)
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள மோன்தா புயல், தற்போது ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆந்திரா மற்றும் ஒடிசாவில் உள்ள பல மாவட்டங்களில், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான மோன்தா புயல், தற்போது சென்னைக்கு கிழக்கே சுமார் 480 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இந்த புயல், மேலும் வலுப்பெற்று இன்று அக்டோபர் 28 மாலை அல்லது இரவு நேரத்தில், ஆந்திர பிரதேசத்தின் காக்கிநாடா - மசிலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, ஆந்திர பிரதேசத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது, மணிக்கு 100 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும், மிகக் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

புயலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, மாணவர்களின் பாதுகாப்பிற்காக, பல்வேறு மாநிலங்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளன. புயல் நேரடியாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் ஆந்திராவில் கிருஷ்ணா, கிழக்கு கோதாவரி, கோனசீமா மற்றும் நெல்லூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், அக்டோபர் 28 முதல் 30ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்கள், பாதுகாப்பு கருதி தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
புயலின் தாக்கத்திற்கு உள்ளாகக்கூடிய ஒடிசாவின் எட்டு மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு அக்டோபர் 30ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மல்கங்கிரி, கோராபுட், ராயகடா, கஞ்சம், கஜபதி, கந்தமால், கலஹண்டி மற்றும் நபரங்பூர் ஆகிய மாவட்டங்களில் இந்த விடுமுறை அமலில் இருக்கும். ஆந்திரப் பிரதேசத்தின் பகுதிக்குள் அமைந்துள்ள, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த ஏனாமில், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேற்று முதல் மூன்று நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மோன்தா புயல் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதலே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால், சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே எழுந்துள்ளது. இருப்பினும், புயல் காரணமாக இந்த வாரம் தமிழ்நாட்டில் இதுவரை எந்த மாவட்டத்திற்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. புயலின் நகர்வை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. பொதுமக்கள், வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து, பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ