)
Tamil Nadu Government ; தமிழ்நாடு அரசு, பெண்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் தொழில்முனைப்பை ஊக்குவிப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 2025-26 நிதியாண்டில், கிராமப்புற சுய உதவிக் குழுவில் உள்ள பெண்களுக்கு தொழில் அபிவிருத்திக்காக வட்டி மானியத்துடன் கூடிய ரூ. 10 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்கும் ஒரு சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் திருப்பத்தூர் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் உள்ள தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு அரசின் சுய தொழில் கடன்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (Tamil Nadu State Rural Livelihoods Mission) கீழ், தகுதியான மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புத் திட்டத்தின் வாயிலாக கடன் வழங்கப்பட்டு, அதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு பெண் உறுப்பினரும் சொந்தமாகத் தொழில் தொடங்கி, தங்களின் வருமானத்தை அதிகரித்துக்கொள்ளவும், கடன் தேவைகளை எளிதாகப் பூர்த்தி செய்யவும் இந்தத் திட்டம் வழிவகை செய்கிறது.
கடன் திட்டத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்:
கடன் தொகை மற்றும் வகை: இத்திட்டத்தின் கீழ், ரூ. 75,000 முதல் ரூ. 10 லட்சம் வரை பிணையம் எதுவும் இன்றி கடன் பெறலாம். இது வேளாண் சார்ந்த மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்கள், பண்ணை சாரா தொழில்கள், உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் போன்ற பல்வேறு துறைகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த கடன், நிலையான முதலீடு (Term Loan) அல்லது நிலையான மற்றும் நடைமுறை முதலீடு (Working Capital) என இரண்டு வகைகளில் ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
வட்டி மானியம்: வங்கிகளில் கடன் பெற்று, தவணை தவறாமல் உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தும் பெண் தொழில்முனைவோருக்கு ஒரு சிறப்பான சலுகை உண்டு. ரூ. 1.5 லட்சம் வரையிலான நிலுவையில் உள்ள கடன்களுக்கான வட்டியில் 2% மானியமாக அரசு வழங்குகிறது. இது கடனைத் திருப்பிச் செலுத்தும் சுமையைக் குறைத்து, பெண்களை மேலும் ஊக்குவிக்கும்.
கடன் உத்தரவாதக் கட்டணங்களைத் திரும்பப் பெறுதல்: ரூ. 5 லட்சம் வரையிலான கடன்களுக்கு, வங்கிகள் வசூலிக்கும் CGTMSE/CGFMU என்ற கடன் உத்தரவாதக் கட்டணங்களை, பயனாளியிடமிருந்து திரும்பப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சலுகை 5 ஆண்டுகள் வரை நீடிக்கும். இதனால், கடன் வாங்குபவர்களுக்கு கூடுதல் நிதிச் சுமை குறைகிறது.
யார் விண்ணப்பிக்கலாம்? தகுதிகள் என்ன?
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற பின்வரும் தகுதிகளைப் பூர்த்தி செய்வது அவசியம்:
1. வயது: விண்ணப்பதாரரின் வயது 21-க்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
2. குழு உறுப்பினர்: கிராமப்புற மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
3. குழுவின் நிலை: அவர் சார்ந்திருக்கும் சுய உதவிக் குழு குறைந்தது 2 ஆண்டுகளை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும், அந்தக் குழு இதற்கு முன்பு ஒரு வங்கிக் கடனைப் பெற்று, அதை வெற்றிகரமாகத் திருப்பிச் செலுத்தியிருக்க வேண்டும்.
4. தனிப்பட்ட தகுதி: விண்ணப்பதாரர் குழுவில் சேர்ந்து குறைந்தது 2 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். மேலும், ஒரு கடன் சுழற்சியை (Credit Cycle) வெற்றிகரமாக நிறைவு செய்திருக்க வேண்டும்.
5. தொழில் நிலை: ஏற்கனவே ஏதேனும் ஒரு தொழில்முனைவோராக இருப்பது கட்டாயம்.
விண்ணப்பத்திற்குத் தேவையான ஆவணங்கள்:
* பல்வேறு வகையான தொழில்களுக்கு ஏற்ப தேவையான ஆவணங்கள் மாறுபடும்.
* பொதுவான ஆவணங்கள்: ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி பாஸ் புத்தகத்தின் நகல்.
* சுய உதவிக் குழுவின் தீர்மானம்.
பண்ணை தொடர்பான உற்பத்தித் தொழில்களுக்கு கூடுதலாக:
* விற்பனையாளர் பற்றிய விவரம்.
* உற்பத்திப் பொருட்களை ஏதேனும் ஒரு நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கான அத்தாட்சி.
பண்ணை சாராத தொழில்களுக்கு கூடுதலாக:
* பான் அட்டையின் நகல்.
* FSSAI / GST பதிவுச் சான்றிதழின் நகல்.
* ஆதார் அட்டையின் நகல்,
* மூலப்பொருட்கள் அல்லது இயந்திரங்களுக்கான விலைப்புள்ளி.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் காலக்கெடு:
இந்தத் திட்டத்தில் பயன்பெறத் தகுதியுள்ளவர்கள், தங்கள் சிறந்த செயல்பாடுகளுக்கான சான்றுகள், அறிக்கைகள், புகைப்படங்கள் மற்றும் பத்திரிக்கை செய்திகள் போன்றவற்றை இணைத்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி ஆகஸ்ட் 8, 2025, மாலை 5:00 மணி ஆகும். மற்ற மாவட்டத்தினர் அந்தந்த மாவட்ட நிர்வாகம் கொடுத்திருக்கும் காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களைச் சம்பந்தப்பட்ட வட்டாரத்தின் மகளிர் திட்ட அலுவலகத்திலோ அல்லது திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) அலுவலகத்திலோ சமர்பிக்கலாம். திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, 3-ஆம் தளம் C பிரிவு, மாவட்ட ஆட்சியரகம், திருப்பத்தூர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்தி, திருப்பத்தூர் மாவட்டப் பெண்கள் தங்கள் தொழில் கனவுகளை நனவாக்கிக்கொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ