Thirumavalavan Press Meet: நெல்லை கவின் கொலையில் கைது செய்யப்பட்ட சுர்ஜித்தின் தாயையும் கைது செய்ய வேண்டும் என்றும் சாதி விட்டு சாதி திருமணம் செய்வதற்காக பெற்ற பிள்ளையே கொலை செய்வதை தேசிய அவமானமாக கருத வேண்டும் என்றார்.

Thirumavalavan Press Meet: சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, "நெல்லை மாவட்டம் மென்பொறியாளர் கவின் ஆணவப் படுகொலை மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
கவினை கொலை செய்த அவரது காதலியின் சகோதரர் சுர்ஜித் மற்றும் அவரது தந்தையை காவல்துறை கைது செய்துள்ளது. ஆனால், சுர்ஜித் மற்றும் அவரது தாய், தந்தை ஆகிய மூன்று பேரின் பெயரும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் கொலை செய்த சுர்ஜித் மற்றும் அவரது தந்தையை மட்டுமே காவல்துறை கைது செய்துள்ளது. அவரது தாயை கைது செய்ய காவல்துறைக்கு என்ன தயக்கம்.?
உடுமலை சங்கர் ஆணவ படுகொலையில் குடும்பத்தினர் யாரும் நேரடியாக தலையிடவில்லை. கூலிப்படையை ஏவிவிட்டு படுகொலை செய்தார்கள். ஆனால், கௌசல்யாவின் தாய், தந்தை உறவினர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டார்கள். இதே கோரிக்கையை கவின் பெற்றோர்களும் எழுப்புகிறார்கள். தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட கவின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வகையில் கடமைகளை ஆற்றும் என்று நான் நம்புகிறேன். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உள்ள சூழலில் சிபிசிஐடி காவல்துறையினர் நேர்மையாக நடந்து பாதிக்கப்பட்ட கவின் குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இது தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் மட்டுமல்ல வடமாவட்டங்களில் மட்டுமல்ல மேற்கு மாவட்டங்களிலும் பரவி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக, அதாவது 10 ஆண்டுகளாக சாதியவாத சக்திகளும் மதவாத சக்திகளும் சாதி பெருமிதத்தை ஒரு அரசியலாக உயர்த்திப் பிடிக்கிறார்கள். சாதி பெருமிடத்தின் அடிப்படையில் இதுபோன்ற கொலைகளை ஊக்கப்படுத்தியும் வருகிறார்கள். வட இந்திய மாநிலங்களில் தான் இது போன்ற படுகொலைகள் அவ்வப்போது நடக்கும், இப்போது தென்னிந்திய மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் இது அதிகரித்து வருகிறது.
அதற்கு, சாதியவாத சக்திகளும் மதவாத சக்திகளும் திட்டமிட்டு பரப்புகின்ற சாதி பெருமை அரசியல்தான் காரணம். இதனை தடுப்பதற்கு தேசிய அளவில் ஆணவ படுகொலை தடுப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும். அனைத்து மாநிலங்களில் இருந்தும் ஜனநாயக சக்திகள் குரல் எழுப்பி வருகிறார்கள். இந்திய ஒன்றிய அரசும் இந்த கோரிக்கையை பொருட்படுத்தவில்லை. மாநில அரசுகளும் இதனை கண்டு கொள்ளவில்லை. தமிழ்நாடு உட்பட இந்திய ஒன்றிய அரசு ஆணவக் கொலை தடுப்பு சட்டத்தை இயற்றலாமா என்கிற கருத்தை மாநில அரசிடம் இருந்து கேட்டு கடிதம் எழுதி இருக்கிறார்கள்.
அதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து கருத்து எதுவும் சொல்லவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கிடையிலே உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசுகள் செய்ய வேண்டிய கடமைகள் என்று ஆணவக் கொலைகள் தொடர்பாக சில வழிகாட்டுதல்களை தந்திருக்கின்றார்கள். எப்படி வழக்குகளை பதிவு செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எப்படிப்பட்ட இழப்பீடுகளை தர வேண்டும், காவல்துறை அதிகாரிகளின் உடனடி கடமைகள் என்ன என்பன போன்ற வழிகாட்டும் நெறிமுறைகளை உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை கூட தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள் பின்பற்றவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இதுதொடர்பாக நேற்று (ஜூலை 30) உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முயற்சித்தோம். ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை, அவரது அமைச்சகத்தில் நாங்கள் இந்த சம்பவம் குறித்து கோரிக்கை வலியுறுத்தியுள்ளோம். உடனடியாக ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறோம்.
நெல்லை கவின் ஆணவ படுகொலைக்கு தாமதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்வினை ஆற்றுகிறதே என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், "சம்பவம் நடந்த உடனேயே தகவல் வெளியாகிவிட்டது. உடனடியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அதற்கு கண்டனங்களை பதிவு செய்து விட்டோம். உடனடியாக காவல்துறை அதிகாரிகளை அணுகி இது தொடர்பாக கோரிக்கை எழுப்பியது விடுதலை சிறுத்தைகள்தான். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றிருந்த சூழலில் உடனடியாக வர இயலாததால் தற்போது டெல்லியில் இருந்து இங்கு வந்துள்ளேன். அடுத்த விமானத்தில் தூத்துக்குடி சென்று கவின் குடும்பத்தாரை சந்திக்க உள்ளேன். மேலும், மாலை 3 மணியளவில் எனது தலைமையில் நெல்லையில் ஆர்ப்பாட்டமும் நடைபெற உள்ளது.
ஆணவ படுகொலைகள் வெறும் சட்டத்தால் மட்டுமல்லாமல் உளவில் உளவியல் ரீதியாக சமூக ரீதியாக மாற்றுவதற்கு என்ன செய்வது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், "சட்டம் என்பது ஒரு தடுப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்தக்கூடிய ஒன்றுதான். அதுவே இயற்றப்படவில்லை, அதுவே உயர் உளவியல் ரீதியாக ஆளும் தரப்பிலே அதிகார வர்க்கத்திலே ஒரு தயக்கம் இருக்கிறது. இப்படி ஒரு கொடூரம் நடக்கிறது, இந்தியா முழுக்க நடக்கிறது.
பெற்ற பிள்ளையை கூட கொடூரமாக படுகொலை செய்யக்கூடிய உளவியல் இருக்கிறது. இதை ஒரு தேசிய அவமானமாக கருத வேண்டும். பெற்ற பிள்ளைகளையே கொடூரமாக கொலை செய்யும் அளவிற்கு தூண்டுகிறது என்றால் சாதி எப்படி ஒரு மனநோயாக மாறி உள்ளது என்பதை நாம் பார்க்க வேண்டும். இப்படிப்பட்ட சூழலிலே சட்டம் இயற்றுவதற்கு என்ன தயக்கம்.?. ஆணவக் கொலை என்பது தலித்துகளுக்கு மட்டும் நடப்பது அல்ல. மாற்று சாதியினரும் சாதி விட்டு சாதி திருமணம் செய்தால் ஆணவக் கொலை செய்கிறார்கள். எஸ்சி, பிசி என்கிற அளவில் நிகழக்கூடியது அல்ல, obc சமூகத்தினர் இடையே கூட சாதி விட்டு சாதி திருமணம் செய்தால் ஆணவ படுகொலை செய்யக்கூடிய சூழல் இங்கே நிலவி வருகிறது" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ