RTE 2025 Admission, Tamil Nadu: தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இன்று முதல் சேர்க்கலாம். கல்வி கட்டணம் கிடையாது. மத்திய அரசு உரிய நிதியைத் தமிழ்நாட்டிற்கு விடுவித்ததைத் தொடர்ந்து, 2025-26 கல்வியாண்டிற்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (RTE), 2009-இன் கீழ் மாணவர் சேர்க்கை நடைமுறைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசு அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டிலுள்ள தனியார் பள்ளிகளில் தகுதியுடைய மாணவர்கள் இலவசமாகக் கல்வி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஏன் தாமதம் ஏற்பட்டது? நிதி விடுவிக்கப்பட்டதன் பின்னணி
மத்திய அரசு மாநிலத்துக்கு வழங்க வேண்டிய RTE நிதியை விடுவிக்காததால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க முடியாமலும், ஏற்கனவே சேர்க்கப்பட்ட மாணவர்களின் கட்டணப் பிரச்சினையால் பள்ளிகள் நெருக்கடியைச் சந்தித்து வந்தன.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு: V. Eswaran vs. Government of Tamil Nadu & Others வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் RTE நிதி ஒதுக்கீட்டை 'ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி' திட்டத்திலிருந்து (Samagra Shiksha) பிரித்து வழங்கவும், தேசிய கல்விக் கொள்கை 2020 (NEP 2020) அல்லது PM SHRI பள்ளித் திட்ட ஒப்பந்தம் (MoU) ஆகியவற்றுடன் நிதியை இணைக்கக் கூடாது என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற நடவடிக்கை: இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவிப்பு வழங்கியதைத் தொடர்ந்து, தாமதமான நிதிப் பங்களிப்பை மத்திய அரசு விடுவித்துள்ளது. இந்த நிதியைத் தொடர்ந்து, 2025-26 கல்வியாண்டிற்கான RTE மாணவர் சேர்க்கை செயல்முறைகள் தொடங்கப்பட்டுள்ளன.
2025-26 கல்வியாண்டில் யார் விண்ணப்பிக்கலாம்?
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009-இன்படி, சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் நுழைவு வகுப்புகளில் (LKG / முதல் வகுப்பு) மொத்த மாணவர் எண்ணிக்கையில் 25% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டின் கீழ் பின்வரும் பிரிவினர் விண்ணப்பிக்கலாம்:
சேர்க்கை ஒதுக்கீடு விதிமுறைகள்
மொத்த ஒதுக்கீடு - சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளின் நுழைவு வகுப்புகளில் (LKG std) 25% இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
சேர்க்கை முறை - அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைன் சேர்க்கை நடைபெறும்.
முன்னுரிமைப் பிரிவுகள் - ஆதரவற்றோர், எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டோர், மாற்றுப் பாலினத்தவர் (Transgender), தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
குலுக்கல் நடைமுறை - விண்ணப்பங்களின் எண்ணிக்கை ஒதுக்கீட்டை விட அதிகமானால், சிறப்பு முன்னுரிமைப் பிரிவுகளைத் தவிர்த்து, குலுக்கல் (Random Selection) முறையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மாணவர் சேர்க்கைக்கான முக்கிய வழிகாட்டுதல்கள்
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, தனியார் பள்ளிகள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டிய அம்சங்கள்:
கட்டணம் வசூலிப்பு இல்லை: RTE தகுதியுடைய மாணவர்களிடமிருந்து எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது.
கட்டணத் திருப்பிச் செலுத்துதல்: ஏற்கனவே கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தால், பள்ளிகள் அதனை 7 நாட்களுக்குள் பெற்றோர்களுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டும்.
கண்காணிப்பு: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான குழுக்கள் மூலம் இந்தச் சேர்க்கை நடைமுறை கண்காணிக்கப்படும்.
புகார் தீர்வு: புகார்களுக்கு பிரத்தியேகமான உதவி எண்: 14417 மற்றும் மின்னஞ்சல் முகவரி: rteadmission@tnschools.gov.in ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2025-26 RTE மாணவர் சேர்க்கை அட்டவணை
தற்போதுள்ள RTE இட ஒதுக்கீட்டின் கீழ் ஏற்கனவே சேர்க்கப்பட்ட தகுதியான மாணவர்களைப் பதிவு செய்வதற்காக ஒரு குறுகிய கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது:
06.10.2025 - மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியீடு
07.10.2025 to 30.09.2025 - நுழைவு வகுப்பில் நிரப்பப்பட்ட மொத்த மாணவர் எண்ணிக்கைப் பதிவேற்றம்
09.10.2025 - தகுதியுடைய மாணவர்களின் விவரங்கள் பதிவேற்றம் (ஆதார், பிறப்பு/ இருப்பிடம்/ வருமானம் மற்றும் சாதிச் சான்றிதழ்)
10.10.2025 & 13.10.2025 - தகுதியான / தகுதியற்ற விண்ணப்பதாரர்கள் பட்டியல் அறிவிப்பு. விடுபட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வாய்ப்பு.
14.10.2025 - தகுதி பெற்ற மாணவர் இறுதி பட்டியல் வெளியீடு
16.10.2025 - விண்ணப்பங்கள் 25%ஐ மீறினால், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர் அறிவித்தல்
17.10.2025 - தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை EMIS Portal-இல் உள்ளீடு செய்தல்
இந்த அறிவிப்பு மூலம், ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமையை உறுதிப்படுத்தும் தனது நோக்கத்தில் தமிழ்நாடு அரசு தெளிவாக உள்ளது. ஆர்வமுள்ள பெற்றோர்கள், அறிவிக்கப்பட்ட கால அட்டவணையைப் பின்பற்றி ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தகவல்களுக்கு உதவி எண்: 14417 மற்றும் மின்னஞ்சல் முகவரி: rteadmission@tnschools.gov.in ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க | தனியார் பள்ளிகளில் இலவசமாக படிக்க வைக்க வேண்டுமா? தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்
மேலும் படிக்க | முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









