)
Pudhumai Penn, Tamil Pudhalvan Scheme: கல்லூரி செல்வோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டங்களை தமிழ்நாடு அரசு வெகு சிறப்பாக நடத்தி வருகிறது. இடைநிற்றல் இன்றி கல்வி கற்றிட உயர்கல்வி பயிலும் மாணவ மாண மாணவியருக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழக அரசின் இந்த தொலைநோக்கு திட்டங்களினால் தமிழக மாணவர்கள் கல்வியில் சாதனை படைத்து வாழ்வில் உயர்ந்திடும் நிலை உருவாகும். இத்திட்டத்தின் கீழ் கல்லூரி செல்லும் மாணவிகள் மற்றும் மாணவர்கள் தலா ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொள்ளலாம். இதற்காக சில பிரத்யேக விதிமுறைகளை தமிழ்நாடு அரசு வகுத்துள்ளது. அதன்படி, யாரெல்லாம் தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப் பெண் திட்டங்களில் மாதம் ரூ.1000 பெறலாம், யாரெல்லாம் பெற முடியாது என தெரிந்து கொள்வது அவசியம்.
புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்ட விதிமுறைகள்
புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டங்கள் அரசு பள்ளி அல்லது அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மாணவ மாணவியரின் உயர் கல்வி படிப்பை உறுதி செய்யும் உன்னத திட்டங்கள் ஆகும். இத்திட்டங்களின் கீழ் ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் அல்லது ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் படித்து முதன் முதலில் மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் மாதம் ரூ.1,000/- உதவித்தொகை வழங்கப்படுகிறது. இலவச கட்டாய கல்வித் திட்டத்தின் கீழ் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழக தனியார் பள்ளியில் பயின்று 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று இருந்தாலும் இத்திட்டங்கள் மூலம் பயனடைய முடியும்.
இந்த கல்வியாண்டு முதல் திருநங்கைகளும் பயன்பெறும் வகையில் மேற்படி விதிகள் திருநங்கைகளுக்கு மட்டும் தளர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கல்லூரியில் சென்று பயிலும் மாணவ மாணவியருக்கு மட்டுமே இந்த உதவி தொகை வழங்கப்படும். ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் இருந்தாலும் இத்திட்டங்களின் கீழ் உதவிதொகை பெறலாம். அஞ்சல் வழி கல்வி அல்லது அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களில் படிப்பவர்கள் இத்திட்டத்தின் கீழ் உதவி தொகை பெற இயலாது. வேறு திட்டங்களின் கீழ் நிதி உதவி பெறும் மாணவரும் கூடுதலாக இத்திட்டங்களின் கீழ் உதவி தொகை பெற இயலும் என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.
எப்படி விண்ணப்பிப்பது?
கலை, அறிவியல், மருத்துவம், பொறியியல், தொழில்முறை படிப்புகள், துணை மருத்துவம், டிப்ளமா, ஐடிஐ, இளநிலை உயர்கல்வி ஆகியவற்றில் மேற்படிப்பை தொடர விரும்பும் மாணவ, மாணவியர்களுக்கு அப்படிப்பிற்க்கான உதவித்தொகையாக மாதம் ரூ.1,000/- வழங்கப்படும். இத்திட்டங்களின் கீழ் பதிவு செய்ய புதிய UMIS இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர் தாங்கள் பயிலும் உயர்கல்வி நிறுவனங்களிலேயே UMIS இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே உயர்கல்வியில் சேர்ந்த மாணவ, மாணவியரும் மீதமிருக்கும் ஆண்டுகளுக்கான படிப்பிற்கு இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இத்திட்டங்களின் கீழ் பயன்பெற ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு அவசியமாகும்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை தமிழ் புதல்வன் திட்டத்தில் மொத்தம் 4,694 மாணவர்களும், புதுமைப்பெண் திட்டத்தில் மொத்தம் 4,188 மாணவிகளும் பயனடைந்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார். சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றை உள்ளடக்கி பொருளாதாரத்திலும் முன்னேற்றமடைந்த சமுதாயத்தினரை கல்வி கற்றவர்களால் மட்டுமே உருவாக்கிட இயலும் என்பதற்கேற்ப கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உள்ளத்தில் உதித்த உன்னத திட்டங்கள் தான் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் என கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் பொருளாதார சிக்கல்களின் காரணமாக 10 அல்லது 12 ஆம் வகுப்பு முடித்தவுடன் கல்வியை தொடர முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இம்மாணவ, மாணவியர்களின் கல்வி தடைப்படாமல் அவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம் புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டம் ஆகிய திட்டங்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ள அவர், இதனை உரியவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேண்டுக்கொண்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட பயனாளிகள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை தமிழ் புதல்வன் திட்டத்தில் மொத்தம் 4,694 மாணவர்களும், புதுமைப்பெண் திட்டத்தில் மொத்தம் 4,188 மாணவிகளும் பயனடைந்து வருகின்றனர். எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு முடித்த அனைவரும் உயர்கல்வியில் சேர்ந்து, வாழ்வில் வெற்றிபெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ