)
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, ஆகஸ்ட் 21 ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முன்னதாக ஆகஸ்ட் 25ம் தேதி நடைபெற இருந்த நிலையில், சில காரணங்களால் முன்கூட்டியே நடைபெற உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படும் இந்த மாபெரும் நிகழ்வில், பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் அனுமதி இல்லை என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது.
மாநாடு ஏற்பாடுகள்
2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய ஒரு முக்கிய படியாக இந்த மாநாடு பார்க்கப்படுகிறது. மதுரை வளையங்குளம் பகுதியில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டிற்காக, பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தொண்டர்களை நேரில் சந்திக்கும் வகையில், கட்சி தலைவர் விஜய் நடந்து செல்வதற்காக 800 அடி நீளத்திற்கு ஒரு சிறப்பு நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 200 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்ட மேடை தெற்கு திசை பார்த்து அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மாநாட்டில் சுமார் 1,20,000 ஆண்களும், 25,000 பெண்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாட்டுக்கு வரும் தொண்டர்களின் வசதிக்காக, 100க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள், 400 தற்காலிக கழிப்பறைகள் மற்றும் உள்ளேயும் வெளியேயும் செல்வதற்கு வசதியாக 18 வழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு நடவடிக்கையாக, மாநாட்டு திடல் முழுவதும் தேவைக்கேற்ப சிசிடிவி கேமராக்கள், 450 ஒலிபெருக்கிகள் மற்றும் 20,000 மின்விளக்குகள் பொருத்தப்பட உள்ளன. மேலும், தனியார் பாதுகாவலர்கள் மற்றும் தன்னார்வலர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவசர மருத்துவ உதவிக்காக, மருத்துவ குழுக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகளை ஏற்பாடு செய்யுமாறு சுகாதார துறையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் ஏன்?
மாபெரும் அளவில் மக்கள் கூடும் நிகழ்வு என்பதால், கூட்ட நெரிசலில் ஏற்படும் தேவையற்ற அசம்பாவிதங்களை தவிர்க்கவே இந்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மாநாட்டில் கலந்துகொள்ளும் தொண்டர்களுக்கு பாஸ் எதுவும் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில், சிறப்பு விருந்தினர்கள் யாரும் இன்றி, தலைவர் விஜய் மட்டுமே உரையாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் ஏற்பட்ட சிறு சிறு தவறுகளை கருத்தில் கொண்டு இந்த முறை மிகவும் பாதுகாப்பான முறையில் மாநாடை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கடந்த முறை மாநாட்டிற்கு வந்தவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை இருந்தது கருத்தில் கொண்டு இந்த முறை எங்கு இருந்தாலும் தண்ணீர் கிடைக்கும் வகையில் தற்காலிக பைப்புகளும் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது மதுரையில் மாநாடு நடைபெற உள்ள இந்த இடத்தில் இதுவரை எந்த ஒரு அரசியல நிகழ்வுகளோ, தனியார் நிகழ்ச்சியோ நடத்தப்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ