)
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தனது இரண்டாம் கட்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஆளும் திமுக மற்றும் மத்திய பாஜக அரசுகளை கடுமையாகச் விமர்சித்து பேசியுள்ளார். குறிப்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து அவர் எழுப்பிய நேரடி கேள்வி, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம், புத்தூர் ரவுண்டானா அண்ணா சிலை சந்திப்பில், மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் தனது பிரச்சாரத்தை தொடங்கிய விஜய், "என்றும் மீனவ நண்பனாக இருக்கிற விஜய்யின் அன்பு வணக்கம்" என்று கூறி, தனது உரையை தொடங்கினார். அவர் பேசியதாவது, "எந்த பக்கம் திரும்பினாலும் உழைக்கும் மக்கள் இருக்கிற ஊர் நாகப்பட்டினம். மதவேறுபாடு இல்லாத, மதச்சார்பற்ற மக்கள் வாழும் மண் இது. மீன் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் இருந்தாலும், குடிசை பகுதிகள் அதிகம் இருக்கும் ஊராகவும் நாகப்பட்டினம் இருக்கிறது. இலங்கை கடற்படையால் நமது மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும், அதற்கான தீர்வு குறித்தும் மதுரை மாநாட்டிலேயே நான் பேசியிருந்தேன். மீனவர்களுக்காக குரல் கொடுப்பதும், அவர்களோடு நிற்பதும் நமது உரிமை மற்றும் கடமை," என்றார்.
தொடர்ந்து பேசிய விஜய் ஆளும் அரசுகளைக் கடுமையாக விமர்சித்தார், "மீனவர்கள் படும் கஷ்டத்தை பார்த்து, வெறும் கடிதம் எழுதிவிட்டு அமைதியாக போவதற்கு, நாம் ஒன்றும் கபட நாடக திமுக அரசு கிடையாது. மற்ற மீனவர்கள் என்றால் இந்திய மீனவர்கள், நமது மீனவர்கள் என்றால் தமிழ்நாட்டு மீனவர்கள் என்று பிரித்து பார்த்து பேசுவதற்கு, நாம் ஒன்றும் பாசிச பாஜக அரசும் கிடையாது. நிரந்தரத் தீர்வு காண்பதுதான் நமது இலக்கு" என்று பேசியுள்ளார்.
"ஒவ்வொரு முறையும் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுவிட்டு வரும்போதெல்லாம், இத்தனை கோடி முதலீடு என்று முதலமைச்சர் சிரித்துக்கொண்டே சொல்வாரே! சி.எம். சார், மனதை தொட்டு சொல்லுங்கள்... அது வெளிநாட்டு முதலீடா? அல்லது வெளிநாட்டில் முதலீடா? ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் முதலீடா? இல்லை உங்கள் குடும்பத்தின் முதலீடு வெளிநாட்டுக்கு செல்கிறதா? விஜய்யின் இந்தக் காட்டமான கேள்வி, கூட்டத்தில் இருந்தவர்கள் மத்தியில் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது.
மேலும் தனது மக்கள் சந்திப்பிற்கு கொடுக்கப்படும் காவல்துறை நிபந்தனைகளை பற்றியும் விஜய் பேசியுள்ளார். "வாகனத்தில் கைகட்டி உட்கார வேண்டும், கையசைக்க கூடாது, அங்கு பேச கூடாது, இங்கு பேச கூடாது என்று கடுமையான விதிமுறைகளை விதிக்கின்றனர். இனி அப்படி செய்தால் நேரடியாக மக்களிடம் உத்தரவு கேட்டு வந்து சந்திப்பேன்" என்று விஜய் தெரிவித்துள்ளார். திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ள விஜய்யின் இந்த பேச்சு, அவரது அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ