)
Tamil Nadu Government : தமிழ்நாடு அரசு விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளிட்டோர் 2 கோடி ரூபாய் வரை கடனுதவி பெற விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது. அனைத்து மாவட்டத்தினரும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலங்களில் இந்த திட்டம் பற்றி கேட்டு கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம். இந்த திட்டம் என்ன?, யாரெல்லாம் பெறலாம், தகுதிகள் என்ன என்பதை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களை வீணாகாமல் கிராம அளவில் ஒன்று சேர்ந்து மதிப்புக்கூட்டி, விவசாயிகளுக்கு இலாபகரமான விலை கிடைப்பதை உறுதி செய்வதற்கும், வேளாண் வளர்ச்சிக்கும் உட்கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மிகவும் அவசியமானதாகும். இதனை வலுப்படுத்த கடந்த 2020 ஆம் ஆண்டில் மத்திய அரசால் சுமார் 1 இலட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. தமிழ்நாட்டிற்கு ரூ.5990 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக 2025-2026 ஆம் வருடத்தில் தமிழ்நாட்டிற்கு 3456 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு 73 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வேளாண் உட்கட்டமைப்புகளை வலுப்படுத்த முன்வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வேளாண் தொழில் முனைவோர்களுக்கு கடன் வசதி செய்து தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி, வேளாண் உட்கட்டமைப்புக்கான நிதியின் கீழ் கடன் வசதித்திட்டம் ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், அறுவடைக்குப் பின்செய் வேளாண்மைக்கான உட்கட்டமைப்புகளுக்கும், சமுதாய வேளாண் அமைப்புக்கும் தேவைப்படும் முதலீடுகளுக்கு நடுத்தர மற்றும் நீண்ட கால கடனுக்கு வட்டி தள்ளுபடி மற்றும் கடனுக்கான உத்தரவாதம் போன்ற வசதிகள் செய்து தரப்படும். இத்திட்டம், 2020-21 முதல் 2032-2033 ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்படும்.
கடன் வசதி பெற தகுதி
இத்திட்டத்தின் கீழ், மின் சந்தையுடன் கூடிய விநியோக தொடர் சேவை, சேமிப்புக்கிடங்குகள், சேமிப்பு கலன்கள் (Silos), சிப்பம் கட்டும் கூடங்கள், ட்ரோன் வாங்குதல் நெல் மற்றும் கரும்பு அறுவடைக்கருவிகள் வாங்குதல், மண்புழு உரம் தயாரித்தல் விளைப்பொருட்களை மதிப்பிடுவதற்கான அமைப்புகள், தரம் பிரிப்பு மற்றும் வகைப்படுத்துவதற்கான இயந்திரங்கள், குளிர்பதன வசதிகள், போக்குவரத்து வசதிகள், முதன்மை பதப்படுத்தும் மையங்கள் மற்றும் பழங்களை அறிவியல் ரீதியாக பழுக்க வைக்கும் அறைகள் போன்ற பல்வேறு அறுவடைக்குப்பின் வேளாண்மைக்கான உட்கட்டமைப்புகள், இயற்கை இடுபொருட்கள் உற்பத்தி, நுண்ணுயிர் உற்பத்தி நிலையங்கள், நவீன மற்றும் துல்லிய பண்ணையத்திற்கான உட்கட்டமைப்புகள். பகுதிக்கேற்ற பயிர் தொகுப்புகளை உருவாக்கி ஏற்றுமதி செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் அரசு மற்றும் தனியார் பங்கேற்புடன் அமைக்கப்படும் உட்கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு சமுதாய வேளாண் கட்டமைப்புகளுக்கு கடன் வசதி பெறமுடியும்.
கடன் வசதியை பெற தகுதியானவர்கள்
மேற்காணும் உட்கட்டமைப்புகளை உருவாக்க முன்வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், கூட்டுறவு விற்பனை சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்கள், தனிப்பட்ட விவசாயிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் உருவாக்கப்படும் கூட்டுப் பொறுப்பு குழு (JLG), பல்வகை கூட்டுறவு சங்கங்கள், வேளாண் தொழில்முனைவோர், புதியதாக தொழில் துவங்க முன்வரும் நிறுவனங்களுக்கும், மத்திய, மாநில அமைப்புகள் அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் முன்மொழியப்படும் அரசு மற்றும் தனியார் பங்கேற்புடன் அமைக்கப்படும் உட்கட்டமைப்புகளுக்கும் கடன் வசதி செய்து தரப்படும்.
வழங்கப்படும் சலுகைகள்
இத்திட்டத்தின் கீழ், அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை பெறும் கடனுக்கு 7 ஆண்டு காலத்திற்கு ஆண்டிற்கு 3 சதவீத வட்டி தள்ளுபடி, சிறு மற்றும் குறு விவசாய நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.2 கோடி கடனை பெறுவதற்கு அரசே கடன் உத்திரவாதம் அளிப்பது போன்ற வசதிகள் செய்து தரப்படும்.
இத்தகைய வேளாண் உட்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் தேவைப்படும் கடன் தொகையை அதிகபட்சமாக ஆண்டுக்கு 9 சதவிகிதத்திற்குள் வழங்கும் வகையில், அகில இந்திய அளவில் 24 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.
அரசு அறிவித்துள்ள இந்த வேளாண் உட்கட்டமைப்புகளுக்கான கடன் வசதியின் மூலம் வேளாண் விளைபொருட்கள் வீணாகாமல், சேமித்து வைத்து நல்ல விலை கிடைக்கும் வகையில் கிராமப்புறங்களில் பல்வேறு உட்கட்டமைப்புகளை உருவாக்க இயலும். இந்த கடன் வசதியை பெற விரும்பும் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள், தனியார் தொழில் முனைவோர்கள் தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மேலாளர்கள், நபார்டு வங்கி மேலாளர்கள் அல்லது வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் போன்ற துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
மேலும் https://agrinfra.dac.gov.in/ என்ற இணைய முகவரியில் விரிவான திட்ட அறிக்கையுடன் தாங்கள் விரும்பும் வங்கி கிளைக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரத்திற்கு ddab.tiruvallur2@gamil.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் அல்லது வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்), திருவள்ளூர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ