)
Tamil Nadu Government : பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமை (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம் 2013-இன் கீழ், பணியிடங்களில் பாலியல் சீண்டல்களில் இருந்து பெண்களைப் பாதுகாக்க வேண்டியது நிறுவனங்களின் கட்டாயக் கடமையாகும். இந்தச் சட்டத்தின்படி, 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரியும் அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், துணிக்கடைகள், நகைக்கடைகள், தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், சிறுகுறு நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், விற்பனை கூடங்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அமைப்பு சாரா பணியிடங்கள் ஆகியவற்றில் உள்ளகக் குழுக்களை (Internal Committee - IC) அமைத்திட வேண்டும்.
இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், கன்னியாகுமரி மாவட்டம் போன்ற பகுதிகளில் செயல்படும் அனைத்துப் பிரிவுகளிலும் இந்தக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். இந்தக் குழுவில் தலைமை அதிகாரியாக நிறுவனத்தில் பணிபுரியும் மூத்த நிலையிலுள்ள ஒரு பெண் பணியாளர் இருக்க வேண்டும். மேலும், அலுவலகத்தில் பணிபுரியும் ஆண் அல்லது பெண் பணியாளர்கள் குறைந்தபட்சம் இரண்டு பேர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். அத்துடன், பாலியல் பிரச்சினைகளில் தீர்வு காண்பதில் அக்கறை கொண்டவர்கள், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பெண்கள் பாதுகாப்பு தொடர்புடைய அனுபவம் கொண்ட தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு சமூகப் பணியாளரும் உறுப்பினராக இருக்க வேண்டும்.
இந்தக் குழுவின் மொத்த உறுப்பினர்களில் பாதிப்பேர் பெண்களாக இருக்க வேண்டும், மேலும் உறுப்பினர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றத்திற்குரியது. நிறுவனங்கள் இந்தக் குழு தொடர்பான விழிப்புணர்வை பணியாளர்களுக்குத் தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும், அத்துடன் குழுக்கள் ஆண்டுதோறும் ஜனவரி மாத இறுதிக்குள் மாவட்ட ஆட்சியருக்கு ஆண்டறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். உள்ளகக் குழுக்களின் பெயர், தொலைபேசி எண் மற்றும் மகளிர் உதவி எண் 181 போன்ற விவரங்கள் நிறுவனங்களின் தகவல் பலகையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
புகார்களைப் பெறுவதற்கு ஏதுவாக, அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்புப் பெட்டி (Safety Box with Two locks) வைக்கப்பட வேண்டும். இப்பெட்டியின் ஒரு சாவி உள்ளகக் குழு தலைவரிடமும், மற்றொரு சாவி சமூக சேவகர் உறுப்பினரிடமும் இருக்க வேண்டும். எனவே, இதுவரை உள்ளகக் குழு அமைக்காத நிறுவனங்கள் விதிமுறைகளைப் பின்பற்றி உடனடியாக அமைத்து, அதன் விவரத்தினை மாவட்ட சமூக நல அலுவலகம், நாகர்கோவில் முகவரியில் கடிதம் மூலமாகவோ அல்லது dswnegercoil123@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பிடத் தெரிவிக்கப்படுகிறது.
உள்ளகக் குழு அமைக்காமல் செயல்படும் நிறுவனங்களுக்கு POSH சட்டம் 2013-இன் படி ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும். பணிபுரியும் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களை உள்ளகக் குழு, பாதுகாப்புப் பெட்டி, 181 என்ற மகளிர் உதவி எண், அல்லது www.shebox.nic.in என்ற இணையதளம் வாயிலாகவும் தெரிவிக்கலாம். மேலும், 10-க்கும் குறைவான பணியாளர்கள் கொண்ட நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், மாவட்ட சமூக நல அலுவலகத்தில் செயல்படும் உள்ளூர் குழுவிடம் (Local Committee) நேரடியாகப் புகார் அளிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தைத் 04652-278404 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ