RTE admission : தனியார் பள்ளிகளில் ஆடிஇ சட்டத்தின் கீழ் 2026-27 ஆம் கல்வி ஆண்டுக்கான 25 விழுக்காடு மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்கியது.

RTE admission : கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2026-27 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்கியது. தமிழகத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தச் சட்டத்தின் கீழ், ஒவ்வொரு தனியார் பள்ளியும் அதன் நுழைவு நிலை வகுப்பான எல்.கே.ஜி அல்லது முதலாம் வகுப்பில் மொத்த இடங்களில் 25 சதவீதத்தை இத்தகைய குழந்தைகளுக்காக ஒதுக்க வேண்டும்.
தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு
2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான இந்தச் சேர்க்கை செயல்முறையானது மிகவும் வெளிப்படையாகவும், கணினிமயமாக்கப்பட்ட முறையிலும் நடைபெறுவதை உறுதி செய்யப் பள்ளிக் கல்வித்துறை விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்வதால், பொருளாதாரத்தில் பின்தங்கிய பெற்றோர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் மிகவும் துல்லியமாக வரையறுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்கும் குழந்தை வசிக்கும் இடத்திலிருந்து சம்பந்தப்பட்ட பள்ளி ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்குள் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமான விதியாகும். வயது வரம்பைப் பொறுத்தவரை, எல்.கே.ஜி வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் ஆகஸ்ட் 1, 2022 முதல் ஜூலை 31, 2023-க்குள் பிறந்திருக்க வேண்டும்.
ஒருவேளை பள்ளி நேரடியாக முதலாம் வகுப்பிலிருந்து தொடங்கினால், அந்தப் பள்ளிக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் ஆகஸ்ட் 1, 2019 முதல் ஜூலை 31, 2020-க்குள் பிறந்திருக்க வேண்டும். இந்த வயது வரம்பை உறுதி செய்யப் பிறப்புச் சான்றிதழ் அல்லது மருத்துவமனை பதிவேடுகள் அல்லது அங்கன்வாடி பதிவேடுகள் சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும். இவை எதுவுமே இல்லாத பட்சத்தில், பெற்றோரின் உறுதிமொழிப் பத்திரமும் பரிசீலிக்கப்படும்.
மாணவர் சேர்க்கை தொடங்கியது
தனியார் பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஏப்ரல் 21 இன்று இணையதளம் முதல் விண்ணப்பிக்கலாம். மே 18, 2026 அன்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க கடைசி தேதியாகும். விண்ணப்பிக்க வசதி இல்லாத பெற்றோர்களுக்காக மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் வட்டார வள மையங்களில் பிரத்யேக உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, அங்குத் தேவையான ஸ்கேனர் மற்றும் கணினி வசதிகள் செய்து தரப்படும்.
என்னென்ன ஆவணங்கள் இணைக்க வேண்டும்?
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் மிகவும் முக்கியமானவை. இருப்பிடச் சான்றிற்காகக் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற அரசு அங்கீகரித்த ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம். நலிவடைந்த பிரிவினர் என்ற அடிப்படையில் விண்ணப்பிப்போர், தங்கள் ஆண்டு வருமானம் இரண்டு லட்ச ரூபாய்க்குக் குறைவாக உள்ளதை உறுதி செய்ய வட்டாட்சியரிடம் பெற்ற வருமானச் சான்றிதழைப் பதிவேற்ற வேண்டும்.
வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வரும் குழந்தைகள் சாதிச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். இதில் குறிப்பாக அனாதை குழந்தைகள், எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவர் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இவர்களுக்குக் குலுக்கல் முறைக்கு முன்பாகவே இடங்கள் ஒதுக்கப்படும்.
ஆவணங்கள் சரிபார்ப்பு
விண்ணப்பங்கள் பெறப்பட்ட பிறகு, மே 19, 2026-க்குள் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் அனைத்து ஆவணங்களையும் EMIS இணையதளம் வழியாகச் சரிபார்க்க வேண்டும். ஆவணங்கள் சரியாக இருந்தால் 'தகுதியானது' என்றும், ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் 'தகுதியற்றது' அல்லது 'ஆவணங்கள் விடுபட்டுள்ளன' என்றும் இணையதளத்தில் குறிப்பிடப்படும். இந்தத் தகவல் பெற்றோரின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு உடனடியாகக் குறுஞ்செய்தி வழியாக அனுப்பப்படும்.
தகுதியான விண்ணப்பதாரர்களின் பட்டியல் மே 20 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும். ஒரு பள்ளியில் ஒதுக்கப்பட்ட இடங்களை விட அதிகமான விண்ணப்பங்கள் வந்திருந்தால், மே 22, 2026 அன்று சம்பந்தப்பட்ட பள்ளி வளாகத்தில் மாவட்டக் கல்வி அதிகாரிகளின் முன்னிலையில் குலுக்கல் முறை நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
காத்திருப்பு பட்டியல் அப்டேட்
குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள் அன்றைய தினமே இணையதளத்தில் பதிவேற்றப்படும். மேலும், ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து மாணவர்கள் கொண்ட காத்திருப்புப் பட்டியலும் தயார் செய்யப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மே 25 முதல் மே 27-க்குள் பள்ளியில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் சேரவில்லை என்றால், காத்திருப்புப் பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசு உத்தரவு
ஒட்டுமொத்த சேர்க்கை செயல்முறையும் மே 29, 2026 அன்றுடன் நிறைவடையும். இந்த முழு நடைமுறையையும் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, ஏதேனும் புகார்கள் எழுந்தால் அதன் மீது உரிய விசாரணை நடத்தப்படும். பள்ளிகள் எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்களைப் பெறுவதைத் தவிர்க்கவோ அல்லது தகுதியான மாணவர்களை நிராகரிக்கவோ கூடாது என்று அரசு கண்டிப்பான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.