)
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த அத்திமுகம் கிராமத்தைச் சேர்ந்த சீதாராமன் (34) என்ற ரியல் எஸ்டேட் அதிபரை, நிலம் வாங்கப் பேசுவதாகக் கூறி அழைத்துக் கடத்தி, பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த அக்டோபர் 21 அன்று, சீதாராமனை ஸ்வேதா (35) என்ற பெண், புதியதாக நிலம் வாங்குவது தொடர்பாகப் பேச வேண்டும் எனக் கூறி ஓசூர் அருகே உள்ள பத்தலப்பள்ளி பகுதிக்கு வரவழைத்தார். சீதாராமன் அங்கு சென்றபோது, அவரை 5 பேர் கொண்ட கும்பல் ஒரு வீட்டிற்குள் இழுத்துச் சென்று பூட்டி வைத்துத் தாக்கி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவரிடமிருந்த 2.5 சவரன் தங்கச் சங்கிலி மற்றும் 1 சவரன் தங்க மோதிரத்தை பறித்துக் கொண்ட அந்தக் கும்பல், ₹5 கோடி கொடுத்தால் மட்டுமே விடுவிப்பதாக மிரட்டியது. பிறகு, பணத்தைக் குறைக்க சம்மதித்து ₹25 லட்சம் கேட்டதாகத் தெரிகிறது.
சீதாராமன் மறைமுகமாகத் தனது உறவினருக்குத் தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து, அவர்கள் ஓசூர் அட்கோ காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விரைந்து வந்து தேடியபோது, சீதாராமனை காரில் ஏற்றிக்கொண்டு தப்ப முயன்ற சுரேஷ் (38), சங்கர் (36), அஜய்ராஜ் (19), கோகுல கண்ணன் (36) ஆகிய நான்கு பேரைச் சென்னத்தூர் பகுதியில் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
இந்தச் சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டதாகக் கருதப்பட்ட ஓசூர் மோகன், நாகராஜ், மற்றும் ஸ்வேதா ஆகிய மூவரையும் அட்கோ போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், வெளி மாநிலத்திற்குத் தப்ப முயன்ற ஸ்வேதா (எ) சந்தியா (35) மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மோகன் (எ) வெங்கடாஜலபதி (37) ஆகிய இருவரையும் போலீசார் இன்று அதிகாலை அலச நத்தம் பகுதியில் கைது செய்தனர். விசாரணையில், தொழிலதிபரிடம் பணம் பறித்து ஆடம்பர வாழ்க்கை வாழலாம் என்ற நோக்கத்தில் இச்செயலில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவான ஒருவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ