PTR Palanivel Thiagarajan | மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு கட்டாயம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என கூறுகிறது. ஆனால் மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இதுகுறித்து தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். அதில் மும்மொழிக் கொள்கை குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.
பிடிஆர் அளித்திருக்கும் அந்த பேட்டியில், " மும்மொழிக் கொள்கையை 100 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் இருந்து தமிழ்நாடு எதிர்த்து வருகிறது. 1930களிலேயே இந்தி மொழித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு போராடியது. 1960களில் மிகப்பெரிய போராட்டம் இந்தி திணிப்பு எதிராக நடந்து பலர் மொழிக்காக இன்னுயிரை கொடுத்திருக்கிறார்கள். அதனால் எந்த சூழலிலும் தமிழ்நாடு இந்தி மொழியை ஏற்காது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இரு மொழிக் கொள்கை என்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கிறது.
கல்வி மாநிலப் பட்டியலில் இருக்கிறது. அதனால் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசே கல்வியில் என்ன சேர்க்க வேண்டும் என்பதை முடிவு செய்ய முடியும். அரசியலமைப்பு சட்டமும் அதனையே தான் கூறுகிறது. தனிப்பட்ட ஒரு மாணவர் இந்தி உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் எந்த மொழியை வேண்டுமானாலும் தமிழ்நாட்டில் படிக்கலாம். அதற்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது. ஆனால் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு இருமொழிக் கொள்கையை மட்டுமே பின்பற்றுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இதன் பின்னணியில் தமிழ் மொழியின் வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் கலாச்சாரம் இருக்கிறது. அதனை கருத்தில் கொண்டுதான் முடிவு எடுக்க முடியும்.
இந்தி மொழியை ஒருவர் ஏன் படிக்க வேண்டும். மும்மொழிக் கொள்கையால் உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்கள் என்ன வளர்ச்சியை அடைந்திருக்கின்றன. குறைந்தபட்சம் இரு மொழிக் கொள்கையையாவது அவர்கள் கடைபிடிக்கிறார்களா?. மும்மொழிக் கொள்கையை பின்பற்றி தமிழ்நாட்டின் கல்வியை விட சாதித்திருக்கிறோம் என ஒரே ஒரு எடுத்துக்காட்டை, ஒரு மாநிலத்தை எடுத்துக்காட்டாக கூறுங்கள். நாங்கள் அதன்பிறகு மும்மொழிக் கொள்கையை பற்றி சிந்திக்கிறோம். இரு மொழிக் கொள்கையை பின்பற்றும் தமிழ்நாடு கல்வி உள்ளிட்ட எல்லா துறைகளிலும் முன்னணியில் இருக்கும்போது, எங்கள் மீது ஏன் தேவையில்லாமல் மும்மொழிக் கொள்கையை திணிக்கிறீர்கள்.
மூன்று மொழிகளுக்கு பதிலாக அறிவியல் துறையில் இப்போது வந்திருக்கும் புதிய தொழில்நுட்பங்கள் சார்ந்த படிப்புகளை அறிமுகம் செய்யுங்கள். செயற்கை நுண்ணறிவு அபாரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அதனைப் பற்றி பள்ளிக் கல்வியில் சேர்க்கலாமே. இது தான் மாணவர்களின் வளர்ச்சியில்செலுத்தும் உண்மையான அக்கறையாக இருக்க முடியும். இதைத் தவிர்த்து எந்தவொரு முன் எடுத்துக்காட்டும் இல்லாமல், சிறப்பாக செயல்படும் தமிழ்நாட்டை மத்திய அரசு நிதி உள்ளிட்ட விவகாரங்களில் தொடர்ந்து வஞ்சிப்பது எந்த வகையில் நியாயம்?" என்பது உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் இந்த பேட்டியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
மும்மொழிக் கொள்கை ஏன் தமிழ்நாட்டுக்கு அவசியமில்லை என்பதை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெளிவாக விளக்கியிருப்பதாக அவருக்கு பாராட்டும் தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









