MK Stalin vs Nirmala Sitharaman: நெல் கொள்முதலுக்கு வழங்கி வரும் ஊக்கத்தொகை குறித்து மத்திய அரசு, தமிழ்நாடு அரசுக்கு அனுப்பியிருந்த கடிதத்தை மையமிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இடையே கடுமையான வார்த்தை போர் நடந்து வருகிறது. இந்த பிரச்னை ஏப்ரல் 10ஆம் தேதி தஞ்சாவூரில் தொடங்கியதில் இருந்து தற்போது வரை நடந்துள்ளவை என்ன?, இதன் முழு பின்னணி என்ன? உள்ளிட்ட விவரங்களை இங்கு விரிவாக காணலாம்.

MK Stalin vs Nirmala Sitharaman, Paddy Incentive Full Details: தமிழ்நாடு சட்டப்பேரவை 2026 தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தொடங்குகிறது. இதனால், வரும் ஏப்ரல் 21ஆம் தேதி மாலையுடன் தேர்தல் பரப்புரை நிறைவுபெறும்.
எனவே, ஒரு வாரக்காலம் மட்டுமே தேர்தல் பரப்புரைக்கு நேரம் உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் வாக்காளர்களை குறிவைத்து வாக்கு வேட்டை நடத்தி வருகிறது.
இந்தச் சூழலில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடையே நெல் சாகுபடிக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை குறித்து பெரும் வார்த்தை போர் நிகழ்ந்து வருகிறது.
ஸ்டாலின் - நிர்மலா சீதாராமன் இடையே தொடர்ச்சியாக பதிலடிகள் வந்துகொண்டே இருக்கின்றன. அந்த வகையில், இந்த விவகாரத்தில் ஆதி முதல் தற்போதைய அப்டேட்டை வரை விரிவாக இங்கு காணலாம்.
கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தஞ்சாவூர் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசியதுதான் இந்த பிரச்னையின் ஆதி ஊற்று. தஞ்சாவூரில் அவர் பேசியபோது, "ஒன்றிய பாஜக அரசு, தமிழ்நாடு அரசுக்கு எழுதியிருக்கும் கடிதம் ஒன்றை அதிகாரிகள் தன்னிடம் கொடுத்தனர். அதில், நெல் சாகுபடிக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகை காரணமாக நெல் உற்பத்தி பெருகிவிட்டதாம். அப்படி பெருகுவதால் பல பிரச்னைகள் வருகிறதாம்.
#ThanjavurWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக pic.twitter.com/vK7cJQZXjm
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) April 10, 2026
எனவே, தமிழ்நாடு அரசு வழங்கி வரும் நெல் சாகுபடிக்கான ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூறியிருக்கிறார்கள். மொத்தத்தில் நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்கக் கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது" என்றார்.
இபிஎஸ்-க்கு கேள்வி: தன்னை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என கூறிக்கொள்ளும் நிர்மலா சீதாராமனின் நிதி அமைச்சகம் இந்த கடிதத்தை அனுப்பியிருக்கிறது என்றும் எனவே, தமிழர் என்ற உணர்வு இருந்தால் ஒன்றிய அரசை எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் கண்டிப்பாரா என்றும் எச்சரித்திருந்தார். மேலும், வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் பாஜகவை கண்டிக்க எடப்பாடி பழனிசாமி தயாரா என கேள்வி எழுப்பியிருந்தார்.
ஊக்கத்தொகையை அதிகரித்த ஸ்டாலின்: 2021 தேர்தல் வாக்குறுதியின்படி, ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,500 திமுக வழங்கியது என்றும் 2026 வாக்குறுதியின்படி, ஆட்சிக்கு வந்தால் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
உண்மைக்கு புறம்பானது: மு.க. ஸ்டாலினின் இந்த குற்றச்சாட்டுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவரது X பக்கத்தில் நேற்று (ஏப். 12) மாலை 6.05 மணிக்கு, நீண்ட பதிவு ஒன்றை போட்டு பதிலடி கொடுத்தார்.
அதில்,"நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு தமிழகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பான, அரசியல் உள்நோக்கம் கொண்ட, தமிழக விவசாயிகளை திசைதிருப்பும் நோக்கில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு திரிபு என்பது தெளிவாகிறது" என குறிப்பிட்டிருந்தார்.
நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு தமிழகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் @mkstalin அவர்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பான, அரசியல் உள்நோக்கம் கொண்ட, தமிழக விவசாயிகளை திசைதிருப்பும்…
— Nirmala Sitharaman (@nsitharaman) April 12, 2026
ஆலோசனை மட்டும்தான்: மேலும், அதில், "தமிழகத்திற்கு மட்டுமல்ல, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்ட தகவல், மாநில அரசுகள் வழங்கும் ஊக்கத்தொகை கொள்கைகளை தேசிய முன்னுரிமைகளுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற ஒரு ஆலோசனையே ஆகும்" என விளக்கம் அளித்திருந்தார். அதாவது, அது ஆலோசனை மட்டும்தான் என்றும் அது உத்தரவு இல்லை என்று அவர் விளக்கம் அளித்தார்.
மாநில அதிகாரத்தை பறிக்கவில்லை: தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது என்றும், மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது என்றும் திமுக அரசு மீது நிர்மலா சீதாராமன் சாடினார்.
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) மேல் ஊக்கத்தொகை அல்லது போனஸ் அறிவிப்பது என்பது எப்போதும் மாநில அரசுகளின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும் அந்த அதிகாரத்தை யாரும் பறிக்கவில்லை என்றும் ஸ்டாலினுக்கு அவர் பதிலடி கொடுத்தார்.
சுயநல அரசியல்: முதல்வர் ஸ்டாலின் தேச நலனில் அக்கறை கொண்டு ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவதற்குப் பதிலாக, தங்களின் குறுகிய சுயநல அரசியல் ஆதாயத்திற்காகத் திட்டமிட்டுத் திசைதிருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் என்றும் அரசியலமைப்புச் சட்டப்படி உயர் பதவியில் இருக்கும் ஒரு முதலமைச்சருக்கு இத்தகைய நடத்தை அழகல்ல என்றும் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டினார்.
பயிர் பல்வகைப்படுத்துதலை ஊக்குவிக்கவே: மத்திய அரசின் அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கியுள்ள இந்த ஆலோசனை என்பது பயிர் பல்வகைப்படுத்துதலை (Crop Diversification) ஊக்குவித்தல் மற்றும் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றில் சுயசார்பு அடைவதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஆக்கப்பூர்வமான மற்றும் தொலைநோக்குப் பார்வை என நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் நிலைபாட்டை விளக்கினார். இதன் மூலம், உள்நாட்டுத் தேவை அதிகமாக உள்ள பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து, அதிக லாபத்தைப் பெற வழிவகை செய்யப்படும் என்றார்.
நிர்மலா சீதாராமனின் இந்த குற்றச்சாட்டுக்கு இன்று (ஏப்ரல் 13) காலை 6.45 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுக்கும் வகையில் X பக்கத்தில் பதிவிட்டார். அந்த பதிவில், "கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை. அப்படி, பேசவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை" என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 'நெல்லுக்குத் தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகையால் விளைச்சல் பெருகிக் கொண்டே போகிறது. எனவே, இந்த ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும்' எனத் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளருக்குத் தங்களின் அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில் மிகத் தெளிவாகவே உள்ளது என ஸ்டாலின் தெரிவித்தார்.
மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களே,
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) April 13, 2026
"நெல்லுக்குத் தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகையால் விளைச்சல் பெருகிக் கொண்டே போகிறது. எனவே, இந்த ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும்" எனத் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளருக்குத் தங்களின் அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில் மிகத் தெளிவாகவே உள்ளது.… https://t.co/R9UqWMO0CU
முரண்பாடுகளை சுட்டிக்காட்டிய முதல்வர்: "எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், தற்போது மாநில அரசால் தரப்படும் ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்யுமாறும், நெல்லுக்கு இத்தகைய ஊக்கத்தொகை வழங்குவதை நிறுவத்துவது தொடர்பாகப் பரிசீலனை செய்யவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். தங்களுடைய இந்தப் பதிவில், "குறைந்தபட்ச ஆதார விலையைத் தாண்டி ஊக்கத்தொகை வழங்குவது மாநில அரசின் முடிவு எனவும், அதனை யாரும் பறிக்கவில்லை" என்றும் கூறியிருக்கிறீர்கள்" என ஸ்டாலின் நிர்மலா சீதாராமனின் பதிவில் இருந்த முரண்பாடுகளை சுட்டிக்காட்டும் விதமாக குறிப்பிட்டிருந்தார்.
எனவே, தங்களது கூற்று உண்மைதானென்றால், அந்தக் கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தாங்கள் தயாரா? எனவும் நிர்மலா சீதாராமனை நோக்கி கேள்வியெழுப்பியிருந்தார்.
தயக்கம் ஏதுமில்லை: இந்நிலையில், மு.க.ஸ்டாலின் கேட்டபடி, நிதி அமைச்சகத்தின் கடிதத்தை நிர்மலா சீதாராமன் இன்று மதியம் 12.16 மணிக்கு X பக்கத்தில் வெளியிட்டார். அந்தக் கடிதத்திற்கான இணைப்பை வழங்குவதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை என கூறி அந்த கடிதத்துடன் நீண்ட விளக்கத்தையும் வெளியிட்டிருந்தார்.
உத்திசார்ந்த தேவை: அதன்படி, "அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியைச் சார்ந்திருக்கும்போது, நாட்டின் உணவுப் பாதுகாப்பு என்பது வெளிப்புறத் தாக்கங்களுக்கும் விலை ஏற்ற இறக்கங்களுக்கும் உள்ளாகும் அபாயம் உள்ளது. இந்தியா போன்ற பெரிய நாட்டிற்கு இது சரியான சூழல் அல்ல.
பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களின் உள்நாட்டு உற்பத்தியை விரிவுபடுத்துவது என்பது வெறும் பொருளாதாரத் தேவை மட்டுமல்ல, அது ஒரு உத்திசார்ந்த (strategic) தேவையும் கூட. சமையல் எண்ணெய் தேவையைக் காட்டிலும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி குறைவாக இருப்பதால்தான் நாம் அதிகளவில் பாமாயிலை இறக்குமதி செய்கிறோம் என்பது அவருக்குத் தெரியாதா? பருப்பு வகைகளிலும் இதே நிலைதான் நிலவுகிறது.
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு வேளாண் சார்ந்த அனைத்துத் தரப்பினரும் ஆக்கப்பூர்வமான, தொடர்ச்சியான மற்றும் நேர்மறையான ஈடுபாடு மேற்கொள்வது அவசியமானதாகும். ஆனால், முதலமைச்சர் திரு. ஸ்டாலின் @mkstalin அவர்களும் அவரது கட்சியும் எதில் கைதேர்ந்தவர்களோ அதையே இப்போதும்… pic.twitter.com/W7avdTg8mU
— Nirmala Sitharaman (@nsitharaman) April 13, 2026
தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையே இடைவெளி உள்ள பயிர்களுக்கு விவசாயிகள் சிறந்த விலையைப் பெற முடியும் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் விவசாயிகளின் நலன் முதலமைச்சர் ஸ்டாலினின் மனதில் இல்லை.
இந்தியாவின் இலக்கு: பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறுதானியங்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம், புரதம் நிறைந்த பயிர்கள் வழியாக ‘ஊட்டச்சத்து பாதுகாப்பை’ உறுதி செய்யவும், சமையல் எண்ணெய் இறக்குமதிச் செலவைக் குறைப்பதன் மூலம் ‘பொருளாதார நிலைத்தன்மையை’ அடையவும் இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது" என நீண்ட விளக்கத்தை அளித்திருக்கிறார்.
பல மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டன: மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட இந்தத் தகவல், தேசிய உணவுப் பாதுகாப்பிற்கான பொறுப்பைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு அழைப்பாகும் என்றும் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து பெரும்பாலான மாநில அரசுகள் இதைப் புரிந்துகொண்டு, கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகின்றன என்றும் தெரிவித்துள்ள நிர்மலா சீதாராமன், முதலமைச்சர் ஸ்டாலின் மட்டுமே இதை ஒரு சர்ச்சையாக்கி ஆதாயம் தேடப் பார்க்கிறார் என்றும் சாடியிருக்கிறார்.
"நீர் அதிகம் தேவைப்படும் உபரிப் பயிர்களுக்குப் (நெல், கரும்பு) பதிலாக, இந்தியாவிற்கு உண்மையில் தேவைப்படும் அத்தியாவசியப் பயிர்களை உற்பத்தி செய்வதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படும்போது மட்டுமே உண்மையான உணவு இறையாண்மை சாத்தியமாகும்.
வெளிநாட்டு நலனுக்கு முக்கியத்துவமா?: மத்திய அரசுக்கு எதிரான வெற்றுப் பேச்சுக்களில் நேரத்தை வீணடிப்பதற்குப் பதிலாக, பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களில் நம்மைச் சுயசார்பு கொண்டவர்களாக மாற்றுவதை விடுத்து, வெளிநாட்டு நலன்களுக்கு ஏன் வாய்ப்புகளை வழங்குகிறார் என்பதைப் பற்றி தமிழக மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும்" என நிர்மலா சீதாராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அனைத்து மாநிலங்களுக்கும் செலவினத் துறைச் செயலாளர் எழுதிய கடிதத்தை வெளியிடுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் சவால் விடுப்பது ஆச்சரியமளிக்கிறது என்றும் நிர்மலா சீதாராமன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
ஸ்டாலினின் வெற்று வீரம்: "அந்த கடிதம் ஏற்கனவே அவரிடம் உள்ளது. அவர் அதைத் திட்டமிட்டே தவறாகச் சித்தரிக்கிறார். அது அவர் தரப்பு வாதத்திற்கு வலு சேர்த்திருந்தால், அவரே அதை வெளியிட்டிருப்பார். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. இத்தகைய சவால்களை விடுப்பதன் மூலம் அவர் வெற்று வீரத்தையே வெளிப்படுத்துகிறார்" என ஸ்டாலின் மீது அட்டாக்கை தொடர்ந்தார்.
ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு: இறுதியாக, "தேச நலனில் துளியும் அக்கறை கொண்ட எந்தவொரு முதலமைச்சரும் இத்தகைய ஆக்கப்பூர்வமான ஆலோசனையை வரவேற்றிருப்பார்கள். ஆனால், ஸ்டாலின் ஒரு பயனுள்ள ஆலோசனையைத் திட்டமிட்டு ஒரு குறையாகச் சித்தரிக்கிறார். ஏனெனில், திமுகவைப் பொறுத்தவரை இந்தியாவின் உத்திசார்ந்த தேவைகள் ஒரு பொருட்டல்ல, அரசியல் ஆதாயம் தேடுவது மட்டுமே அவர்களின் நோக்கம்" என்றும் திமுக அரசு இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக உள்நோக்கம் கற்பிக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
நிர்மலா சீதாராமனும், ஸ்டாலின் கேட்டுக்கொண்டபடி கடிதத்தை வெளியிட்ட நிலையில், தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் நிர்மலா சீதாராமனை குறிப்பிட்டு மீண்டும் ஒரு பதிலடியை வழங்கி உள்ளார்.
குட்டு அம்பலமாகிவிட்டது: இன்று மாலை 5.04 மணிக்கு வெளியிட்ட பதிவில், "தாங்கள் சொல்லியது உண்மையாக இருந்தால் கடிதத்தை வெளியிட்டிருந்தாலே போதும். மக்கள் படித்து உண்மையை அறிந்துகொண்டிருப்பார்கள். அதற்கு, இவ்வளவு நீளமான பொழிப்புரை எழுதி, கடிதத்தை வெளியிட்டதிலேயே தங்களின் குட்டு அம்பலமாகிவிட்டது" என சாடி உள்ளார்.
மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் அவர்களே,
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) April 13, 2026
தாங்கள் சொல்லியது உண்மையாக இருந்தால் கடிதத்தை வெளியிட்டிருந்தாலே போதும். மக்கள் படித்து உண்மையை அறிந்துகொண்டிருப்பார்கள்.
அதற்கு, இவ்வளவு நீளமான பொழிப்புரை எழுதி, கடிதத்தை வெளியிட்டதிலேயே தங்களின் குட்டு அம்பலமாகிவிட்டது.
மேலும்,… https://t.co/EAnfLIeztK pic.twitter.com/vmXlHDPki5
அதாவது, நெல்லுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசு அதன் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறது. இதை குறிப்பிட்டுதான் குட்டு அம்பலமாகிவிட்டது என முதலமைச்சர் ஸ்டாலின் சாடியிருக்கிறார்.
அதேபோல், இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநில அரசுகளும், நெல்லுக்கு ஊக்கத்தொகை தரவேண்டாம் எனும் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாக நிர்மலா சீதாரமன் தெரிவித்திருப்பதும் உண்மைக்குப் புறம்பானது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பினராயி விஜயனின் பதிவு: அதற்கு, கடந்த பிப்ரவரி மாதம், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இதுகுறித்து வெளியிட்ட பதிவே சாட்சி என அந்த பதிவின் புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.
பினராயி விஜயன் கடந்த பிப். 8ஆம் தேதி போட்ட அந்த பதிவில், "கேரள அரசால் வழங்கப்பட்டு வரும் ஒரு கிலோ நெல்லுக்கு ரூ.6.31 என்ற போனஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்ற ஒன்றிய அரசின் கோரிக்கையையும், உணவு உற்பத்தியை ஒரு சுமை என்று முத்திரை குத்துவதும் நமது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அவமானமாகும்.
சந்தையை திறந்துவிடுகிறதா ஒன்றிய அரசு: கார்ப்பரேட் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் நிலையில், நமக்கு உணவளிப்பவர்களுக்கு வழங்கப்படும் ஒரு சிறிய ஊக்கத்தொகை சுமையாகக் கருதப்படுவது. இந்த இரட்டை வேடம் ஏற்றுக்கொள்ள முடியாதது. புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கான நமது இந்திய சந்தைகளை திறப்பதற்கான முதல் படி இதுவா?
எனவே, தனது விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் கேரளாவைத் தண்டிப்பதை நிறுத்திவிட்டு, எங்களுக்கு நிலுவையில் உள்ள கொள்முதல் நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொள்கிறேன்" என பதிவிட்டிருந்தார்.
ஸ்டாலினுக்கும், நிர்மலா சீதாராமனுக்கும் பெரும் வார்த்தை போரை ஏற்படுத்திய அதே கடிதத்தை குறிப்பிட்டுதான் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் மத்திய அரசை கண்டித்துள்ளார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. மத்திய நிதி அமைச்சகம் அனுப்பிய அந்த கடிதம், கடந்த ஜனவரி மாதம் 9ஆம் தேதியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நெல் ஊக்கத்தொகை விவகாரத்தில் மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான இந்த மோதல் வெற்று அரசியல் விவாதமாக மட்டுமின்றி, கூட்டாட்சி தத்துவம் மற்றும் விவசாயக் கொள்கை குறித்த ஆழமான உரையாடலாக மாறியுள்ளது.
பயிர் மாற்றத்தை மத்திய அரசு வலியுறுத்தினாலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னிறுத்தி மாநில உரிமைகளுக்காகத் தமிழக அரசு போராடுவதையே ஸ்டாலின் vs நிர்மலா சீதாராமன் இடையேயான இந்த வார்த்தைப் போர் பிரதிபலிக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ