திருப்பரங்குன்றம் விவகாரம்: சென்னை வேல் பேரணி வழக்கு - உச்ச நீதிமன்றம் உத்தரவு என்ன?

Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக சென்னையில் வேல் பேரணி நடத்த உச்ச நீதிமன்றத்தில் இந்து அமைப்பின் தலைவர் யுவராஜ் என்பவர் தொடர்ந்து மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

Written by - Sudharsan G | Last Updated : Mar 24, 2025, 03:30 PM IST
  • பிப். 18இல் சென்னையில் வேல் பேரணி நடத்த அனுமதி கோரப்பட்டது.
  • சென்னை உயர் நீதிமன்றம் இந்த பேரணிக்கு அனுமதி அளிக்க மறுத்தது.
  • இதையடுத்து, மனுதாரார் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
திருப்பரங்குன்றம் விவகாரம்: சென்னை வேல் பேரணி வழக்கு - உச்ச நீதிமன்றம் உத்தரவு என்ன?

Thiruparankundram Issue: பாரத் இந்து முன்னணி அமைப்பின் வடசென்னை மாவட்ட துணை தலைவர் எஸ். யுவராஜ்  என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், "மதுரை மாவட்டத்தில் இருக்க கூடிய திருப்பரங்குன்றம் மலை, முருகப்பெருமானின் மலை. அதனை இஸ்லாமியர்கள் சொந்தம் கொண்டாடி வருவதை எதிர்த்து அந்த மலையை காக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து கந்தகோட்டம் முருகன் கோவில் வரை பிப்ரவரி 18ஆம் தேதி வேல் பேரணி நடத்த அனுமதியளிக்க காவல்துறை உத்தரவிடவேண்டும் என கேட்டிருந்தார். இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் விசாரித்தார்.

Thiruparankundram Issue: வேல் பேரணி - தமிழ்நாடு அரசு சொன்னது என்ன?

அப்போது, அரசு தரப்பில் மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, "ஏற்கனவே  திருப்பரகுன்றம் உரிமை குறித்து பிரிவியூகவுன்சில் வரை சென்று சிக்கந்தர் தர்கா, கொடி மரம், மலைவழிபாதை, நெல்லித் தோப்பு  இஸ்லாமியர்களுக்கு சொந்தம் என்று முடிவு செய்யப்பட்ட பிறகு மீண்டும் அது குறித்த பிரச்சனை எழுப்புவது சரியல்ல. 

பேரணி பாதை போக்குவரத்து நெருக்கடி நிறைந்த சாலை என்கிற காரணம் மட்டுமின்றி வேறு எந்த இடத்தில் பேரணிக்கு அனுமதி வழங்கினாலும் அது தேவையற்ற விரும்பதகாத பிரச்சனைகளை உருவாக்கும். ஏற்கனவே  மதுரையில் இந்து முன்ணணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். மீண்டும் அதே பிரச்சனைக்காக பேரணி நடத்துவதை நீதிமன்றம் ஊக்குவிக்க கூடாது" என்றார். சென்னையில் மட்டுமல்ல வேறு எங்கும் போராட்டம் நடத்த அனுமதிக்க கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Thiruparankundram Issue: உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு - முழு விவரம்

இதை தொடர்ந்து, இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் தீர்ப்பு வழங்கினார். அவர் அளித்த உத்தரவில், "இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்தை ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்த போராட்டகாரர்கள் நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பட்டிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் தவறாக பயன்படுத்த முடியாது.

மதுரையில் நடந்த போராட்டத்தின் போது, கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதற்காக இரண்டு வழக்குகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் இரு பிரிவினருக்கிடையே விரோதத்தை ஏற்படுத்தி மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தி பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டத" என நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Thiruparankundram Issue: 'பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்'

மேலும் அந்த உத்தரவில்,"திருப்பரங்குன்றம் மலையில் நடந்த சம்பவம் தொடர்பாக அனைத்து மதத்தினருக்கு இடையிலான பிரச்சனைகள் வருவாய் கோட்டாட்சியர் முன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காணப்பட்டது. இது தொடர்பான தீர்மானத்தை மதுரை ஆட்சியரும் ஏற்று கொண்டு உள்ளார். அதனால் திருப்பரங்குன்றம் மலையில் நடந்த சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்த எந்த அவசியமும் இல்லை. அப்படி போராட்டம் நடத்தினால் அது மற்ற மதத்தினரை மீண்டும் தூண்ட செய்து பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

பொது அமைதி, மத நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு போராட்டத்திற்கும் காவல்துறை அனுமதி வழங்க கூடாது. மத ரீதியிலான பதற்றங்களை தணிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து பொது ஒழுங்கையும், மத நல்லிணக்கத்தையும் மீட்டெடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Thiruparankundram Issue: வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க கூடாது

மேலும் அந்த உத்தரவில்,"திருப்பரங்குன்றம் மலையில் இதுவரை இந்து, இஸ்லாமியர்கள் மற்றும் ஜெயின் மக்கள் அமைதியாக வசித்து வந்துள்ளனர். ஒற்றுமையில் வேற்றுமை தான் நம் நாட்டின் பலம். அதனால் அனைத்து மத மற்றும் சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை அரசு பேண வேண்டும்.  மத நம்பிக்கைகளும்,உணர்வுகளும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். 

அமைதி, மற்றும் மத நல்லிணக்கம் பாதிக்கும் வகையில் எவரையும் செயல்பட அனுமதிக்க கூடாது. இந்த வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க கூடாது" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்த எந்த தடையும் இல்லை என்றும் நீதிபதி இளந்திரையன் அந்த உத்தரவில் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையனின் இந்த உத்தரவை எதிர்த்து பாரத் இந்து முன்னணி அமைப்பின் வடசென்னை மாவட்ட துணை தலைவர் யுவராஜ் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.

Thiruparankundram Issue: உச்ச நீதிமன்றத்தில் உத்தரவு என்ன?

அந்த வழக்கு இன்று (மார்ச் 24) நீதிபதிகள் பீலா திரிவேதி மற்றும் பிரசன்னா வார்லே ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவு சரியாக பரிசீலிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. எனவே அந்த உத்தரவில் தலையிட முடியாது" எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க | திருப்பரங்குன்றம் மலை இந்துகளுக்கே சொந்தம்; தர்காவை இடமாற்றனும் - ஹெச். ராஜா சொல்வது என்ன?

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாதம் சம்பளம் எப்பொழுது கிடைக்கும்? வெளியான புதிய அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News