)
Tamil Nadu Government : மத்திய அரசு உரிய நிதியை ஒதுக்காததால் தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் இட ஒதுக்கீட்டின் கீழ் பெற்றோர்கள் மாணவ, மாணவிகளை சேர்க்க முடியாமல் இருந்தனர். மேலும், ஏற்கனவே இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவ, மாணவிகளை தனியார் பள்ளிகள் உரிய கட்டணம் செலுத்துமாறும் அறிவுறுத்தல்களை கொடுத்திருந்தனர். இந்த விவகாரம் நாளுக்குநாள் பெரிதாகிக் கொண்டிருந்த இந்த நேரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக மத்திய அரசு தமிழ்நாட்டுக்கான உரிய கல்வி நிதியை இப்போது ஒதுக்கியுள்ளது. அதனால், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009- இன்படி (RTE) மாணவர் சேர்க்கை தொடங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அத்துடன் இதற்கான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு அறிவிப்பு
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009- இன்படி (RTE) மாணவர் சேர்க்கை தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ; ஒன்றிய அரசால் நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2025-26 கல்வியாண்டிற்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009- இன்படி (RTE) மாணவர் சேர்க்கை தொடங்கப்படுகிறது. அதன்படி, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 (RTE Act) -இன் கீழ் 2025-26 கல்வியாண்டிற்கான மாணவர்களை சேர்க்கலாம். சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளின் அடிப்படையில், ஒன்றிய அரசால் மாநிலத்திற்கு வழங்க வேண்டிய RTE நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வழக்கு பின்னணி
W.P. No. 18427 of 2025 - V. Eswaran vs. Government of Tamil Nadu & Others வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம், RTE நிதி ஒதுக்கீட்டை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (Samagra Shiksha) திட்டத்திலிருந்து பிரித்து வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், தேசிய கல்விக் கொள்கை 2020 (NEP 2020) அல்லது PM SHRI பள்ளித் திட்ட ஒப்பந்தம் (MoU) என்பனவற்றுடன் நிதி வழங்கல் இணைக்கப்படக் கூடாது என்றும் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மேல்முறையீடு மனு (SLP) தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு அறிவிப்பு வழங்கியதைத் தொடர்ந்து, ஒன்றிய அரசு தன்னுடைய நிதிப் பங்களிப்பை விடுவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக 2025-26 கல்வியாண்டிற்கான RTE மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளது.
2025-26 கல்வியாண்டிற்கான RTE மாணவர் சேர்க்கை சிறப்பம்சங்கள்
1. சேர்க்கை ஒதுக்கீடு
* அனைத்து சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளின் நுழைவு வகுப்புகளில் (LKG // std) 25% ஒதுக்கீடு.
* சேர்க்கை நடைமுறைகள் RTE Act, 2009 மற்றும் தமிழ்நாடு RTE விதிகள், 2011 அடிப்படையில் நடைபெறும்.
2. சேர்க்கை முறை
* அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைன் சேர்க்கை.
* தற்போது குழந்தைகள் நுழைவு நிலை வகுப்பில் கல்வி பயிலும் அதே பள்ளியில் இந்த கல்வியாண்டிற்கான சேர்க்கை மேற்கொள்ளப்படும்.
* ஏற்கனவே சேர்க்கப்பட்ட தகுதியான மாணவர்களை RTE ஒதுக்கீட்டின் கீழ் பதிவு செய்வதற்காக 10 நாள் கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
3. முன்னுரிமை பிரிவுகள்
* ஆதரவற்றோர், எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டோர், மாற்றுப் பாலினத்தவர், தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள்
* ஒதுக்கீட்டை விட விண்ணப்பங்கள் அதிகமானால், குலுக்கல் நடைமுறை (Random Selection) பின்பற்றப்படும்.
4. வசூலித்தக் கட்டணத்தை திருப்பிச் செலுத்தல்
* RTE தகுதியுடைய மாணவர்களிடமிருந்து எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது.
* ஏற்கனவே கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தால், 7 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.
5. கண்காணிப்பு மற்றும் புகார் தீர்வு
* மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான குழுக்கள் மூலம் கண்காணிப்பு.
* புகார்களுக்காக பிரத்தியேகமான உதவி எண் மற்றும் மின்னஞ்சல் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
6. கல்வி சமத்துவம் மற்றும் அணுகலை உறுதி செய்தல்
* தமிழ்நாடு அரசு, ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில், இச்சேர்க்கை நடைமுறையை தெளிவான, சமத்துவமான மற்றும் குழந்தை மையப்படுத்தப்பட்ட முறையில் மேற்கொள்கிறது.
2025-26 கல்வியாண்டிற்கான மாணவர் (RTE) சேர்க்கை அட்டவணை
06.10.2025 - மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியீடு
07.10.2025 - 30.09.2025 நிலவரப்படி நுழைவு வகுப்பில் நிரப்பப்பட்ட மொத்த மாணவர் எண்ணிக்கை பதிவேற்றம்
08.10.2025 - மொத்த மாணவர் எண்ணிக்கையில் 25% ஒதுக்கீடு, பள்ளி (EMIS Login) உள்நுழைவில் காட்டப்படுதல்
09.10.2025 - தகுதியுடைய மாணவர்களின் விவரங்கள் (ஆதார், பிறப்பு/ இருப்பிடம்/ வருமானம் மற்றும் சாதிச் சான்றிதழ்) பதிவேற்றம்
10.10.2025 மற்றும் 13.10.2025 - தகுதியான / தகுதியற்ற விண்ணப்பதாரர்கள் பட்டியல் அறிவிப்பு. விடுபட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வாய்ப்பு/
14.10.2025 - தகுதி பெற்ற மாணவர் இறுதி பட்டியல் வெளியீடு
15.10.2025 - தகுதியுடைய மாணவர்களை EMIS Portal-இல் உள்ளீடு செய்தல்
16.10.2025 - விண்ணப்பங்கள் 25%ஐ மீறினால், சிறப்பு முன்னுரிமைப் பிரிவுகளுக்குப் பின், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர்
அறிவித்தல்
17.10.2025 - தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை EMIS Portal-இல்உள்ளீடு செய்தல்
கூடுதல் தகவல்களுக்கு, மின்னஞ்சல் முகவரி : rteadmission@tnschools.gov.in மற்றும் உதவி எண் :14417 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ