)
Hydrocarbon Projects In Ramanathapuram: இராமநாதபுரம் மாவட்டத்தில் 20 ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் சார்பில் சுற்றுச்சூழல், காலநிலை மற்றும் வனத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (ஆகஸட் 24) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "தமிழ்நாடு அரசு, கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி அன்று தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல (Protected Agricultural Zone - PAZ) சட்டம், 2020ஐ இயற்றியதன் மூலம் காவிரி டெல்டா பகுதியினை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்தது. இச்சட்டத்தின் அடிப்படையில், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகள் ஆகிய டெல்டா பகுதிகளில் புதிதாக எரிபொருள், இயற்கை வாயு, நிலக்கரி மீத்தேன் மற்றும் ஷேல் வாயு போன்றவற்றின் இருப்பு குறித்த ஆராய்ச்சி, மற்றம் அகழ்வுத் தொழில்கள் ஆகியவை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது. மேலும், கடந்த 2023 ஆம் ஆண்டு இத்தடை மயிலாடுதுறை மாவட்டத்துக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
இதற்கிடையில், ஓ.என்.ஜி.சி நிறுவனமானது, இராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் இருப்பு குறித்து ஆய்வு செய்ய விண்ணப்பித்திருந்ததை தொடர்ந்து, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் ONGC நிறுவனத்திற்குக்கு சுற்றுச்சூழல் அனுமதியினை நேரடியாக வழங்கியுள்ள செய்தி தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. இதனை அடுத்து ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியினை உடனே திரும்ப பெறுமாறு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைத்திற்கு தமிழ்நாடு அரசு (Tamil Nadu Government) அறிவுறுத்தியுள்ளது.
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாட்டின் எந்த ஒரு பகுதியிலும், ஹைட்ரோகார்பன் தொடர்பான எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்க முடியாது என்பதே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் (CM MK Stalin) திடமான கொள்கை முடிவாகும். எனவே, தற்போது மட்டுமின்றி எதிர்காலத்திலும் நம் மாநிலத்தின் எந்த ஒரு பகுதியிலும் இத்திட்டங்களைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என திட்ட வட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்" என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் வலியுறுத்தியிருந்தனர்.
அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், "இராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. காவிரி பாசன மாவட்டங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளை பாலைவனமாக மாற்றும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை (Hydrocarbon Projects) அனுமதிக்கக்கூடாது என பாமக வலியுறுத்தி வரும் நிலையில் அரசு அனுமதித்திருப்பது கண்டிக்கத்தக்கது" என தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.
மேலும், அதில், "இராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி, கீழக்கரை, கடலாடி ஆகிய வட்டங்களிலும், சிவகங்கை மாவட்டத்தின் தேவகோட்டை வட்டத்திலும் இந்த சோதனை கிணறுகள் அமைக்கப்பட உள்ளன. இந்த கிணறுகளை அமைக்க அனுமதி கோரி மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதமே ஓ.என்.ஜி.சி நிறுவனம் விண்ணப்பம் செய்திருந்தது. இது குறித்த செய்திகள் வெளியான நிலையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க அனுமதிக்கக் கூடாது என்று பாமக வலியுறுத்தியது.
இது தொடர்பான ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் விண்ணப்பத்தை தள்ளுபடி செய்யும்படி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தை தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தது. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அனுமதிக்கப்படுவதை ஏற்க முடியாது" என குறிப்பிட்டுள்ளது.
ஹைட்ரோகார்பன் திட்டத்தினால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும் என அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதில், "ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அனைத்தும் ஏறக்குறைய 3000 அடி ஆழத்திற்கு அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு கிணறும் ரூ.33.75 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. நீரியல் விரிசல் என்ற இயற்கைக்கு எதிரான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வேதிப்பொருட்களின் கலவையை பூமிக்குள் செலுத்தி, பாறைகளை விலக்கி, அவற்றுக்கு நடுவில் உள்ள மீத்தேன் எரிவாயு எவ்வாறு எடுக்கப்படுமோ, அதேபோல் தான் ஹைட்ரோகார்பன் வளமும் நீரியல் விரிசல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடுக்கப்படும். இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் போது நிலநடுக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும் ஆபத்துகள் உள்ளன. இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஹைட்ரோ கார்பன் வளங்கள் எடுக்கப்பட்டால், இராமநாதபுரம் மாவட்டமே பாலைவனமாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன" என விரிவித்துள்ளார்.
தமிழக அரசு நினைத்திருந்தால் இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என்றும் ஆனால், கிட்டத்தட்ட 20 மாதங்கள் இத்திட்டத்தை கிடப்பில் போட்டு வைத்திருந்த, மக்கள் மனதில் இருந்து இவை குறித்த நினைவுகள் விலகிய பிறகு, இராமநாதபுரம் மாவட்டத்தை பாலைவனமாக்கும் சதித் திட்டத்திற்கு திமுக அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார். இது தமிழக மக்களுக்கு திமுக அரசு செய்துள்ள துரோகம் ஆகும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த சூழலில், தமிழ்நாட்டின் எந்தப் பகுதிகளிலும் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்காது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ