)
Tamizhisai Soundararajan: பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் இல்லத்தில், பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி இன்று (ஜூன் 16) ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக்குப்பின் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
Tamizhisai Soundararajan: திமுக கூட்டணி மாற வாய்ப்புள்ளது
அப்போது பேசிய அவர், "புதிய மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கீழ் புதிய நிர்வாகம் வர இருக்கிறது. அது தொடர்பாக தான் சுதாகர் ரெட்டியுடன் ஆலோசனை மேற்கொண்டோம். தலைவர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொள்வது இயல்புதான். திமுக கூட்டணி உறுதியாக உள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் திமுக கூட்டணி உதிர்ந்து போகக்கூடிய வாய்ப்புகள் தான் அதிகமாக உள்ளது.
ஆ. ராசா, அமித்ஷாவை விவாதத்திற்கு அழைத்தார், ஆனால் இப்போது திமுகவினர் கூட்டணி கட்சியினரோடு விவாதிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. கூட்டணி கட்சித் தலைவர்கள் திமுகவை நோக்கி கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் திமுகவை நோக்கி கேள்வி எழுப்பியதில் எந்த தவறும் இல்லை. திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எனவே திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட்டணியில் மாற வாய்ப்பு உள்ளது.
Tamizhisai Soundararajan: 'அண்ணாமலை கூறியது சொந்த கருத்து'
அதிமுக பாஜக பலமான கூட்டணி தான். அதனால்தான் கூட்டணி அமைந்த நாள் முதலிருந்து விமர்சனம் செய்ய தொடங்கி விட்டார்கள். கட்சியில் கூட்டணி தொடர்பாக என்ன நிலைப்பாடு என அமித்ஷா கூறிவிட்டார். அதை மாநில தலைவரும் கூறிவிட்டார்.
அண்ணாமலை கூறியது தனது சொந்த கருத்து என அவரே கூறிவிட்டார். எனவே அது அவருடைய சொந்த கருத்து. கூட்டணி குறித்து மாநில தலைவர் கூறும் கருத்து மட்டும் தான் அதிகாரப்பூர்வ கருத்து. அண்ணாமலை கூறியதால் கூட்டணி விரிசல் என்பதெல்லாம் ஒன்றுமில்லை. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டி போடும், அதன் தலைமையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்பார். தனிப்பட்ட நபர்களின் கருத்துக்கள் விமர்சனம் செய்ய நான் இங்கு இல்லை, கட்சியின் கருத்தை நான் வழிமொழிகிறேன்" என தெரிவித்தார்.
Sudhakar Reddy: பிரதமர் மோடியின் 11 ஆண்டுகால ஆட்சி!
தொடர்ந்து பேசிய சுதாகர் ரெட்டி, "பாஜகவின் 11 ஆண்டு கால சாதனைகளை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கொண்டு செல்லும் வகையில் பல நிகழ்வுகளை நடத்தி வருகிறோம். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 11 ஆண்டுகளில் பல சாதனைகளை செய்துள்ளது. 2014ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவின் பொருளாதாரம் பல வகைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் 25 ஆயிரம் கோடி ஏழை மக்கள் பல திட்டங்கள் மூலம் வளர்ச்சி அடைந்துள்ளார்கள்.
உலக நாடுகள் இந்தியாவை எடுத்துக்காட்டாக வைத்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். எந்தவித ஊழலும் இல்லாமல் சிறப்பான ஆட்சியை 11 ஆண்டு காலமாக பாஜக இந்திய மக்களுக்கு வழங்கி வருகிறது. வேளாண்மை, தொழில்நுட்பம், உற்பத்தி என அனைத்து துறைகளிலும் இந்தியா பன்மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. பிரதமர் மோடியின் 11 ஆண்டுகால ஆட்சி இந்தியாவின் பொற்கால ஆட்சி. தமிழ்நாட்டிலும் பல வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி வழங்கி உள்ளார். ரயில் நிலையங்கள், ரயில் பெட்டிகள், என ரயில்வே துறையில் தமிழ்நாட்டில் சிறப்பாக விளங்குகிறது. மத்திய அரசு பல லட்சம் கோடிகளை நிதியாக தமிழக அரசுக்கு நிதியாக வழங்கி உள்ளது.
Sudhakar Reddy: திமுகவுடன் விவாதம் நடத்த தயார்
தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு வாக்கு பெற வேண்டும் என்பதற்காக தவறான தகவல்களை மக்களுக்கு அளித்து வருகிறார்கள். வாக்கு அரசியலை தமிழக அரசு மக்கள் மத்தியில் செயல்படுத்தி வருகிறது. இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவசர நிலையை பிரகடனப்படுத்தி 50 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது, அந்த நாளை நாங்கள் கருப்பு தினமாக அனுசரித்து வருகிறோம்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் 2026 தேர்தலை சந்தித்து வெற்றி பெறும். இன்னும் பல கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் விரைவில் இணைவார்கள். 2021 தேர்தலில் திமுக அரசு அளித்த 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் 200 வாக்குறுதிகளை கூட முழுமையாக நிறைவேற்ற வில்லை. திமுக அரசுக்கு சவால் விடுகிறேன், திமுக அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை, இதுதொடர்பாக திமுகவினரோடு விவாதம் செய்ய தயாராக இருக்கிறேன்.
தமிழ்நாட்டில் அனைத்து துறைகளிலும் பல கோடி ஊழல்கள் நடந்துள்ளது, சமீபத்தில் டாஸ்மாக் துறையில் பல கோடி ஊழல் நடந்துள்ளது. ஊழல், கட்டப்பஞ்சாயத்து இதுதான் திமுக ஆட்சியில் நடைபெறுகிறது, இதுதான் திராவிட மாடல் அரசா?
Sudhakar Reddy: இது நியாயமா...?
முருகப் பக்தர்களின் மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது, ஆனால் அதற்கு 52 கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது, இது நியாயமா?. தமிழகத்தில் பாஜகவின் திட்டங்கள் எப்படி செயல்படுகிறது என்பதை கண்காணிக்கவே இன்று வந்துள்ளேன். தேசிய தலைமை ஏற்கனவே கூட்டணி குறித்து தெளிவாக விளக்கியுள்ளது. யார் வேண்டுமானால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து கொள்ளலாம்.
அதிமுக தலைமையில் தான் கூட்டணி. அண்ணாமலை கருத்து பற்றி தெரியவில்லை. அதைக் கேட்டுவிட்டு கூறுகிறேன். 2026 இல் அதிமுக பாஜக கூட்டணி தான் உறுதி. பாஜக தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் அனைத்து பாஜகவினரின் எண்ணம் வருங்காலங்களில் அது நடக்கும். கூட்டணி குறித்து பேசுவதற்கான நேரம் வரும்போது மற்ற கட்சிகளிடம் பேசுவோம். அனைத்து கட்சிகளிடமும் தொடர்பில் தான் உள்ளோம்" என தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ