Tasmac Holiday: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: சட்டம் ஒழுங்கை பாதுகாக்க சென்னையில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூடத் தேர்தல் ஆணையம் உத்தரவு! முழு விவரம் இதோ!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 வாக்குப்பதிவு நாளை மறுநாள் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வாக்குப்பதிவு நியாயமாகவும் அமைதியாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்களை 4 நாட்களுக்கு மூடத் தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாவட்டத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார். சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய பாதுகாப்பு படையினர், மாநில காவல் துறையினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் என பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் விநியோகிக்கப்படுவதை தடுக்கும் வகையில் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு, தேர்தல் பறக்கும் படையினரின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாகவே, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் விதமாக மது விற்பனைக்கும் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைக்கப்பட்ட பார்கள் மற்றும் வெளிநாட்டு மதுபான விற்பனையகங்கள் ஆகிய அனைத்தும் குறிப்பிட்ட நான்கு நாட்களுக்கு முழுமையாக மூடப்பட்டிருக்கும்:
1. ஏப்ரல் 21, 2026 (செவ்வாய்க்கிழமை) - வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள்
2. ஏப்ரல் 22, 2026 (புதன்கிழமை) - வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள்
3. ஏப்ரல் 23, 2026 (வியாழக்கிழமை) - வாக்குப்பதிவு நடைபெறும் நாள்
4. மே 04, 2026 (திங்கள்கிழமை) - வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள்
இந்த மதுவிலக்கு உத்தரவானது, ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவு வரை தொடர்ச்சியாக அமலில் இருக்கும். மீண்டும் வாக்கு எண்ணும் தினமான மே 4ம் தேதியன்றும் மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. FL-6 உரிமங்கள் தவிர, FL-2 முதல் FL-11 வரையிலான உரிமம் பெற்ற அனைத்து இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபான விற்பனையகங்கள், உரிமம் பெற்ற பார்கள் மற்றும் கிளப்கள் இந்த தடையை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்ட இந்த உலர் நாட்களில் மது விற்பனை முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி கூறுகையில், "தேர்தல் நடத்தை விதிகளை மீறி ரகசியமாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ மதுபானங்களை பதுக்கி வைப்பது, விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தடையை மீற நினைப்பவர்கள் மீது காவல் துறை ஈவிரக்கமின்றி நடவடிக்கை எடுக்கும்," என மிக கடுமையாக எச்சரித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கை பேணிப் பாதுகாக்கவும், வாக்காளர்களுக்கு மதுபானங்களை இலவசமாக வழங்கி வாக்குகளை கவரும் செயல்களை தடுக்கவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததில் இருந்து இதுவரை பறக்கும் படையினரால் 727 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம், விலைமதிப்பற்ற பொருட்கள் மற்றும் இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் தேர்தல் ஆணையத்தின் cVIGIL மொபைல் செயலி மூலமாக இதுவரை 3,791 புகார்களை அளித்துள்ளதாகவும், அதில் 727 புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதே வேளையில், தேர்தலை அமைதியாக நடத்த அமலாக்கத்துறையினரும், காவல் துறையினரும் முழு வீச்சில் தயார் நிலையில் உள்ளனர். டாஸ்மாக் கடைகளுக்கு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது மது பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது?
பதில்: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்கு மொத்தம் 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும்?
பதில்: ஏப்ரல் 21, 2026 (செவ்வாய்க்கிழமை), ஏப்ரல் 22, 2026 (புதன்கிழமை), வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23, 2026 (வியாழக்கிழமை) மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே 4, 2026 (திங்கட்கிழமை) ஆகிய 4 தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும்.
மதுபான கடைகள் மூடப்படும் நேரக் கட்டுப்பாடு என்ன?
பதில்: ஏப்ரல் 21-ஆம் தேதி காலை 10 மணி முதல் ஏப்ரல் 23-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும் தொடர்ச்சியாகக் கடைகள் மூடப்பட்டிருக்கும். பின்னர் மே 4-ஆம் தேதி முழுவதும் கடைகள் இயங்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!