)
Tamil Nadu : ஆகஸ்டு 15 ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு இந்துசமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. அமைச்சர்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்க செய்யுமாறும், பொதுவிருந்து நடத்தவும், ஆதிதிராவிட வகுப்புச் சேர்ந்த மக்கள் பெருமளவு கலந்துகொள்ள ஏற்பாடு செய்யுமாறும் அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது;
2025 ஆம் ஆண்டு (15.08.2025) சுதந்திர தின விழாவினை முன்னிட்டு சிறப்பு வழிபாடு. மற்றும் பொது விருந்து தொடர்ந்து நடைபெற்று வரும் திருக்கோயில்களில் இவ்வாண்டும் கீழ்க்காணும் வழிகாட்டுதல்படி நடத்துவதற்கு அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.
1) 15.08.2025 அன்று நடைபெற உள்ள சுதந்திர தின விழாவினை முன்னிட்டு திருக்கோயில்களில் நடைபெறும் சிறப்பு வழிபாடு. பொது விருந்து நிகழ்ச்சிக்கு அமைச்சர் பெருமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்தும், ஆதி திராவிடர்கள் பெருமளவில் கலந்து கொள்ளும் வகையிலும் ஆலோசித்து நல்ல முறையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். சிக்கனமான முறையில், சாதி சமய ஏற்றத்தாழ்வு இன்றி சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற வேண்டும்.
2) சிறப்பு வழிபாடு. பொது விருந்து நிகழ்ச்சிக்கு தயாரிக்கப்படும் உணவு வகைகள் மற்றும் குடிநீர் தரமாகவும், சுகாதாரமாகவும் உள்ளதை திருக்கோயில், நிர்வாகிகள் / செயல் அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
3) சிறப்பு வழிபாடு, பொது விருந்தின் போது திருக்கோயில்களில் உபரியாக உள்ள பருத்திப்புடவை. வேட்டிகளை ஏழை எளியோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4) சிறப்பு வழிபாடு, பொது விருந்து நிகழ்ச்சிக்கான செலவுத் தொகை முன்னதாக வரவு செலவுத் திட்டத்தில் அனுமதி பெற்றதாக இருத்தலும், செலவினத் தொகை வரவு செலவு திட்டத்திற்கு கட்டுப்பட்டு இருத்தலும், ஆடம்பரமின்றி தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து எளிய முறையில் இருத்தலும் வேண்டும்.
5) மண்டல இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் தங்கள் பிரிவிலுள்ள திருக்கோயில்களுக்கு சுற்றறிக்கை மூலம் தகுந்த அறிவுரைகள் வழங்கி நிகழ்ச்சியை சிறப்பாக எவ்வித புகாருக்கும் இடமில்லாமல் நடத்த நடவடிக்கைகளை எடுத்திடல் வேண்டும்.
6) 15.08.2025 அன்று சிறப்பு வழிபாடு, பொது விருந்து நிகழ்ச்சி முடிந்த பிறகு, அதற்கான செலவு விவரங்கள். கலந்து கொண்ட நபர்கள் மற்றும் பருத்திப்புடவை, வேட்டிகள் வழங்கப்பட்ட விவரங்கள் ஆகியவற்றினை மண்டல இணை ஆணையர்கள் தங்கள் சரகத்தில் உள்ள பட்டியலைச் சேர்ந்த, பட்டியலை சேராத அனைத்து திருக்கோயில்களிலிருந்தும் (முதுநிலை திருக்கோயில்கள் உட்பட) பெற்றுத் தொகுத்து உரிய படிவத்தில் அறிக்கையை உடன் இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைத்திட வேண்டும், என இந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ