)
Tamilnadu Government Unemployment allowance Scheme : தமிழ்நாடு அரசு படித்து வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் பெண்கள், குடும்ப தலைவிகள், இளைஞர்கள் உள்ளிட்டோருக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை வழங்கி வருகிறது. இந்த உதவித் தொகை பெற இப்போது விண்ணப்பிக்கலாம். நாமக்கல், திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்காக இந்த அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. அதில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியினை பதிவு செய்து வேலைவாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கும் பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியினை பதிவு செய்து வேலைவாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கும் பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்படி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 45 வயது மிகாமலும், இதர வகுப்பினர் 40 வயது மிகாமலும் இருத்தல் வேண்டும். தங்களது பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கினை துவக்கியிருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் பயன் பெற தேவையான கல்வித் தகுதியினை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும். மேலும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- மிகாமல் இருத்தல் வேண்டும்.
எவ்வளவு உதவித் தொகை கிடைக்கும்?
பத்தாம் வகுப்பு தோல்வியுற்றோருக்கு ரூ.200/-ம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு ரூ.300/ம், பன்னிரெண்டாம் வகுப்பு / பட்டயப்படிப்பு முடித்தோருக்கு ரூ400/ம்-, பட்டப்படிப்பு முடித்திருக்கு ரூ.600/ம் என ஒவ்வொருமாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும்.
வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை : விண்ணப்பிப்பது எப்படி?
உதவித் தொகை விண்ணப்பத்தினை நேரில் இவ்வலுவலகத்தில் பெற்றோ அல்லது www.tnvelaivaaippu.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வருவாய் ஆய்வாளரிடம் கையொப்பம் பெற்று வேலைவாய்ப்பு அடையாள அட்டை, அனைத்து அசல் சான்றுகள், ஆதார் அட்டை,குடும்ப அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குப்புத்தகம் ஆகியவற்றுடன் அலுவலக வேலைநாளில் விண்ணப்பத்தினை விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்க வேண்டும். இந்த உதவித் தொகை காலாண்டு தோறும் கணக்கீடு செய்து நேரடியாக பயனாளிகளது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை
இத்திட்டத்தில் பயன்பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் தோறும் உதவித் தொகை பெற கல்வித் தகுதியினை பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்திருந்தால் போதுமானது. மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருத்தல் வேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் பதிவு செய்தவர்களுக்கு ரூ.600/- மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்று பதிவு செய்தவர்களுக்கு ரூ.750/-, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்தவர்களுக்கு ரூ.1000/- மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும். வருமான உச்ச வரம்பு கிடையாது. வயது உச்சவரம்பின்றி 10 ஆண்டுகள் வரை மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை பெறலாம்.
தேவையான ஆவணங்கள்
வேலைவாய்ப்பு அடையாள அட்டை, அனைத்து அசல் சான்றுகள், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குப்புத்தகம் ஆகியவற்றுடன் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பத்தினை அலுவலக வேலைநாளில் நாமக்கல், திருச்சி, விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்க வேண்டும். இந்த உதவித் தொகை மாதம் தோறும் கணக்கீடு செய்து நேரடியாக பயனாளிகளது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். மேலும், உதவித் தொகை பெற்றால் வேலைவாய்ப்பு எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது.
வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை : யாருக்கெல்லாம் கிடைக்காது?
தினசரி பள்ளி, கல்லூரி சென்று பயில்பவராக இருத்தல் கூடாது. சுய தொழில் செய்பவராகவோ இருத்தல் கூடாது. அரசிடமிருந்து வேறு எந்த வகையிலாவது உதவித்தொகை பெறுபவராகவோ, ஊதியம் பெறும் பணியிலோ இருத்தல் கூடாது. இதற்கு பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது. ஏற்கனவே இவ்வலுவலகத்தில் உதவித் தொகை விண்ணப்ப படிவம் பெற்று சென்றுள்ள பதிவுதாரர்கள் தங்களது விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ள அரசு திட்டம் என்பதால், ஏற்கனவே முழுமையாக உதவித் தொகை பெற்றுள்ள பயனாளிகள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெறும் மாற்றுத்திறனாளி பயனாளிகள் தொடர்ச்சியாக உதவித் தொகை பெற சுய உறுதிமொழி ஆவணம் ஒவ்வொரு ஆண்டும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஏற்கனவே சுய உறுதிமொழி ஆவணம் அளித்திருப்பின் மீண்டும் கொடுக்க தேவையில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ