)
Nellai Kavin Murder Case, Subhashini Video: நெல்லையில் கவின் கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, அவர் காதலித்ததாக கூறப்படும் பெண் சுபாஷினி வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
முதலில் வெளிவந்த வீடியோவில், "நான் தான் சுபாஷினி. எனக்கும் கவினுக்கும் இடையேயான என்ன உறவு இருந்தது என்பது குறித்து எனக்கும், அவனுக்கும் மட்டும்தான் தெரியும்.
Another video surfaced on social media pic.twitter.com/RYwVjW5X0J
— Thinakaran Rajamani (@thinak_) July 31, 2025
உங்கள் யாருக்கும் தெரியாது, எங்கள் உறவு பற்றி யாரும் பேச வேண்டாம். கவின் கொலைக்கும் என் தந்தை, தாய் ஆகியோருக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்களை தண்டிக்க வேண்டும் என நினைக்க வேண்டாம், அவர்களை விட்டுவிடுங்கள்" என பேசியிருந்தார். முதல் வீடியோ வெறும் 46 விநாடிகள் மட்டுமே வந்தது.
மேலும், சுபாஷினி பேசி அடுத்த வெளியான மற்றொரு வீடியோவில், "நானும் கவினும் உண்மையாக காதலித்தோம். கொஞ்சம் செட்டிலாக நேரம் தேவைப்பட்டது. மே 30ஆம் தேதி அன்று கவினும், சுர்ஜித்தும் பேசிக்கொண்டனர். அப்போது சுர்ஜித் எனது காதல் விவகாரத்தை வீட்டில் சொல்லிவிட்டான். தொடர்ந்து, தந்தை என்னிடம் 'நீங்கள் காதலிக்கிறீர்களா...' என்ற கேட்டார். கவின் 6 மாதம் டைம் கேட்டிருந்ததால் நான் காதலிக்கவில்லை என சொல்லிவிட்டேன்.
அதற்குள் இப்படி ஆகிவிட்டது, இரண்டு பேருக்கும் (கவின் - சுர்ஜித்) இடையே என்ன உரையாடல் நடந்தது என்பது எனக்கு தெளிவாக தெரியவில்லை. சுர்ஜித் கவினுக்கு தொலைப்பேசியில் அழைத்து, 'நீங்கள் (கவின்) பொண்ணு கேட்க வாங்க... இவ திருமணத்தை முடித்தால்தான் எனது Proffession-ஐ பார்க்க முடியும்' என சொல்லியிருக்கிறான் என்பது எனக்கு தெரியும்.
27ஆம் தேதி அன்று என்ன நடந்தது என்றால்... அன்று கவின் வருவது எனக்கு தெரியாது. நான் 28ஆம் தேதி மாலைதான் வர சொல்லியிருந்தேன். அவங்க தாத்தாவுக்கு தலைக்கு பிரச்னை இருந்ததால் ரூம் பாத்துட்டு அட்மிட் பண்ணனும் என்று யோசித்திருந்தேன். 27ஆம் தேதி மதியம் மங்கம்மாள் சாலைக்கு வந்த பின்னர்தான் அவர்கள் வந்துவிட்டார்கள் என்பதே எனக்கு தெரியும். உடனே நான் அவர்களை IP-க்கு (உள்நோயாளி பிரிவுக்கு) அழைத்துச் சென்றேன். கவின் உள்ளே வந்தான், ஆனால் நான் அவனின் தாய் மற்றும் மாமா உடன் மட்டும்தான் பேசினேன். பேசிக்கொண்டிருக்கும்போதே கவின் வெளியே சென்றுவிட்டான்.
கவினின் தாயும், மாமாவும் புறப்படும்போதுதான் கவின் எங்கே என்றே நாங்கள் யோசித்தோம். நான் சிகிச்சை குறித்து அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவனின் அம்மாவும், நானும் தொலைப்பேசியில் அழைத்தும் எடுக்கவில்லை. அவனின் அம்மா பசிக்குது என சொன்னதும், 'சரி நீங்கள் போய் சாப்பிடுங்கள், அவனை நான் வர சொல்றேன்" என்றேன். அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு... இதனால் தேவையில்லாமல் யாரும் வதந்தியை பரப்ப வேண்டாம், உங்களுக்கு தோன்றுவதை பேசாதீர்கள். எனது அப்பா - அம்மாவுக்கு இதில் சம்பந்தமும் கிடையாது, அவர்களுக்கு தெரியாது. இதை இத்துடன் விட்டுருங்க, விட்டுருங்க... அவ்வளவுதான்" என பேசியிருக்கிறார். இந்த வீடியோவில் சுமார் 2.13 நிமிடம் பேசியிருந்தார்.
கடந்த ஜூலை 27ஆம் தேதி அன்று, தூத்துக்குடியைச் சேர்ந்த கவின் (27) திருநெல்வேலி கேடிசி நகரில் சுபாஷினியின் தம்பி சுர்ஜித் (24) என்பவரால் அரிவாளால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பட்டியலின சமூகத்துவரான கவின், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த சுபாஷினியை காதலித்ததால் அவரது தம்பியால் ஆணவக்கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
சுர்ஜித், அவரது தந்தை சரவணன் மற்றும் தாய் கிருஷ்ண குமாரி ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு பிரிவு உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சுபாஷினியின் தாய், தந்தை இருவரும் காவலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கொலை செய்த பின்னர் சுர்ஜித் பாளையங்கோட்டை காவல்துறையில் சரணடைந்த நிலையில் அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து அவரது தந்தை சரவணனையும் நெல்லை காவல்துறையினர் நேற்றிரவு (ஜூலை 30) கைது செய்தனர்.
மேலும், தாய் - தந்தை இருவரையும் கைது செய்தால் மட்டுமே கவினின் உடலை பெற்றுக்கொள்வோம் என கவினின் குடும்பத்தினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். கொலையாளி சுர்ஜித்தின் தாயையும் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்நிலையில், தனது தாய், தந்தைக்கும் இந்த கொலைக்கும் தொடர்பில்லை என சுபாஷினி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ