)
தமிழகத்தில் 500 யூனிட்டுகளுக்குள் மின்சாரம் பயன்படுத்தும் அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டம் கடந்த மே 10 ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. முதலமைச்சராகப் பதவியேற்றவுடன் விஜய் கையெழுத்திட்ட இந்த முக்கிய வாக்குறுதியின் தற்போதைய நிலவரம் குறித்து, இன்று (மே 18) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற எரிசக்தித் துறை ஆய்வுக் கூட்டத்தில் அவர் விரிவாகக் கேட்டறிந்தார்.
முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த உயர்மட்டக் கூட்டத்தில், மின்சார வாரியத்தின் நிதிநிலை, மின் உற்பத்தித் திறன் மற்றும் எதிர்கால உள்கட்டமைப்பு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்குப் பயன் தரும் இந்த 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் மக்களுக்குச் சரியாகச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தொழில் வளர்ச்சி மற்றும் விவசாய உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில், விவசாயிகளுக்கு எவ்வித தடையுமின்றி மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார். நிதி மற்றும் தொழில்நுட்ப சவால்கள் இருந்தாலும், குறைந்த மின்னழுத்தம் (Low Voltage) போன்ற நுகர்வோரின் அன்றாடப் புகார்களுக்கு முன்னுரிமை கொடுத்து, உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தின் உச்சபட்ச மின் தேவையான 21,326 மெகா வாட் மின்சாரத்தை, எவ்வித தடையுமின்றி மின்வாரியம் விநியோகம் செய்துள்ளது குறித்து இக்கூட்டத்தில் அதிகாரிகளால் விளக்கப்பட்டது. மேலும், கோடைக்காலம் மற்றும் வரவிருக்கும் பருவமழைக் காலத்தை எதிர்கொள்ளத் தேவையான மின்கம்பங்கள், கம்பிகள் மற்றும் மின்மாற்றிகள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளதாக மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தென் மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் சூரிய மற்றும் காற்றாலை மின்சாரத்தை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில், 'பசுமை மின்வழித்தடம்' (Green Corridor) திட்டத்தை விரைவுபடுத்த முதலமைச்சர் அறிவுறுத்தினார். பழைய மின்கட்டமைப்புகளை நவீனப்படுத்துதல், புதிய துணை மின்நிலையங்கள் அமைத்தல் போன்ற பணிகளையும் முடுக்கிவிட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஆர். நிர்மல்குமார், தலைமைச் செயலாளர் முனைவர் எம். சாய்குமார், மின்வாரியத் தலைவர் மரு. ஜெ. ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மின் நுகர்வோரின் குறைகளைக் களைவதோடு மட்டுமல்லாமல், மின்சார வாரியத்தின் நிதி நிலையைச் சீரமைப்பது குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மின் இழப்பீடுகளைக் குறைக்கவும், மின் விநியோகத்தை நவீனப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களை அதிகாரிகள் பட்டியலிட்டனர்.
குறிப்பாக, கோடைக் காலத்தின் தற்போதைய மின் தேவையைத் தடையின்றிச் சமாளித்த மின்வாரிய அதிகாரிகளுக்குப் பாராட்டு தெரிவித்த முதலமைச்சர் விஜய், வரவிருக்கும் பருவமழைக் காலத்திலும் எவ்விதப் பாதிப்பும் இன்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தினார். தமிழக மக்களின் அத்தியாவசியத் தேவையான மின்சாரக் கட்டமைப்பை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும், திட்டப் பணிகளில் தொய்வின்றிச் செயல்படுமாறும் மின்வாரியத்திற்கு அவர் அறிவுறுத்தினார்.