Tamil Nadu government : தமிழ்நாட்டில் அரசுப் பணிக்கு புதியதாக விண்ணப்பிப்போருக்கு மட்டுமே தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான முன்னுரிமை வழங்கப்படும் வகையில் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசுப் பணியில் இருப்பவர்கள் குறிப்பிட்ட காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான முன்னுரிமையை பயன்படுத்த முடியும். 2010 முதல் ஏற்கனவே அரசுப் பணியில் இருந்து தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான முன்னுரிமையை பயன்படுத்தியவர்களை பாதுகாக்கும் வகையில் சட்டமுன்வடிவு கொண்டு வரப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அரசுப்பணியில் இருப்பவர்கள் தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான முன்னுரிமையை பயன்படுத்த தகுதியற்றவர்கள் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை தெளிவுபடுத்தும் வகையில் சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டமுன்வடிவு அமலுக்கு வரும் தேதிக்கு முன்னர் அறிவிக்கை செய்யப்பட்ட முன்னுரிமை காலிப்பணியிடங்களுக்கு இந்த புதிய சட்டம் பொருந்தாது எனவும் அரசு விளக்கமளித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அரசுப் பதவிகளுக்கு புதியதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் கல்வி பயின்றமைக்கான முன்னுரிமை வழங்கப்படும் எனவும், ஏற்கனவே அரசுப் பணியில் இருப்பவர்கள் குறிப்பிட்ட காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே அத்தகைய முன்னுரிமையை பெற விண்ணப்பிக்க முடியும் என்பதற்கான சட்டமுன்வடிவு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் நேரடி பணிநியமனம் மூலம் நிரப்பப்பட வேண்டிய அனைத்து காலிப்பணியிடங்களிலும் 20 சதவிகிதம் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் சட்டம் கடந்த 2010 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தின் படி ஒரு விண்ணப்பதாரர் ஏற்கனவே அரசுப் பணியில் இருக்கிறாரா ? இல்லையா ? என்பதை பொருட்படுத்தாமல் அனைத்து நேரடி பணி நியமனங்களிலும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான முன்னுரிமையை அரசு வழங்கி வருகிறது.
இந்த நிலையில் நேரடி பணி நியமனம் என்ற சொல்லின் வரையறைக்கு சட்டப்பொருள் விளக்கம் அளித்த சென்னை உயர்நீதிமன்றம், ஏற்கனவே அரசுப் பணியில் இருப்பவர்கள் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் என்ற வகைப்பாட்டின் கீழ் முன்னுரிமை நியமனத்திற்கு தகுதியற்றவர்கள் என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை தெளிவுபடுத்தும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான சட்டமுன்வடிவு இன்று பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் 2010 ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கான முன்னுரிமையின் அடிப்படையில் நடைபெற்ற பணி நியமனங்களை செல்லுபடியாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இனி வரும் காலங்களில் புதியதாக பணிக்கு சேருவோருக்கு மட்டுமே தமிழ்வழியில் கல்வி பயில்வதற்கான முன்னுரிமை வழங்கப்படும் என்பதோடு, ஏற்கனவே அரசுப் பணியில் நியமிக்கப்பட்ட நபர்கள், மீகை ஊதியத்தை கொண்ட பதவிகளில் குறிப்பிட்ட காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
தமிழ்வழிக் கல்வி இட ஒதுக்கீடு என்றால் என்ன?
தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பு மற்றும் டிகிரி முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை கொடுக்கப்படும். 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் டிகிரி முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் தேர்வுகளில் நேரடி வேலைவாய்ப்பில் 20 விழுக்காடு இட ஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது. தமிழ் வழி கல்வி இட ஒதுக்கீட்டை கோருபவர்கள் அரசுப் பணிக்கு தேர்வான பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பின்போது தமிழ் வழியில் படித்ததற்கான சான்றை (Persons Studied in Tamil Medium - PSTM) கொடுக்க வேண்டும். தொடக்க கல்வி, மேல்நிலை கல்வி படித்த பள்ளி மற்றும் பட்டப்படிப்பு படித்த கல்லூரிகளில் இதற்கான சான்றுகளை மாணவ, மாணவிகள் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சி தேர்வில் இந்த ஆண்டு வெற்றி பெற வேண்டுமா? 2 முக்கிய தகவல்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









