)
வேலூர்: தமிழக அரசின் உத்தரவுப்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலாமாக்கள் மற்றும் பணியாளர்கள் புதிய இருசக்கர வாகனம் வாங்குவதற்கான மானியத் தொகை ரூ.25,000-லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. பி.குமார் அலக்ஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ் இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள்/ஆசிரியைகள் உள்ளிட்ட உலாமாக்கள் மற்றும் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த மானியத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு, இருசக்கர வாகனத்தின் மொத்த விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.50,000 (இதில் எது குறைவோ அந்தத் தொகை) மானியமாக வழங்கப்படும்.
முன் அனுமதி அவசியம்: மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலரிடம் விண்ணப்பித்து ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளி இருசக்கர வாகனத்தை வாங்க வேண்டும்.
பணம் செலுத்தும் முறை: பயனாளிகள் தங்களின் சொந்த நிதியில் வாகனத்தை முழுத் தொகையும் செலுத்தி வாங்கியிருந்தால், மானியத் தொகை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கிற்கு ECS முறையில் திரும்ப வழங்கப்படும். ஒருவேளை மானியத் தொகையைப் பெற்ற பின்னர் வாகனம் வாங்குவதாக இருந்தால், மானியத் தொகை நேரடியாகச் சம்பந்தப்பட்ட வாகன விற்பனையாளரின் (Dealer) வங்கிக் கணக்கிற்கு ECS மூலம் செலுத்தப்படும்.
வாரிய உறுப்பினர்: விண்ணப்பதாரர்கள் உலாமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம்: விண்ணப்பிக்கும் நாளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பள்ளிவாசலில் பணியாற்றியிருக்க வேண்டும்.
இருப்பிடம்: தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். இதனை உறுதி செய்ய இருப்பிடச் சான்றிதழ் (Nativity Certificate) சமர்ப்பிக்க வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 60 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
ஓட்டுநர் உரிமம்: விண்ணப்பிக்கும் போது இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கான கற்றுணர்வர் உரிமம் (LLR) அல்லது ஓட்டுநர் உரிமம் (Driving License) பெற்றிருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் இருசக்கர வாகனம் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய Gearless / Auto Gear மற்றும் 125CC திறனுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
வாகனம், மோட்டார் வாகன விதிமுறைச் சட்டம் 1988-ன்படி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
வாகனம் 01.01.2020-க்கு பிறகு தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் மானியத்தில் பெற்ற வாகனத்தை குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரை விற்பனை செய்யவோ அல்லது வேறு நபருக்கு மாற்றவோ உரிமை கிடையாது.
ஆதார் அட்டை நகல், வயதுச் சான்றிதழ், புகைப்படங்கள், இருப்பிடச் சான்றிதழ் (Nativity Certificate), ஓட்டுநர் உரிமம் (Driving License) / LLR,
வங்கிக் கணக்கு எண் மற்றும் IFSC குறியீடு தெளிவாகக் கொண்ட வங்கிப் புத்தகத்தின் முதல் பக்க நகல்
சம்பந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வக்ஃப் வாரியத்தில் பணிபுரிகிறார் என்பதற்கான சான்று பெற்று, உதவி வக்ஃப் வாரியக் கண்காணிப்பாளர் மேலொப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
வாகனம் வாங்குவதற்கான விலைப்பட்டியல் (Quotation) / விலைப்புள்ளி
உலாமாக்கள் (ம) பணியாளர்கள் நல வாரிய அடையாள அட்டை நகல்
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான உலாமாக்கள் மற்றும் பணியாளர்கள் இதற்கான விண்ணப்பப் படிவத்தினை வேலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கும் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணைத்து, வேலூர் மாவட்ட ஆட்சியரக முகவரியில் 30.06.2026-ஆம் தேதிக்குள் சமர்ப்பித்து இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.