மின் கட்டணத்தை உயர்த்துகிறது தமிழ்நாடு அரசு... அன்புமணி போட்ட திடீர் குண்டு!

Anbumani Vellore Speech: ஜூலை ஒன்றாம் தேதி முதல் 3.5 விழுக்காடு மின் கட்டணம் 4வது முறையாக உயர்த்தப்பட உள்ளது என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 17, 2025, 06:34 PM IST
  • பாலாறு குறித்து பேசும் ஒரே கட்சி பாமக தான் - அன்புமணி
  • மக்கள் விரோத திமுகவை அகற்ற வேண்டும் - அன்புமணி
  • வன்னியர், பட்டியலினத்தவர்களுக்கு திமுக துரோகம் செய்கிறது - அன்புமணி
மின் கட்டணத்தை உயர்த்துகிறது தமிழ்நாடு அரசு... அன்புமணி போட்ட திடீர் குண்டு!

Anbumani Vellore Speech: வேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் இன்று (ஜூன் 17) நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பேசினார். பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தந்த அவருக்கு கிரேன் மூலம் பிரமாண்ட மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. 

பொதுக்குழு கூட்டத்தில், வேலூர் மாநகர சாலைகளை சரி செய்து போக்குவரத்து நெரிசலை போக்க வேண்டும், வேலூர் மாவட்டத்தில் தலைவிரித்தாடும் கஞ்சா நடமாட்டத்தை தடுக்க வேண்டும், அணைக்கட்டு மேலரசம்பட்டு பகுதியில் அணைக்கட்டும் பணியை விரைவுபடுத்த வேண்டும், கே.வி.குப்பம் தொகுதிக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட வேலூர் மாவட்ட நலன் சார்ந்த ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Anbumani Vellore Speech: உரிமைகளை மீட்டெடுக்க நடைபயணம்

பின்னர் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி கூறுகையில், "இன்று நாம் நிறைவேற்றிய தீர்மானத்தை பலமுறை போட்டு அரசுக்கு கொண்டு சென்றோம். ஆனால் தமிழ்நாடு அரசு தூங்கிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. மக்கள் விரோத திமுகவை அகற்ற வேண்டும். நம்மோட கட்சியை இன்னும் பலப்படுத்த வேண்டும். அடித்தட்டு பின்தங்கிய மக்களை மேம்படுத்த எந்த திட்டமும் திமுகவிடம் இல்லை. சமூக நீதியை நடைமுறைபடுத்த தவறியது திமுக.

கிராமங்களில் கிளைகளை புதுப்பித்து உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். ஜூலை 25ஆம் தேதி ஐயா (ராமதாஸ்) பிறந்த நாளில் பசுமை தாயக நாளில் தமிழக மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க நடைபயணம் மேற்கொள்ள உள்ளேன். இந்த உரிமைகளை மீட்டெடுத்தால் தமிழகம் இந்தியாவோடு அல்ல சிங்கப்பூரோடு போட்டி போடும் அளவுக்கு இருக்கும்.

Anbumani Vellore Speech: விளம்பரம் மட்டுமே செய்கிறார்கள்...

முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த கால ராஜா போல், "அமைச்சரே மாதம் மும்மாறி பெய்கிறதா" என கேட்கிறார். அவருக்கு எதுவும் தெரியாது. ஏதோ ஆள் செட் பண்ணி ரோட் ஷா போகிறார். மக்களின் உண்மையான கஷ்டம் தெரிய வேண்டும் என்றால் கிராமத்திற்கு சென்று பெண்கள், விவசாயிகளிடம் கேட்டு பார்க்க வேண்டும்.

கல்லணையில் தண்ணீர் திறப்பது அங்குள்ள பொதுப்பணித்துறை அதிகாரியின் வேலை. அது முதல்வர் வேலை அல்ல. ஏதோ வரலாற்றிலே முதல்முறையாக என புதிது போல் பேசிகிறார்கள். இன்னும் வெள்ளைக்காரன் காலத்திலேயே இருக்கிறார்கள். வெறும் விளம்பரம் மட்டுமே செய்கிறார்கள்.

Anbumani Vellore Speech: டிஎன்பிஎஸ்சியில் சர்ச்சை கேள்விகள்...

சமீபத்தில் அரசு பணிக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்றது. அதில் 62வது கேள்வியாக, வணிக நிறுவனங்கள் முதலீடு செய்ய ஏன் தமிழ்நாட்டை முதல் இடமாக தேர்வு செய்கின்றன என கேட்கப்பட்டுள்ளது. இதுவரை 10 லட்சம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்த போட்டதாக சொல்கிறார்கள். இது நாள் வரை எவ்வளவு முதலீடு செய்துள்ளார்கள் என கேட்டால் பதில் கிடையாது. இதுவரை 50, 60 ஆயிரம் கோடி ரூபாய் தான் செய்துள்ளார்கள்.

126வது கேள்வியில், ரூபாய் சின்னத்தை மாற்றி 'ரூ' போட்டால் வளர்ச்சி வருமா என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதெல்லாம் ஒரு கேள்வியா?. திமுக எதற்காக இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தியது என 121வது கேள்வி, இந்த கேள்விக்கு விடை முதலமைச்சர் ஸ்டாலினுக்கே தெரியாது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தை திமுக நடத்தவில்லை. தமிழக மாணவர்கள் நடத்தியதற்கு ஸ்டிக்கர் ஒட்டு விட்டது.

163வது கேள்வி, அண்ணாதுரை எதற்காக திமுகவில் சேர்ந்தார்? என்பது... காலை உணவு திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என இதெல்லாம் டிஎன்பிஎஸ்சி கேட்க வேண்டிய கேள்வியா....? அண்ணாதுரை என் திமுகவில் இருந்து பிரிந்து வந்தார் என கேட்க வேண்டியதுதானே?.

Anbumani Vellore Speech: பாலாறு பிரச்னை...!

முதலமைச்சர் அமெரிக்க போனது எதற்காக எனக்கு தெரியும்?. வேலூரில் இன்றும் 110 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் கொளுத்துகிறது. அரசு அனுமதி கொடுத்தால் பசுமை தாயகம் மூலம் 10 லட்சம் மரங்களை நடுவோம். அடுத்த பத்து ஆண்டில் 110 டிகிரிக்கு வெயில் இருக்காது, அதனை குறைத்துக் காட்டியிருப்போம். 

பாலாறு குறித்து பேசும் ஒரே கட்சி பாமக தான். இதைப் பற்றி வேறு யாரும் பேச மாட்டார்கள். 1996ஆம் ஆண்டில் பாலாற்றைக்காக வாணியம்பாடியில் இருந்து வாலாஜா வரை மூன்று நாள் சைக்கிள் பயணம் மேற்கொண்டவர் ராமதாஸ். இதுவரை பாலாற்றில் 23 தடுப்பணைகளை கட்டி இருக்க வேண்டும். ஆனால் தற்போது வரை மூன்று தான் கட்டியிருக்கிறார்கள்.

Anbumani Vellore Speech: துரோகம் செய்த திமுக

சித்திரை முழு நிலவு மாநாட்டை பார்த்து திமுக அரண்டு போய், பயந்து போய் உள்ளது. அந்த மாநாட்டில் என்ன என்னமோ நடக்கும் என எதிர்பார்த்தார்கள். அதெல்லாம் அந்த காலம். இட ஒதுக்கீடு வழங்குகிறேன் என ஏமாற்றிய திமுகவிற்கு ஒட்டுமொத்த வன்னியர் சமூகம் வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும். இந்த சமுதாயத்திற்க்கு துரோகம் செய்து வருவது திமுக. ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வருவது இந்த சமுதாயத்தை நம்பித்தான். 23 உறுப்பினர்கள் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள், 21 பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இரண்டு சமூகத்திற்கும் துரோகத்தை செய்து வருகிறது திமுக.

இதுகுறித்து மேடை போடுங்கள்... இரண்டு சமூகத்திற்கு என்ன செய்தீர்கள் என பேச நான் வருகிறேன். நீங்கள் ஆட்சிக்கு வர காரணமான இந்த இரண்டு சமூகத்திற்கு என்ன செய்துள்ளீர்கள். உங்களை சுற்றி இருப்பது வியாபாரிகள் தான். இந்த இரண்டு சமூகத்தை தூக்கி குப்பையில் எரித்துள்ளார்கள். இன்னும் பத்து மாதத்தில் தெரியும், இவற்றையெல்லாம் வெளிச்சம் போட்டு காட்ட போகிறேன். இதனால் தான் திமுக திட்டம் போட்டு சதி செய்தது, மனதுக்குள் நிறைய இருக்கிறது. அதையெல்லாம் வெளியில் சொல்ல முடியாது எல்லாம் சரியாகிவிடும் பார்த்துக் கொள்ளலாம்.

Anbumani Vellore Speech: மின் கட்டணம் உயர உள்ளது

ஜூலை ஒன்றாம் தேதி முதல் 3.5 விழுக்காடு மின் கட்டணம் நான்காவது முறையாக உயர்த்தப்பட உள்ளது. நான்கு முறை மின் கட்டணத்தை உயர்த்திய கொடுங்கோள் ஆட்சி திமுக ஆட்சி. மாம்பழம் விலைச்சல் இருந்தும் இந்த முறை விலையில்லாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆந்திராவில் தமிழக மாங்காய்களை வாங்க மறுக்கிறார்கள். இதபற்றி முதல்வர் கண்டுகெள்ளாமல் ரோட் ஷோ போகிறார். வேலூர் மாநகராட்சி என சொல்லவே அசிங்கமா இருக்கு. நகராட்சி அளவில் கூட இல்லை. ஸ்மார்ட் சிட்டிக்கான ஆயிரம் கோடி பாலாற்றில் போய்விட்டது" என்றார்.

மேலும் படிக்க | ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. வீடு வீடாக விநியோகிக்கும் சேவையை தொடங்கும் தமிழக அரசு

மேலும் படிக்க | இந்த மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

மேலும் படிக்க | மகளிர் உரிமைத் தொகை! யார் யார் விண்ணப்பிக்கலாம்? முக ஸ்டாலின் அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News