12 சட்டப்பேரவை குழுக்களை அமைக்க சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை இல்லையென்றால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு சென்றனர். திமுக தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து கொடுக்க சென்றனர். ஆனால், ஓ.பன்னீர்செல்வத்தை அவர்கள் சந்திக்கவில்லை.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது:- மதிப்பீட்டுக் குழு, பேரவைக்குழு, சட்டவிதிகள் குழு உள்ளிட்ட 12 குழுக்கள் இதுவரை அமைக்கப்பட வேண்டும். ஆனால் ஆட்சி அமைந்து 5 மாதங்கள் ஆன நிலையில் இதுவரை இந்தக் குழுக்கள் அமைக்கப்படவில்லை. இது தொடர்பாக ஏற்கெனவே நானும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகனும் சட்டப்பேரவையில் சபாநாயகரிடம் பேசியிருக்கிறோம். அப்போது அவர் சட்டப்பேரவை குழுக்களை அமைப்பதாக கூறினார். பேரவைக் குறிப்பிலும் அவர் அளித்த உறுதிமொழி பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில், சட்டப்பேரவை குழுக்கள் இதுவரை அமைக்கப்படாததால் அது தொடர்பான கடிதம் ஒன்றை சபாநாயகரிடம் கொடுக்கவே பேரவைக்கு வந்தோம். ஆனால், அலுவலகத்தில் அவர் இல்லை. எனவே, பேரவைச் செயலாளரிடம் கடிதத்தை கொடுத்தோம். சட்டப்பேரவை குழுக்களை அமைப்பது தொடர்பாக சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி அவர் நடவடிக்கை எடுக்காவிட்டால் அவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருவோம். இது சம்மந்தமா தமிழக பொறுப்பு ஆளுநரையும் தேவைப்பட்டால் சந்தித்து பேசுவோம் என தெரிவித்தார்.