TN Home Secretary: தமிழ்நாட்டின் உள்துறை செயலாளர் தீரஜ்குமார் ஐஏஎஸ் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். புதிய உள்துறை செயலாளராக மணிவாசன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

TN Home Secretary Transfer: தமிழ்நாட்டின் உள்துறை செயலாளர் தீரஜ்குமார் ஐஏஎஸ் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். புதிய உள்துறை செயலாளராக மணிவாசன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக தலைமை செயலாளர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் என தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் ஆணையம் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆளுங்கட்சி திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்படும் நிலையில், தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கைகளை எடுப்பதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், மத்தியில் ஆளும் பாஜக தங்களுக்கு ஏற்ற அதிகாரிகளை நியமித்து தேர்தல் களத்தை தங்களுக்கு சாதகமானதாக மாற்றிக்கொள்ள துடிக்கிறது என திமுக கடுமையாக குற்றஞ்சாட்டுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவை 2026 தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கிறது. வரும் மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற இருக்கிறது. தேர்தல் பரப்புரையும் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஏப்ரல் 21ஆம் தேதி அன்று பிரச்சாரம் நிறைவுபெறும். இன்னும் 10 நாள்களே இருக்கிறது. தேர்தல் களமும் விறுவிறுப்படைந்திருக்கிறது.
234 தொகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணியும், அதிமுக தலைமையிலான கூட்டணியும் மோதுகின்றன. 234 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. 233 தொகுதிகளில் தவெக போட்டியிடுகிறது, எடப்பாடி தொகுதியில் வேட்பாளர் நிராகரிக்கப்பட்டிருக்கிறார். நான்கு முனை போட்டி இருப்பதால் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்ற கேள்வியும் அதிகமாகி உள்ளது. ஆளும் திமுக மீண்டும் வெற்றிபெற வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டாலும், தவெக இந்த முறை எந்தளவுக்கு தேர்தல் களத்தில் தாக்கம் செலுத்தும் என்பதையும் யாராலும் கணிக்க முடியவில்லை.
இதனால், அதிமுக தலைமையிலான கூட்டணிக்கும் ஓரளவு வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. அப்படியிருக்க, தேர்தல் களத்தில் அதிகாரிகள், காவல்துறையினரின் செயல்பாடும் முக்கியமானதாக இருக்கும். இந்தச் சூழலில், தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் பல அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்திருக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் மார்ச் 15ஆம் தேதி அன்று அமலுக்கு வந்த நிலையில், உடனடியாக கரூர் மாவட்டத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன.
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஜோஷ் தங்கையா மாற்றப்பட்டு, ஹரிகிரன் பிரசாத் நியமிக்கப்பட்டார். கரூர் மட்டுமின்றி ஈரோடு, நாகப்பட்டினம், விருதுநகர் மாவட்டங்களின் மாவட்ட கண்காணிப்பாளர்களும் மாற்றப்பட்டுள்ளனர். மத்தியில் ஆளும் பாஜகவும், அதிமுகவும் கூட்டணி சேர்ந்திருக்கும் நிலையில், ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாக அவர்கள் புகார் தெரிவிக்கும் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் மாற்றுவதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, தமிழ்நாடு தலைமை செயலாளராக இருந்த முருகானந்தம் மாற்றப்பட்டு, சாய் குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த வெங்கட்ராமனுக்கு பதிலாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டார். லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு, சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டார். சென்னை காவல் ஆணையராக இருந்த அருண் ஐபிஎஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அபின் தினேஷ் மோடக் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டார். இந்த மாற்றப்பட்ட அதிகாரிகள் அனைவரும் தேர்தல் முடியும், தேர்தல் பணிகளில் நியமிக்கப்படக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில், தினந்தினம் அதிகாரிகள் மாற்றப்பட்டு வரும் நிலையில், இன்று உள்துறை செயலர் தீரஜ்குமார் ஐஏஎஸ் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். புதிய உள்துறை செயலாளராக மணிவாசன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தீரஜ்குமார் 1993 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் 2024ஆம் ஆண்டில் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
தற்போது நியமிக்கப்பட்டுள்ள மணிவாசனும், 1993 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இதற்கு முன்னர், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றி வந்தார். மணிவாசன் இன்றே உள்துறை செயலாளராக பொறுப்பேற்பார், இன்று மாலை 5 மணிக்குள் அவர் பொறுப்பேற்பு அறிக்கையை தங்களிடம் சமர்பிக்க வேண்டும் என தலைமை செயலாளருக்கு தேர்தல் ஆணையம் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தீரஜ் குமாரையும் தேர்தல் முடியும்வரை, எவ்வித தேர்தல் பணிகளிலும் ஈடுபடுத்தக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
1. தமிழ்நாட்டின் புதிய உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்?
தமிழகத்தின் புதிய உள்துறை செயலாளராக மணிவாசன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1993ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சை சேர்ந்தவர். இதற்கு முன்பு சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி வந்தார்.
2. தேர்தல் ஆணையம் தமிழகத்தில் முக்கிய அதிகாரிகளை மாற்றுவது ஏன்?
தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சிக்குச் சாதகமாக அதிகாரிகள் செயல்படக்கூடும் என்ற புகார்கள் எழும்போதும், தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடப்பதை உறுதிசெய்யவும் தேர்தல் ஆணையம் இத்தகைய அதிரடி மாற்றங்களை செய்வது வாடிக்கையானது.
3. 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலின் முக்கிய தேதிகள் என்ன?
ஏப்ரல் 21: தேர்தல் பரப்புரை நிறைவடையும்.
ஏப்ரல் 23: தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும்.
மே 4: வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ