கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் இன்று (ஜூலை 08) காலை பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கு கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியமே காரணம் என கூறப்படுகிறது. அவர் சம்பவத்தின்போது தனது கடமையை சரிவர செய்யாமல், தூக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, ரயில்வே கேட் திறந்த நிலையில் இருந்தது எனத் தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நாம் தமிழ் கட்சியை சேர்ந்த சீமான், மொழி தெரியாத வடமாநிலத்தவரை கேட் கீப்பராக பணியமர்த்தியதே இந்த விபத்துக்கு காரணம் என குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக நாதக சீமான் எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, கடலூரில் வடமாநிலத்தைச் சேர்ந்த தொடர்வண்டி காவலரண் ஊழியரின் அலட்சியத்தால் பள்ளி வாகனம் மீது திருச்செந்தூரிலிருந்து வந்து கொண்டிருந்த தொடர்வண்டி மோதிய விபத்தில் ஏதுமறியா மூன்று பள்ளிக் குழந்தைகள் பலியான பெருந்துயர நிகழ்வு அதிர்ச்சியும், மனவலியும் தருகிறது.
வடமாநிலத்தைச் சேர்ந்த தொடர்வண்டி ஊழியரின் கவனக்குறைவு எத்தனை பேரிழப்பை ஏற்படுத்திவிட்டது என்பதை எண்ணும்போது நெஞ்சம் பதைபதைக்கிறது. ஈடுசெய்யவே முடியாத பேரிழப்பை சந்தித்து பெருந்துயரக்கடலில் சிக்கித்தவிக்கும் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, பெருந்துயரை பகிர்ந்து கொள்கிறேன். படுகாயமடைந்தவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன். மொழி புரியாத வடமாநிலத்தவரை தமிழ்நாட்டில் காவலரண் ஊழியராக பணிபுரிய அனுமதித்ததன் விளைவே 3 குழந்தைகள் பலியாக முதன்மைக் காரணமாகும்.
தமிழர்களை இந்தி கற்கச்சொல்லி திணிப்பதில் காட்டும் அதிகாரத்தையும், ஆர்வத்தையும் தமிழ்நாட்டில் பணிபுரிய வரும் வடமாநிலத்தவருக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதில் ஏன் இந்திய ஒன்றிய அரசு காட்டுவதில்லை? தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ்நாட்டில் பணிவாய்ப்பு என்பது உரிமை பாதுகாப்பு முழக்கம் மட்டுமன்று; உயிர் பாதுகாப்பு முழக்கமுமாகும். அதனை கடைப்பிடிக்கத் தவறியதன் விளைவே தற்போது 3 குழந்தைகள் பலியான துயரம் நிகழ்ந்தேறியுள்ளது. இதற்கு முழுக்க முழுக்க ஒன்றிய அரசே பொறுப்பேற்க வேண்டும்.
இதுபோன்ற கொடுமைகள் இனி எங்கும் நிகழாதவாறு தடுக்க இனியேனும் அந்தந்த மாநிலங்களில் அம்மண்ணின் மக்களை மட்டுமே பணியமர்த்த ஒன்றிய அரசு உடனடியாக உத்தரவிட வேண்டுமென இந்திய ஒன்றிய அரசினை வலியுறுத்துகிறேன்.உயிரிழந்த 3 குழந்தைகளுக்கும் என்னுடைய கண்ணீர் வணக்கத்தை செலுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் படிங்க: காலையில் கடும் வெயில்... மாலையில் குளிர்... சென்னையில் மழை தொடருமா...?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









