Kanchipuram, Tamil Nadu government : காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கு இரண்டு முக்கிய அறிவப்புகளை தமிழ்நாடு அரசு கொடுத்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் முதல் அறிவிப்பில், தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது.
1.விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும்.
2. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3. விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
4. ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.
5. தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் சிறு வர்த்தகம்/ வணிகம், விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் மரபு வழி சார்ந்த தொழில்கள் செய்வதற்கு அதிக பட்சமாக ரூ.15.00 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் ரூ.1.25 இலட்சம் வரை 7% மற்றும் ரூ.1.25 இலட்சம் முதல் ரூ.15.00 இலட்சம் வரை 8%.
6. குழுக் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் சிறு தொழில்/ வணிகம் செய்வதற்கு ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 இலட்சம் வரையும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 இலட்சம் வரை ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது. சுய உதவிக் குழு துவங்கி ஆறு மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும். திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) அவர்களால் தரம் (Grading) செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இரு பாலருக்கான சுய உதவிக் குழு (Mixed Self Help Group)உறுப்பினர்களும் இக்கடனுதவி வழங்கப்படுகிறது.
7. பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ.60,000/- வீதம் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ.1,20,000/- வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 7%.
8. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இக்கழக இணையதள முகவரியில் (www.tabcedco.tn.gov.in) படியிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
9. விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வங்கி கோரும் ஆவண நகல்களுடன் சம்மந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அல்லது கூட்டுறவு வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
எனவே, இம்மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் கடன் விண்ணப்பங்களைப் பெற்று உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது முக்கிய அறிவிப்பு
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டிருக்கும் இரண்டாவது அறிவிப்பு : கிராமப்புற இளைஞர்களின் சுய வேலைவாய்ப்புக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் (RSETIs) செயல்பட்டு வருகின்றன. ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித் துறை உதவியுடன் ஒவ்வொரு மாவட்டத்தில், முன்னோடி வங்கிகள் மூலம் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் சென்னை தவிர 37 மாவட்டங்களிலும் ஊரக சுய வேலை வாய்ப்புப் பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அரியலூர், தூத்துக்குடி, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய 8 மாவட்டங்களில் செயல்படும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களில் மட்டும் உண்டு உறையிட வசதியுடன் கூடிய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சி மையங்களில் வேலைவாய்ப்புகளை அதிகம் வழங்கிடும் பயிற்சிகளான, குறிப்பாக செல்போன் பழுது நீக்குதல், ஓட்டுனர் உரிமம் பயிற்சி, வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது நீக்குதல், கான்கிரீட் கொத்தனார் பயிற்சி, பிளம்பிங் பயிற்சி, தச்சு பயிற்சி, இருசக்கர வாகன பழுது நீக்குதல், ஒயரிங், அலுமினியம் பேப்ரிகேஷன், வெல்டிங் பயிற்சி உள்ளிட்ட 64 வகையான சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள் எவ்வித கட்டணமும் இல்லாமல் 18-45 வயதுக்குட்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.
கல்வித் தகுதியாக குறைந்தது 8ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. 8ஆம் வகுப்பு முதல், ITI டிப்ளமோ மற்றும் பட்டப் படிப்பு வரை படித்தவர்களுக்கு தங்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. குறைந்தது 10 நாட்கள் முதல் அதிகபட்சம் 45 நாட்கள் வரை உள்ள பயிற்சிக் காலத்தின் போது மதிய உணவும், காலை மற்றும் மாலை வேலைகளில் சிற்றுண்டி மற்றும் தேனீர் போன்றவை இலவசமாக வழங்கப்படுவதுடன், பயிற்சியாளர்களுக்கு சீருடை, பாடப் பொருட்கள் தொழில் முனைவோராக மாறுவதற்கு உரிய அடிப்படை தொழில் கருவிகள் ஆகியவையும் வழங்கப்படுகிறது.
மேலும், குறிப்பிட்ட சுய தொழில் குறித்து பயிற்சி அளிப்பதுடன் உகந்த தொழில் வாய்ப்புகளை கண்டறிதல், தொழில் திட்டம் தயாரித்தல், சந்தைப்படுத்துதல், தொழில் முனைவோருக்கான சிறந்த பண்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட தொழில் முனைவோர் குறித்த பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட பயிற்சிகளுக்கு விளக்கப்பட காட்சிகள். தொழில் உபகாணங்களை பயன்படுத்துதல், கணினி வகுப்பு, மென் திறன் பயிற்சி மற்றும் செயல்முறை வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் தொழிற்பயிற்சிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட தொழிலில் சிறந்து விளங்கும் அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இது மட்டுமன்றி பயிற்சியின்போது முக்கிய தொழில் நிறுவனங்களுக்கு களப்பயணம் அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களின் வெற்றி கதைகள் நேரடியாக எடுத்துக் கூறப்படுகிறது. இளைஞர்களை குழுவாக அழைத்துச் சென்று சந்தை ஆய்வுக்கான பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சியின் முடிவில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்ற நிறுவனம் மூலம் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்த இளைஞர்கள் சுய தொழில் மேற்கொள்ள ஏதுவாக இரண்டு ஆண்டுகள் வரை பயிற்சி நிலைய அலுவலர்களால் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயிற்சி முடித்து இளைஞர்கள் சுய வேலைவாய்ப்பில் ஈடுபட கடன் உதவி தேவைப்படும் பட்சத்தில், வங்கிகள் மூலம் கடன் பெறவும் பயிற்சி நிலைய அலுவலர்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டு நடத்தப்படும் பல்வேறு பயிற்சிகளுக்கான கால அட்டவணை ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கிராமப்புற இளைஞர்கள் தங்களுக்கு ஏற்ற தொழில் பயிற்சிகளில் சேர்ந்து பயன் பெற விரும்பினால், நமது மாவட்டத்தில் உள்ள ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் (முகவரி மற்றும் தொலைபேசி எண்: எண் 32 A, வரதராஜ பெருமாள் சன்னதி தெரு. சின்ன காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம் - 631501, 044-27268037 ) திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகம் (முகவரி மற்றும் தொலைபேசி எண்: மகளிர் திட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், காஞ்சிபுரம் 631502, 9444094280) தொடர்பு கொண்டு தகவல் பெறலாம்.
மேலும் விபரம் அறிய தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வாழ்வாதார உதவி அழைப்பு எண் 155330 மற்றும் ஊரக சுய வேலைவாய்ப்பு நிறுவனங்களின் கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 309 8039 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் - லேட்டஸ்ட் அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









