)
தமிழகத்தில் வேளாண் பட்டதாரிகளை தொழில்முனைவோராக மாற்றுவதற்கும், விவசாயிகளுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்குவதற்கும், தமிழ்நாடு அரசு, முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம், வேளாண் பட்டதாரிகளின் சுயதொழில் கனவை நனவாக்குவதோடு, விவசாயிகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும், தமிழகத்தில் உள்ள வேளாண்மை கல்லூரிகளில் இருந்து சுமார் 4,000 வேளாண் பட்டதாரிகளும், 600க்கும் மேற்பட்ட வேளாண் பட்டயதாரர்களும் படிப்பை முடித்து வெளியே வருகின்றனர். அவர்களின் படிப்பறிவையும், தொழில்நுட்ப திறனையும் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் மாற்றி, வேளாண் உற்பத்தியை பெருக்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் கீழ், தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 1,000 உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
சொந்தமாக தொழில் தொடங்க விரும்பும் வேளாண் பட்டதாரிகளுக்கு, உழவர் நல சேவை மையம் அமைக்க 30% மானியம் வழங்கப்படுகிறது. ரூ. 10 லட்சம் முதலீட்டில் மையம் அமைத்தால், ரூ.3 லட்சம் மானியம் கிடைக்கும். ரூ.20 லட்சம் முதலீட்டில் மையம் அமைத்தால், ரூ.6 லட்சம் மானியம் கிடைக்கும். மையம் அமைப்பதற்கு தேவையான விதை விற்பனை உரிமம், உர விற்பனை உரிமம் மற்றும் பூச்சிக்கொல்லி விற்பனை உரிமம் போன்றவற்றை வேளாண்மை துறையே பெற்று தரும். மையத்தை சிறப்பாக நடத்துவதற்கும், தொழில்நுட்ப திறனை மேம்படுத்துவதற்கும், மாவட்ட அளவில் உள்ள உழவர் பயிற்சி நிலையம் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும்.
இந்த உழவர் நல சேவை மையங்கள், விவசாயிகளுக்கு ஒரு முழுமையான சேவை மையமாக செயல்படும். விவசாயத்திற்கு தேவையான தரமான விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்றவை ஒரே இடத்தில் கிடைக்கும். பயிர்களில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களில் இருந்து பயிர்களை பாதுகாப்பது, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது, வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டுவது, வேளாண் காப்பீடு செய்வது, மற்றும் பயிர் கடன் பெறுவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்படும்.
தோட்டக்கலை, வேளாண்மை, வேளாண் வணிகம் அல்லது வேளாண் பொறியியலில் பட்டப்படிப்பு/பட்டய படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு 20 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும். கணினி திறன் பெற்றிருக்க வேண்டும், அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களில் பணியில் இருக்க கூடாது.
முதலில், உழவர் நல சேவை மையம் அமைப்பதற்கான ஒரு விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க வேண்டும். அந்த திட்ட அறிக்கையை, தேசியமயமாக்கப்பட்ட அல்லது கூட்டுறவு வங்கிகளில் சமர்ப்பித்து, கடன் பெற வேண்டும். வங்கி, கடனுக்கு ஒப்புதல் வழங்கிய பிறகு, அந்த கடன் ஒப்புதல் ஆவணம் மற்றும் தேவையான மற்ற ஆவணங்களுடன் https://www.tnagrisnet.tn.gov.in/KaviaDP/register என்ற இணையதளத்தில் மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம். அனைத்து தகுதிகளும் சரியாக இருக்கும் பட்சத்தில், மானிய தொகை விண்ணப்பதாரரின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்படும். இந்த திட்டம் குறித்த கூடுதல் தகவல்களுக்கு, உங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்தை அணுகலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ