)
New Ration Card : தமிழ்நாட்டில் வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் திட்டத்தின் மூலம் வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் சென்று வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இனி எந்தெந்த நாட்களில் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும், புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்களின் நிலை, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்த முக்கிய அப்டேட்டுகளை அமைச்சர் சக்கரபாணி வழங்கியுள்ளார். திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற அவர், 10 உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு, அதில் 5 ஆயிரம் முகாம்கள் முடிவடைந்துவிட்டதாகவும், இன்னும் 5 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட இருப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத்துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, வரும் முன் காப்போம் திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் நோய் வருவதற்கு முன்பாக அவர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய இரத்த பரிசோதனை, இசிஜி, சக்கரை பரிசோதனை ஆகிய பரிசோதனைகள் இம்முகாமில் மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார் என கூறினார்.
மேலும், இத்திட்டத்தின்படி, அனைத்து வகையான மருத்துவக் கருவிகளும், சிறப்பு மருத்துவ நிபுணர்களும் கலந்துகொண்டு, பொதுமக்களை பரிசோதனை செய்து, யாருக்காவது நோய் கண்டறியப்பட்டால் அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்படவுள்ளன என கூறிய அமைச்சர் சக்கரபாணி, மருத்துவமனையில் உள்ள அனைத்து மருத்துவ பரிசோதனைகளையும் இந்த முகாமிலேயே மேற்கொள்ளும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி, தங்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் நடத்தப்படும் இந்த முகாமில் 17 சிறப்பு மருத்துத் துறைகள் உட்பட 45க்கும் மேற்பட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்படவுள்ளது என கூறினார்.
கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் ரூ.5.00 லட்சம் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வழங்கப்படுகிறது. தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை மற்றும் தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினராக சேர வேண்டும். இதன் மூலம் படிக்கின்ற குழந்தைகளுக்கு படிப்பதற்கான உதவித்தொகை, மருத்துவ சிகிச்சைக்கான மேற்கொள்ள பண வசதிகள் வழங்கப்படுகிறது. எனவே, நீங்கள் தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர வேண்டும் என்றும் அமைச்சர் சக்கரபாணி கேட்டுக்கொண்டார்.
இத்திட்டத்தின் மூலம் 70 வயதிற்கு மேல் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் நியாயவிலைக்கடைகளுக்கு வர வேண்டியது இல்லை எனக் கூறிய அமைச்சர் சக்கரபாணி, நியாயவிலைக்கடைகளிலிருந்து அரிசி, பருப்பு, சக்கரை, பாமாயில், கோதுமை ஆகிய பொருட்கள் வீட்டிற்கே கொண்டு வந்து வழங்கப்படும். மாதந்தோறும் வாங்கும் குடிமைப்பொருட்களை இனிமேல் மாதத்தின் இரண்டாவது வாரமான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்களின் இல்லத்திற்கு கொண்டு சென்று வழங்கப்படும் என தெரிவித்தார்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் 1.16 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும், தகுதியான நபர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார். தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 20.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கடந்த 51 மாதங்களில் 3,000 நியாயவிலைக் கடைகள் பிரிக்கப்பட்டு புதியதாக முழுநேரம் மற்றும் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ