)
TASMAC : டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் பாட்டிலை திரும்ப கொடுத்தால் 10 ரூபாய் கொடுக்கும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை விளைநிலங்கள், பொது இடங்கள் மற்றும் சாலைகளில் காலியாக விட்டுச்செல்வதை தடுக்கும் பொருட்டு வாடிக்கையாளர்கள் வாங்கி சென்று அருந்தியபின் காலி மதுபான பாட்டில்களை அதே சில்லறை விற்பனை கடைகளில் திரும்ப பெற்றுக் கொள்ளும் திட்டம் மாண்பமை சென்னை உயர்நீதி மன்ற ஆணையின்படி 25.11.2025 முதல் அமலுக்கு வருகிறது என தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் கடைகளில் முக்கிய மாற்றம்
இந்த நடைமுறை ஏற்கனவே 19.01.2024 முதல் திருவாரூர், நாகப்பட்டினம், தேனி, கன்னியாகுமரி, தர்மபுரி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நடைமுறையில் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபான பாட்டில்களை அடையாளம் காணும் வகையில் மதுபாட்டில்கள் மீது கடை எண் குறிப்பிட்டு ரூ.10/- என அச்சிடப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மதுபாட்டில்களையும் விற்பனை செய்யும் போது அதிகபட்ச சில்லறை விற்பனை விலையுடன் சேர்த்து கூடுதலாக ரூ.10/- வாடிக்கையாளரிடம் இருந்து பெறப்படும். அவ்வாறு வாடிக்கையாளர்கள் மதுபான கடைகளிலிருந்து வாங்கும் மதுபாட்டில்களை அதில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரோடு அதே மதுபான கடையில் காலியாக திரும்ப ஒப்படைக்கும் போது ஏற்கனவே பெறப்பட்ட ரூ.10/- திரும்ப வாடிக்கையாளருக்கு வழங்கப்படும்.
டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்ப்பு
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலை திரும்ப பெறும் நடைமுறை பணியாளர்களுக்கு கூடுதல் பணிச்சுமையை கொடுக்கும் எனக்கூறி திருச்சி டாஸ்மாக் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நடைமுறையை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். சுற்றுலா தலங்களில் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க கொண்டுவரப்பட்ட இந்த திட்டம், திடீரென அறிவிக்கப்பட்டு, போதிய வசதிகள் இன்றி செயல்படுத்தப்படுவதாகவும் டாஸ்மாக் ஊழியர்கள் குற்றம்சாட்டினர் .ஊட்டி கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில், அங்கெல்லாம் Poc மற்றும் ஸ்கேனர்கள் பயன்படுத்துவதில்லை, அதை நாங்கள் பயன்படுத்துகிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
பாட்டிலை திரும்ப பெற மாட்டோம்
ஏற்கனவே டாஸ்மாக் கடைகளில் போதுமான பணி ஆட்கள் இல்லை, ஆட்கள் பற்றாக்குறையும், போதுமான இடவசதியும் இல்லை என தெரிவித்துள்ள டாஸ்மாக் ஊழியர்கள் பாட்டிலை திரும்ப பெற மாட்டோம் என அறிவித்துள்ளனர்.இது டாஸ்மாக் பணியாளர்களுக்கு கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்தும் திட்டம் என்றும் திருச்சி டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து ஆலோசனை நடத்தி அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்க உள்ளதாகவும், கூறியுள்ளனர்.
ஈரோட்டில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
இதனிடையே ஈரோட்டில் சோலர் மற்றும் அதனை சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 26 ஆம் தேதி புதன்கிழமை ஈரோடு வரவுள்ளதையொட்டி, அரசு டாஸ்மாக் மற்றும் எப்.எல்.2 தனியார் மது கடைகளில் நாளை மது விற்பனை நடக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. சோலார் பாலதண்டாயுதபாணி நகர், அசோகபுரம், ஆணைக்கல்பாளையம், பூந்துறை, அரச்சலுார், வடபழனி பகுதி டாஸ்மாக் கடைகள் முதலமைச்சர் விழாக்கள் முடியும் வரை செயல்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ