)
Tirunelveli Kavin Honour Killing Case: நெல்லையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட ஐ.டி., ஊழியர் கவினின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு மறைந்த கவினின் தாய், தந்தை மற்றும் தம்பி ஆகிய மூன்று பேருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.
கடந்த ஜூலை 27ஆம் தேதி நெல்லையில் கவின், அவர் காதலித்த பெண்ணின் தம்பியால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தொடர்ந்து, கவினை வெட்டிய சுர்ஜித் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரண் அடைந்த நிலையில், அடுத்த ஓரிரு நாள்களில் சுர்ஜித்தின் தந்தையும், காவல் உதவி ஆய்வாளருமான சரவணன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த கவின், நெல்லை கேடிசி நகரைச் சேர்ந்த சுபாஷினி என்ற பெண்ணை பள்ளி காலத்தில் இருந்து காதலித்து வந்துள்ளார். இருவரும் உண்மையாக காதலித்ததாக அந்த பெண்ணும் கொலைக்கு பின் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார். சுபாஷினியின் தாய் மற்றும் தந்தை இருவரும் காவல் உதவி ஆய்வாளர்கள் ஆவர். இவர்கள் இருவரும் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜூலை 27ஆம் தேதி கொலை நடந்த நிலையில், சுர்ஜித் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இருப்பினும் இந்த கொலைக்கு அவரின் தாய் மற்றும் தந்தைக்கும் தொடர்பிருப்பதாக கூறி அவர்களையும் கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட கவினின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர். மேலும், அவர்களை கைது செய்யும் வரை கவினின் உடலை பெற மாட்டோம் என்றும் உறுதியாக கூறினர்.
தொடர்ந்து, ஜூலை 30ஆம் தேதி இரவு சுர்ஜித்தின் தந்தை சரவணனை போலீசார் கைது செய்தனர். சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரியை இதுவரை கைது செய்யவில்லை. இருப்பினும் சுர்ஜித்தின் தந்தை கைதானதை தொடர்ந்து கவினின் உடலை பெற்றுக்கொண்டனர். ஆகஸ்ட் 1ஆம் தேதி கவினுக்கு இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான ஆறுமுகமங்கலத்தில் நடந்தது.
முன்னதாக, அரசு தரப்பில் அமைச்சர் கே.என். நேரு, தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கவினின் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன், செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்களும் நேரில் வந்து கவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ