Tamil Nadu Assembly Latest News: உலகம் முழுவதும் பல்வேறு விதமான பாரம்பரிய மருத்துவ முறைகள் உள்ளன. இதில் தமிழ் முனிவர்கள் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள முனிவர்கள் மனித உடலின் செயல்பாடு மற்றும் நோய்களை குணப்படுத்துவதற்கான பாரம்பரிய வழிமுறை அறிவை கண்டுபிடித்தனர்.
சித்த மருத்துவதத்திற்கு ஏன் தனிப் பல்கலைக்கழகம்?
சித்த மருத்துவ பாரம்பரியமானது தமிழ்நாட்டில் உள்ள சித்தர்களால் உருவாக்கப்பட்டது. ஆயுர்வேதா யோகா மற்றும் சேவா-ரிக்பா இந்திய மருத்துவ முறையும் பல்வேறு பகுதியில் வளர்ச்சி அடைந்த்து. எனவே ஓமியோபதி மற்றும் யுனானி ஆகிய பாரம்பரியமானவை ஆரம்ப காலத்திற்கு இந்தியாவின் வெளியே உருவாகினாலும் இந்திய கலாச்சாரத்திலும் ஒருங்கிணைக்கப்பட்டது.
இந்த நிலையில் தான் ஆயுஷ் மருத்துவ முறைகள் வளமான பாரம்பரிய மற்றும் இலக்கியங்களை கொண்டுள்ளதால் சித்த மற்றும் பாரம்பரிய மருத்துவ முறையில் அறிவியல் மதிப்பு என்பது மிக முக்கியமாக கருதப்பட்டது. மேலும், அதனுடைய நன்மைகளை மனித இனம் முழுவதற்கும் சென்றடைய வகையில் உலகம் முழுவதிலும் வெற்றியடைவதற்கு ஆராய்ச்சி செய்வது என்பது தேவையாக இருக்கிறது. இந்த நிலையில் தான் சித்த மருத்துவம் மற்றும் இந்திய மருத்துவம், ஓமியோபதி முறைகளை ஆராய்ச்சிக்கான முக்கியத்துவம் அளித்து மேம்படுத்துவதற்கான தனிப் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவது அவசியம் என அரசு கருதியது.
தாக்கல் செய்யப்பட்ட மசோதா
இதன் அடிப்படையில் 2021-22ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் மாநிலத்தில் பாரம்பரிய மருத்துவ முறையின் பெருமைகளை போற்றக்கூடிய வகையில் இந்திய மருத்துவ முறைகளுக்கான சித்த மருத்துவ பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க அறிவிப்பு வெளியிட்டு, 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மானியக் கோரிக்கையில் சென்னை அருகே இந்திய மருத்துவ முறைகளுக்காக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு சட்ட வடிவம் கொடுத்து செயல்படுத்தும் வகையில் அதற்கான சட்ட முன்வடிவை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேரவையில் தாக்கல் செய்தார்.
முதல்வர் ஸ்டாலின் உரை
இதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவு அறிமுகம் செய்ய அனுமதி கோரப்பட்ட நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
ஆளுநரின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது
அப்போது அவர் பேசியதாவது, "தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவானது, நிதிச் சட்டமுன்வடிவு என்கிற வகைப்பாட்டில் வருகின்ற காரணத்தால் இச்சட்டமுன்வடிவினைப் பேரவையில் ஆய்வு செய்வதற்கு அரசமைப்புச் சட்டம், கூறு 207(3)-ன்கீழ் ஆளுநர் அவர்களின் பரிந்துரை பெறப்பட வேண்டும்.
பொதுமக்களின் கருத்தை அறிந்து, வரப்பெற்ற கோரிக்கைகளைக் கவனத்தில்கொண்டு, மக்களாட்சியின் ஒரு தூணாகக் கருதப்படும் நிர்வாகத்தால், மக்கள் நல்வாழ்வுத் துறையால் வரைவு சட்டமுன்வடிவு தயாரிக்கப்பட்டு, சட்டத் துறையால் சரிபார்க்கப்பட்டு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரால் பல கட்டங்களில் பரிசீலிக்கப்பட்டு, மேற்காணும் சட்டமுன்வடிவின் அச்சடிக்கப்பட்ட பிரதி ஆளுநருக்கு இணைத்து அனுப்பப்பட்டது.
விதிமுறைகளுக்கு முரணானது
ஆனால், ஆளுநர், அரசமைப்புச் சட்டத்தின்படி பின்பற்றப்பட்டு வந்த வழக்கமான நடைமுறையைப் பின்பற்றாமல், இச்சட்டமுன்வடிவில் உள்ள சில பிரிவுகள் குறித்து தன்னுடைய கருத்தைத் தெரிவித்து, அந்தக் கருத்துகள் இச்சட்டமுன்வடிவு பேரவையில் அறிமுகப்படுத்தப்படுகையில் பேரவை உறுப்பினர்களுடைய கவனத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்று தன்னுடைய செய்தியில் குறிப்பிட்டுள்ளார்கள். இது அரசியல் சட்டத்திற்கும், நமது சட்டப்பேரவை விதிமுறைகளுக்கும் முரணானது.
ஒரு சட்டமுன்வடிவு சட்டப்பேரவையில் விவாதிக்கப்படுகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மட்டுமே அதில் திருத்தங்களை முன்மொழியவும், அதற்கான விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் திருத்தங்களைத் திரும்பப் பெறவும், இல்லையெனில், வாக்கெடுப்பைக் கோரவும் அதிகாரம் உள்ளது.
ஆளுநர் அனுப்பிய மெசேஜ்...
இத்தகைய சட்டமுன்வடிவு பேரவையால் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு அதன்மீது கருத்துகளைத் தெரிவிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்படவில்லை. எனவே, ஆளுநரிடம் இருந்து வரப்பெற்றுள்ள செய்தியில் இடம்பெற்றுள்ள கருத்துகளை இந்த மாமன்றம் ஏற்றுக்கொள்ள இயலாது. மேலும், 'Consideration' என்று சொல்ல வேண்டிய ஆளுநர், அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக 'Appropriate Consideration' என்று குறிப்பிட்டுள்ளார். இதில், 'Appropriate' எனும் வார்த்தைக்கு என்ன பொருள்? 'பொருத்தமான' அல்லது 'தகுந்த முறையில் ஆய்வு செய்ய வேண்டும்' என்று பொருள்.
இப்பேரவை சட்டமுன்வடிவுகளை 'பொருத்தமற்ற முறையில்' அல்லது 'தகுந்த முறையில்' அல்லாமல் ஆய்வு செய்யும் தொனியில், 'பொருத்தமான' அல்லது 'தகுந்த' எனும் பொருள்படக் கூடிய வார்த்தையை சேர்த்திருப்பது, இந்தப் பேரவையின் மாண்பை குறைக்கக்கூடிய கருத்து என்பதால், அது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. சட்டம் இயற்றுவது, இப்பேரவைக்கு மட்டுமே உள்ள அதிகாரம். ஆகவே, ஆளுநரிடம் இருந்து வரப்பெற்றுள்ள அந்தக் கருத்துகள் அடங்கிய செய்தி அவைக் குறிப்பில் இடம் பெறுவதை மாநில சுயாட்சியில் நம்பிக்கை கொண்ட எந்த ஓர் உறுப்பினரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றம்
எனவே, '2025ஆம் ஆண்டு தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவை பேரவையில் ஆய்வு செய்வதற்கு ஆளுநர் அனுப்பியுள்ள செய்தியில் (Message) இருக்கக்கூடிய அவரின் கருத்துகள் மற்றும் பேரவையின் மாண்பைக் குறைக்கக்கூடிய அந்த வார்த்தை அடங்கிய பகுதிகளை இப்பேரவை நிராகரிக்கிறது' என்னும் தீர்மானத்தை மொழிகிறேன். உறுப்பினர்கள் அனைவரும் இதனை ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டும்" என்றார். மேலும், முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த ஆளுநருக்கு எதிரான தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் படிக்க | விஜய்யின் செயல்தான் கரூர் கூட்ட நெரிசலுக்கு காரணம்.. சட்டசபையில் அமைச்சர் எ.வ. வேலு!
மேலும் படிக்க | கரூர் சம்பவம்: அமைச்சர் சொன்ன ஒரே வார்த்தை - டென்ஷன் ஆன இபிஎஸ் - அதிமுக அமளி ஏன்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









