)
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த வாரம் சனிக்கிழமை செப்டம்பர் 28ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சூழலில், சம்பவத்திற்கு மையப்புள்ளியாக பார்க்கப்பட்ட விஜய், 3 நாட்கள் கழித்து வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்தார்.
அதோடு 5 மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டோம், ஆனால் கரூரில் மட்டும் எப்படி என கேள்வி எழுப்பிய அவர், சிஎம். சார் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், மக்களை ஒன்று செய்யாதீர்கள் என சவால் விடும் வகையில் பேசி இருந்தார். ஏற்கனவே அவர் மெளனமாக இருந்தது விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில், அவர் வீடியோவில் இப்படியாக பேசியது கூடுதல் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
பலரும் நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்காமல், இப்படியாக பேசுவது சரியல்ல என கடுமையாக விமர்சித்தனர். இந்த நிலையில், விஜய் சென்றதால்தான் கட்டுக்கடங்காத கூட்டம் வந்தது. அளவுக்கு அதிகமான கூட்டம் வந்ததால்தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஆனால் அவரின் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக சாடி இருக்கிறார்.
விருதுநகரில் காமராஜர் நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பளர் சீமான். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, விஜய் வெளியிட்ட வீடியோவை பார்த்தேன். திரைப்பட வசனம் போல் இருக்கிறது. இது ஒரு நல்ல அணுகுமுறை அல்ல. சிஎம் சார் என சொல்வதே சிறுபிள்ளை பேசுவது போல் இருக்கிறது.
அவரது இதயத்தில் வலியோ, காயமோ இல்லை. அப்படி இருந்திருந்தால், அது அவரது மொழியில் வெளிப்பட்டிருக்கும். கரூர் நிகழ்வை பொறுத்தவரையில், விஜய் அங்கு சென்றதாந்தான் நடந்தது. அவர் போகவில்லை என்றால் இது நடந்திருக்காது. அப்படி என்றால் யார் காரணம்? மற்ற இடங்களில் நடக்கவில்லை என்று சொல்கிறார். அப்படி என்றால் அங்கு நடந்திருக்க வேண்டும் என சொல்கிறாரா?
மற்ற கூட்டங்களிலும் மக்கள் மயங்கி விழுந்தனர். இங்கு கூட்ட அதிகமாக இருந்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்திருக்கின்றனர். கூட்டத்தில் பலர் கத்தியால் குத்து வாங்கியதாக கூறுகிறார்கள். நான் மருத்துவமனைக்கு சென்றேன். அப்படி கத்தியால் குத்து வாங்கி யாரும் இல்லை. திரைக்கவர்ச்சி நாட்டை ஆள முயற்சிக்கிறது. திரை மயக்கம், திரை போதையில் உள்ளனர் என கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ