SVSP Manickaraja: அமமுக பொதுச்செயலாளர் SVSP மாணிக்கராஜா கட்சியில் இருந்து இன்று நீக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அவருடன் பல முன்னாள் அமமுக நிர்வாகிகளும் திமுகவில் இணைந்துள்ளனர்.
Tamilnadu Politics: இன்று தமிழகம் வரும் பிரதமர்
அதிமுக - பாஜக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் இன்று பிற்பகலில் நடைபெற இருக்கிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் ஒரே மேடையில் தோன்ற உள்ளனர். பிரதமர் மோடி இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் சூழல்கள் அனைத்து கட்சிகளும் தங்களின் கூட்டணியை வலுப்படுத்தி வருகின்றன. கடந்த தேர்தலில் அமைந்த திமுக கூட்டணியில் இதுவரை பெரிய மாற்றமில்லை, அதே கட்சிகள்தான் திமுகவின் கூட்டணியில் தொடர்கின்றன.
Tamilnadu Politics: தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள்
மறுபுறம், 2024 மக்களவை தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் பிரிந்து போட்டியிட்டன. ஆனால், 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மீண்டும் கூட்டணி அமைத்துள்ளனர். இதனால், அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகளும், பாஜகவுடன் கூட்டணியில் இருந்த கட்சிகளும் ஒட்டுமொத்தமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து, பலமாக கூட்டணியை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிமுக, பாஜக இடம்பெற்றிருக்கும் இந்த கூட்டணியில் ஏற்கெனவே அன்புமணியின் பாமக அதிகாரப்பூர்வமாக இணைந்துவிட்டது. தமாகா, புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புதிய பாரதம் உள்ளிட்ட கட்சிகள் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. ராமதாஸ் பாமக எந்த பக்கம் செல்வார் என்ற கேள்வி தற்போதும் நீடிக்கிறது. அதேநேரத்தில், அதிமுக உடன் கூட்டணியில் இருந்த தேமுதிகவும் தனது முடிவை இதுவரை அறிவிக்கவில்லை.
Tamilnadu Politics: டிடிவி தினகரன் அன்று சொன்னது...
தேசிய ஜனநாயக கூட்டணியில் நேற்று முன்தினம் அமமுக இணைந்ததுதான் அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அதிமுகவில் இருந்து பிரிந்து வந்த அமமுக இதுவரை அதிமுக கூட்டணியில் இடம்பெறாமல் இருந்தது. 2021 தேர்தலில் தனிக் கூட்டணியில் இருந்த அமமுக, 2024 மக்களவை தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்தது. அதிமுக கடந்தாண்டு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்த நிலையில், அமமுக அக்கூட்டணியில் இருந்து விலகியது. மேலும் இனி எக்காலத்திலும் அதிமுக இடம்பெற்றுள்ள கூட்டணியில் அமமுக இணையாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார்.
Tamilnadu Politics: தற்போது என்டிஏவில் அமமுக...
ஆனால், டிடிவி தினகரனை சேர்க்க பாஜக அழுத்தம் கொடுத்த காரணத்தால், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடைசி நேரத்தில் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், ஓபிஎஸ் மற்றும் சசிகலாவை மட்டும் ஒதுக்க வேண்டும் என இபிஎஸ் கண்டீஷன் போட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதையடுத்து, பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தலைமையில் அமமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக இணைந்துகொண்டது.
Tamilnadu Politics: அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாணிக்கராஜா
அதிமுக - பாஜக கூட்டணியில் அமமுக இணைந்தது, அக்கட்சிக்குள்ளேயே பிரச்னையை கிளப்பியது. அதிமுக இடம்பெற்றுள்ள கூட்டணியில் இணைய கடும் அதிருப்திகள் தெரிவிக்கப்பட்டன. இந்நிலையில், அமமுக துணைப் பொதுச்செயலாளராக இருந்த எஸ்விஎஸ்பி மாணிக்கராஜா இன்று அக்கட்சியில் இருந்து திடீரென நீக்கப்பட்டார். இது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிவிப்பில், "கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கட்சி துணைப் பொதுச்செயலாளர் S.V.S.P.மாணிக்கராஜா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சி உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilnadu Politics: திமுகவில் இணைந்தது ஏன்? - மாணிக்கராஜா
அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே, S.V.S.P.மாணிக்கராஜா திமுகவில் இணைந்தார். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாணிக்கராஜா தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். "எதற்கு அமமுக ஆரம்பிக்கப்பட்டதோ அதற்கு அர்த்தமே இல்லாமல் தலைமை முடிவு எடுத்ததால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தோம். அமமுகவின் மூன்று மாவட்டச் செயலாளர்கள் தற்போது திமுகவில் இணைந்துள்ளனர். கூடிய விரைவில் அதிமகமான நிர்வாகிகள் திமுகவுக்கு வருவார்கள்" என திமுகவில் இணைந்த பிறகு அண்ணா அறிவாலயத்தில் எஸ்விஎஸ்பி மாணிக்கராஜா பேட்டி அளித்தார். மேலும், என்ன அழுத்தங்கள் இருக்கிறது என்பது எங்களிடம் ஓபனாக சொல்லவும் இல்லை. நாங்கள் அதை தெரிய முயற்சித்தபோது தெரியப்படுத்தவும் இல்லை என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Tamilnadu Politics: ஸ்டாலின் வைத்த செக்
2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பல தொகுதிகளில் தோல்வியடைய முக்கிய காரணமாக இருந்தது, டிடிவி தினகரனின் அமமுகதான். அதிமுகவுக்கு செல்ல வேண்டிய அநேக வாக்குகள் அமமுக பிரிந்ததன் காரணமாகவே அதிமுகவுக்கு பல இடங்களில் பின்னடைவு ஏற்பட்டது. எனவே, அமமுகவை தங்களின் கூட்டணிக்கு கொண்டுவருவதன் மூலம் அதிமுக வாக்குகளை சிதறாமல் வைத்துக்கொள்ளலாம் என பாஜக தனிக்கணக்கு போட்டிருக்கிறது. மேலும், பிரதமர் மோடி தமிழகம் வரும் இன்று அமமுகவின் துணை பொதுச்செயலாளரை தங்கள் பக்கம் இணைந்து பாஜகவின் கணக்கை சமன் செய்திருக்கிறார். திமுக தலைவர் ஸ்டாலின்.
Tamilnadu Politics: அதிமுகவுக்கு முழு திருப்தி இல்லை
அதேபோல், அமமுகவை அதிமுகவும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றே தெரிகிறது, காரணம் டிடிவி தினகரன் கூட்டணியில் இணைந்தபோது பாஜக தலைவர்கள் மட்டுமே இருந்தனர், அதிமுக தலைவர்கள் யாரும் அதில் இல்லை. மேலும், இன்று மதுராந்தகத்தில் நடைபெறும் கூட்டத்தில் அதிமுக பேனரில் கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரின் புகைப்படங்களும் உள்ளன, ஆனால் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் புகைப்படங்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | மாணவர்களுக்கு திமுக மடிக்கணிணி வழங்கியது ஏன்? எடப்பாடி பழனிசாமி சொன்ன விளக்கம்
மேலும் படிக்க | தவெகவிற்கு விசில் சின்னம் ஏன்? விஜய் கேட்டது என்ன? முழு விவரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









