சென்னையிலிருந்து டெல்லி சென்ற விமானத்தில், 25 வயதுடைய விமான பணிப்பெண்ணிடம் மதுபோதையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக திருவள்ளூர் நகராட்சியின் திமுக கவுன்சிலர் மற்றும் அவரது நண்பரான வழக்கறிஞர் ஆகிய இருவரை சென்னை விமான நிலைய மகளிர் காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 25ம் தேதி, சென்னையிலிருந்து டெல்லி செல்வதற்காக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் திருவள்ளூர் நகராட்சியின் திமுக கவுன்சிலரான பிரபாகரன் மற்றும் அவரது நண்பரும், வழக்கறிஞருமான தியாகு ஆகியோர் பயணித்துள்ளனர்.
பயணத்தின் போது இருவரும் கடும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது விமானத்தில் பணியில் இருந்த 25 வயதுடைய பணிப்பெண்ணை அவர்கள் ஒருமையில் அழைத்துள்ளனர். அந்த பெண்ணின் ஊர் பெயரை கேட்டு தொடர்ந்து கேலி செய்த அவர்கள், ஒரு கட்டத்தில் எல்லை மீறி அந்த பெண்ணின் மீது கை வைத்து பாலியல் ரீதியான சீண்டல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் படிக்க | TN GOVT: உங்கள் வங்கி கணக்கில் ரூ.3,500 வந்ததா? எப்படி செக் செய்வது?
பணிப்பெண் புகார்
இந்த அத்துமீறலால் அதிர்ச்சியடைந்த அந்த பணிப்பெண், விமானம் டெல்லியை சென்றடைந்ததும் இதுகுறித்து தனது உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து அன்றைய தினமே, சென்னை மீனம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் அவர் அதிகாரப்பூர்வமாக புகாரளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறையினர், சம்பவத்தன்று பிரபாகரன் மற்றும் தியாகு ஆகிய இருவரையும் நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணைக்கு பிறகு, பிப்ரவரி 26ம் தேதி மீண்டும் முறையான விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தி அவர்களை அனுப்பி வைத்தனர்.
விசாரணைக்கு வராததால் அதிரடி கைது
போலீசார் சம்மன் அனுப்பியும், இருவரும் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த மீனம்பாக்கம் மகளிர் காவல் துறையினர், அவர்கள் இருவர் மீதும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே, நேற்று மாலை பிரபாகரனும் தியாகுவும் டெல்லியிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் மீண்டும் சென்னை திரும்பியுள்ளனர். இந்த தகவலை முன்கூட்டியே அறிந்த போலீசார், சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இருவரும் விமானத்திலிருந்து இறங்கியதும், அங்கேயே வைத்து அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைப்பு
கைது செய்யப்பட்ட திமுக கவுன்சிலர் பிரபாகரன் மற்றும் வழக்கறிஞர் தியாகு ஆகிய இருவரிடமும் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தேவைப்பட்டால், காவல் துறை அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளது. ஆளும் கட்சியின் பொறுப்பில் உள்ள ஒரு கவுன்சிலரே, பொதுவெளியில் அதுவும் விமானத்தில் பணிப்பெண்ணிடம் மதுபோதையில் அத்துமீறிய சம்பவம் பொதுமக்களிடையேயும், எதிர்க்கட்சிகளிடையேயும் கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. கட்சி தலைமை அவர் மீது என்ன வகையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் படிகக் | NDA கூட்டணியில் சசிகலா? அமித்ஷாவுடன் ஆலோசனை.. இபிஎஸ் பேட்டி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









