)
Tamil Nadu Ration Card Latest News: திமுக அரசு பலதரப்பட்ட மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், மாணவர்கள் போன்றவர்களுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறது.
அதில் ஒன்று தான் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம். அதாவது, தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் நியாய விலைக் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற பொருட்கள் மானிய விலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக மக்கள் ரேஷன் கடைகளில் வரிசையில் காத்திருந்து, ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். ஆனால், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளால் வரிசையில் நின்று ரேஷன் பொருட்களை வாங்க முடியாத சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளின் சிரமத்தை போக்க, தமிழக அரசு தாயுமானவர் திட்டத்தை கொண்டு வந்தது.
தாயுமானவர் திட்டத்தின் மூலம் தகுதியுள்ள மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று, ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் இரண்டாவது வாரத்தில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட நாட்களில் ரேஷன் பணியாளர்கள் வாகனங்களில் பொருட்களை ஏற்றிக் கொண்டு, சம்பந்தப்பட்ட பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
சமீபத்தில் கூட, இந்த திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. அதாவது, 70 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே அவர்களது வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அதனை 65 ஆக தமிழக அரசு குறைத்துள்ளது. இதன் மூலம், தாயுமானவர் திட்டத்தில் பயனாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
இந்த நிலையில், டிசம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் எப்போது வீடுகளுக்கு வழங்கப்படும் என்ற தேதியை அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்து வருகிறது. அந்த வகையில், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் தாயுமானவர் திட்டத்தில் டிசம்பர் மாதம் ரேஷன் பொருட்கள் விநியோகம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2025 டிசம்பர் 2,3ஆம் தேதிகளில் (செவ்வாய், புதன்கிழமை) ரேஷன் பொருட்கள் பயனாளிகளின் வீடுகளுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தாயுமானவர் திட்ட பயனாளிகள் இந்த தேதியை குறித்து வைத்துக் கொண்டு, பயனாளிகள் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளுங்கள்.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு பொங்கல் சிறப்பு தொகுப்புகளை வழங்குவது வழக்கம். அந்த வகையில், 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பில் என்னென்னலாம் இருக்கும் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், பொங்கல் தொகுப்பில் ரொக்க பணம் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரையும் வழங்காத வகையில், 2026ஆம் ஆண்டு பொங்கல் சிறப்பு தொகுப்பில் ரூ.5,000 வரை ரொக்கமாக தரலாம் என பேசப்பட்டு வருகிறது. 2021ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.2500 வழங்கப்பட்டது. இம்முறை இதனை விட அதிகமாக பொங்கல் பரிசு தொகுப்பில் அதிகம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் மாதத்தில் அறிவிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.