்கும். (வாக்குறுதி எண் & 164)
124.மூன்றாண்டுகளுக்குள் தமிழ்நாடு 100% பேர் எழுத்தறிவு பெற்ற மாநிலமாக உருவாவதற்கு உரிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு விரைவாகச் செயல்படுத்தப்படும். (வாக்குறுதி எண் & 170)
125.அரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடுவதற்குத் தேவையான பயிற்சி அளிக்கக் கூடிய வகையில், பிரிட்டிஷ் கவுன்சில் போன்ற நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு உரிய பயிற்சி வகுப்புகள் நடத்திட ஆவன செய்யப்படும். (வாக்குறுதி எண் & 171)
126.பள்ளிப் பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வேளாண்மை ஒரு பாடமாக இணைக்கப்படும். உடற்பயிற்சிக் கல்விக்கு வாரம் 3 பாட வேளைகள் ஒதுக்கீடு செய்யப்படும். (வாக்குறுதி எண் & 172)
127.பள்ளிக் கூடங்களில் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றுடன் மொழிவழிச் சிறுபான்மையினருக்கு அவர்களின் தாய் மொழியையும் பயில நடவடிக்கை எடுக்கப்படும். (வாக்குறுதி எண் & 173)
128.தமிழ்நாட்டில் நூலக ஆணைக் குழுவின் கீழ் இயங்கும் அனைத்து நூலகங்களுக்கும் நூல்கள் வாங்குவதில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்பட்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்கள் உட்பட தரமான சிறந்த நூல்கள் வாங்க ஆவன செய்யப்படும். (வாக்குறுதி எண் & 176)
129.2013 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று இன்னும் வேலை வாய்ப்பினைப் பெறாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். (வாக்குறுதி எண் & 177)
130.ஊர்ப்புற நூலகர்களாகக் கிராமங்களில் பணியாற்றும் நூலகர்களுக்குக் கால முறையிலான பணி வழங்கப்படும். (வாக்குறுதி எண் & 178)
131.குடும்பத்தில் முதல் தலைமுறைப் பட்டம் பெற்ற ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். (வாக்குறுதி எண் & 179)
132.படித்துவிட்டு வேலை தேடும் பெண்களுக்குப் பணி வாய்ப்பைப் பெறுவதற்கு உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்குவதற்கு மாவட்டந்தோறும் பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்படும். (வாக்குறுதி எண் & 180)
133.பகுதிநேர ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோரைப் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். (வாக்குறுதி எண் & 181)
134.செந்நாப் புலவர் கார்மேகக் கோனார், தமிழவேள் உமா மகேசுவரனார், நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் ஆகியோர் பெயர்களில் அவர்கள் பிறந்த ஊர்களில் நூலகங்கள் அமைக்கப்படும். (வாக்குறுதி எண் & 183)
135.இளம் வயதிலேயே பெற்றோரை இழந்து தனித்து விடப்பட்ட சிறுவர், சிறுமியர், பெற்றோராலும், உற்றார் உறவினர்களாலும் வீட்டைவிட்டுத் துரத்தப்பட்டு அன்றாட உணவுக்குக் கையேந்தி நிற்கும் திருநங்கையர், பள்ளிக்குச் செல்ல இயலாத மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் வேலை வாய்ப்புகளுக்குத் தகுதி ஏற்படுத்துவதற்கெனத் திறன் வளர்ச்சி உரிமைச் சட்டம் பயிற்சி நிறைவேற்றப்பட்டு அவர்கள் வேலைக்குச் செல்வதற்கோ, தொழில் தொடங்குவதற்கோ ஏற்ற வகையில் திறன் பயிற்சி அளிக்கப்படும். (வாக்குறுதி எண் & 186)
136.தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 3 இலட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவர். (வாக்குறுதி எண் & 187)
137.நீர்நிலைகள், ஆறுகள், குளங்கள், ஏரிகள், ஓடைகள் வனம் உள்ளிட்ட இயற்கை வளங்களை பாதுகாக்கவும் கண்காணிக்கவும் 12ஆம் வகுப்பு தேர்வு பெற்ற 75 ஆயிரம் இளைஞர்கள் பணி அமர்த்தப்படுவர். (வாக்குறுதி எண் & 188)
138.தமிழகத்தில் உள்ள அனைத்துச் சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட பொதுச் சொத்துகளைப் பாதுகாக்கும் பணிகளில் 75 ஆயிரம் சாலைப் பணியாளர்கள் நியமிக்கப்படுவர். (வாக்குறுதி எண் & 189)
139.திருக்கோவில்கள், வழிபாட்டுத் தலங்களுக்குச் சொந்தமான சொத்துகளைக் கண்காணித்துப் பாதுகாக்கும் பணியில் 25 ஆயிரம் இளைஞர்கள் திருக்கோயில் பணியாளர்களாகப் பணியமர்த்தப்படுவர். (வாக்குறுதி எண் & 190)
140.மக்கள் நலப் பணியாளர்களாக 25 ஆயிரம் மகளிர் நியமிக்கப்படுவர். (வாக்குறுதி எண் & 191) இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ